Monday, April 29, 2019

முல்லைப்பாட்டு

காவிரிபூம்பட்டினத்தில் உள்ள தங்க வணிகம் செய்த ஒரு வணிகரின் மகனான நப்பூதனார் என்பவர் இந்த முல்லைப்பாட்டை பாடியுள்ளார்.

இந்த நூல் முல்லை நிலத்திற்குரியதான இருத்தல் என்னும் ஒழுக்கத்தைப் பற்றி பாடப்பட்டுள்ளது. யுத்தம் செய்வதற்காகத் தலைவன் சென்று விடுகிறான்.


அவன் திரும்பி வருவதாக சொன்ன கார்காலப் பொழுதும் வந்துவிடுகிறது. அவன் வரவை எதிர் பார்த்து அவன் தாமதிப்பதால் ஏற்படும் துன்பத் திற்காகத் தலைவி ஆற்றியிருப்பதை இந்தச் செய்யுள் கூறுகிறது.

பத்துப்பாட்டு இலக்கிய வகையில் மிகவும் சிறிய நூல் முல்லைப் பாட்டாகும். இந்த நூலில் மொத்தமே 103 அடிகளே உள்ளது.

அகத்திணை ஒழுக்கம் சார்ந்தது முல்லை. இருப்பினும் அதனுடைய தொடர்பு கொண்ட புற ஒழுக்கமான வஞ்சித்திணையைப் பற்றியும் இந்த நூலில் சில இடங்களில் கூறப்படுகிறது.

முல்லைத் திணை சங்க இலக்கியம் முதல் சங்கம் மருவிய இலக்கியங்களிலும் பாடப்பட்டுள்ளது. இருப்பினும் முல்லைப்பாட்டில் மிகவும் நுட்பமான கருத்துக்கள் காணப்படுகிறது.

தலைவன் திரும்பி வருவதாகக் கூறிய கார் பருவம் வந்து விட்டது. தலைவன் வரக் கூடிய தேர் வந்து சேரவில்லை. எனவே, அவனை பிரிந்த தலைவி பிரிவுத் துயரை தாங்க இயலாமல் வருத்தப்படுகிறாள்.

அவள் வருத்தத்தைப் போக்க வயது முதிர்ந்த பெண்டீர்கள் ஆயர்கள் இருக்கும் தெருவுக்குச் செல்கின்றார்கள். அங்கு நற்சொற்களைக் கேட்டு திரும்பி வந்து தலைவியிடம் நாங்கள் உன் பொருட்டு நல்ல வார்த்தைகளைக் கேட்டோம். அவர்கள் சொன்ன வார்த்தைகள்படி உன் கணவன் திரும்பி வருவான் என்பது சத்தியமே.

ஆகவே, அதுவரை பொறுத்துக் கொண்டிருப் பாயாக என்று தலைவியிடம் கூறுகிறார்கள். அது கேட்டும் அவள் தனக்கு வந்த வருத்தம் தீராமல் மிகவும் சோர்வுற்று இருந்தாள்.

அவளைப் பிரிந்து சென்ற தலைவன் மிகப் பெரிய காட்டின் இடையே உள்ள யுத்த களத்தில் பாசறை அமைத்து அதில் தங்கியுள்ளான்.

அங்கு பெண்கள் விளக்கேற்றி வைத்துக்
கொண்டு திரிகின்றனர். அவன் நள்ளிரவு நேரத்தில் உறங்கவில்லை. நீண்ட நேரம் தலைவியை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கின்றான்.

முதல் நாளில் போர்க்களத்தில் காயம்பட்டிருந்த யானைகளையும் இன்னுயிர் நீத்த வீரர்களையும் நினைத்து தலைவன் வேதனை அடைந்திருக்கின்றான்.

இந்த நிலையில், தலைவனை நினைத்து ஏங்கும் தலைவி தன் கைகளில் அணிந்த வளையல்கள் நெகிழ்ந்து செல்லும்படி மெலிந்து போய் விட்டாள். அவளுக்கு படுத்தாலும் உறக்கம் இல்லை. எந்த நேரமும் அவள் காதுகளில் தலைவருடைய தேர் செல்லும் ஓசையே கேட்கின்றது.

இந்த நிலையில், தலைவன் தான் சென்ற கடமையை முடித்து திரும்பி வந்து கொண்டிருக்கின்றான் என்ற தகவல் தலைவிக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது என்று மிகவும் நுட்பமாக சொல்லி முல்லைப் பாட்டு நிறைவு பெறுகிறது.

பத்துப்பாட்டு வகையில் மிகவும் சிறியதாக இருந்தாலும் கருத்தாலும், வண்ணத்தாலும் இது மிகவும் சிறந்ததாகவே கருதப்படுகிறது.

குறிப்பாக கருத்தாழம் மிகுந்தது முல்லைப் பாட்டாகும். இந்த நூலில் முதல், கரு, உரிப்பொருட்கள் மிகச் சிறப்புடன் வர்ணிக்கப் படுகிறது.

அன்றை காலக்கட்டத்தில் மன்னர்கள் தங்களுடைய பள்ளி அறைக்கு மிலேச்சியர்களையும் ஊளமைகளையுமே காவலர்களாக வைத்திருந்தனர்.

யானைகளை வடமொழி சொற்களால் பழக்கினார்கள். காலத்தை கணக்கிட நாழிகை வட்டிலையும் கையாண்டனர் என்ற செய்தி முல்லைப்பாட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

பொதுவாக அகத்திணை பாடல்களில் தலைவன் பெயர் சொல்லக் கூடாது என்பது பொதுவான விதி. இந்த நூலிலும் சொல்லப்படவில்லை என்றாலும் இந்த நூல் தலையாளம் காணத்து செறுவென்ற நெடுஞ்செழியனை தலைவனாக கொண்டிருக்கலாம் என்று சொல்லும்படி உள்ளது.

சங்கு சக்கரம் ஏந்தியவரும் திருமகளை மார்பில் கொண்டவனுமான திருமாலைப் போல மேகம் கடல் நீரைக் குடித்து மலைகளில் அமர்ந்து பெருமழையை மாலை பொழுதில் பொழிந்தது.

இந்தப் பாடல் முல்லைத் திணையைப் பற்றியது. அதனால்தான் அந்த நிலத்திற்குரிய தெய்வமான மாயோனை குறித்து உவமை கூறப்பட்டுள்ளது. கார் காலமும், மாலைப் பொழுதும் முல்லை நிலத்திற்குரிய முதற்பொருளாகும்.

ஆவணி மாதமும் புரட்டாசி மாதமும் கார் காலமாகும். வேனிற்காலத்தில் தலைவன் தலைவியை பிரிந்து போர் செய்ய சென்றான். கார் காலத்தில் திரும்பி வருவதாகவும் கூறினான். எனவே, அவன் தேர் வரும் ஓசையை எதிர்பார்த்து இருநதாள். 

பிரிந்து சென்ற பகைவனின் நகரத்திற்கு காவலாக அமைந்துள்ள காட்டில் உள்ள இடவஞ் செடிகளையும் தூறுகளையும் வெட்டி அரளியும் அழித்தான்.

முள்ளை மதிலாக அமைத்து பாசறை கட்டினான். அந்த பாசறையில் ஒழுங்காக அமைந்துள்ள தெருவில் நான்கு சந்துகளும் கூடும் முற்றத்தில் யானை ஒன்று காவலுக்கு நிறுத்தப் பட்டிருந்தது.

யானைப்பாகர்கள் யானையை கோட்டியால் குத்தியும் வட சொற்களைப் பேசி அதட்டியும் கவளத்தை ஊட்டினர். காட்டில் மன்னர்கள் அமைக்கும் பாசறையில் தன்னுடைய படை முழுவதையும் தங்கியிருக்கும் பரந்த இடமாக இருக்கும்.

அந்தப் பாசறையில் பல்வகையான படைகளும் தங்கியிருக்கும். அந்த அரண்களுக்கு இடையில் தலைவனுக்கு என்று தனியாக இருப்பிடம் அமைந்துள்ளது.

அங்கு பயன்படாத வில் நிலத்தை சுற்றிலும் ஊன்றப்பட்டிருக்கும். விற்களை கயிற்றால் தொடுத்து வளைத்துக் கட்டுவார்கள். எறி கோல்களும் கேடயங்களும் காவலாக அமைக்கப்பட்டிருக்கும்.

பல்வேறு வண்ணம் கொண்ட திரைகளைக் கொண்டு கூடாரங்களை அமைத்திருப்பார்கள்.

கூடாரத்தின் வாசலில் இடுப்பில் உடைவாளைக் கட்டிய பெண்கள் பாவை விளக்குகளைத் தூண்டி எரிய விட்டுக்கொண்டிருப்பர்.

மெய்க் காவலர்கள் அந்த பாசறையில் சுற்றியும் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடுஜாமத்தில் நேரம் அறிந்து நாழிகை வட்டிலில் சென்று பார்த்து நேரம் இதுவென்று மன்னனுக்கு உரைக்கின்றனர்.

பள்ளியறையில் இருக்கும் மன்னர் ஒரு கையில் தலையை வைத்தும் மற்றொரு கையை முடியுடன் சேர்த்தும் மறுநாள் யுத்தம் செய்வதற்கு வேண்டிய முறைகளை நினைத்து உறங்காமல் இருக்கின்றான்.

இந்த பாசறையை கடமை உணர்வும் அனுபவமும் வாய்ந்த மெய்க்காவலர்கள் காவலுக்கு என்று அமர்த்தப்பட்டிருப்பர். யுத்த களத்தில் இறந்து போன வீரர்களையும் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் குதிரைகளையும் நினைத்து மன்னன் உறங்காமல் இருப்பான்.

பகல் நேரத்தில் யுத்தம் செய்த மன்னன், இரவு நேரத்தில் கூடாரத்தில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான். அவன் உறங்க வேண்டும் என்பதை நினைத்து நாழிகை கணக்கர்கள் பொழுதை இவ்வாறிற்று என்று கூறுவர்.

மன்னன் உறக்கத்திற்குத் தொல்லைகள்
இல்லாதவாறு ஊமைகள் காவல் இருப்பர். கார் காலம் தொடங்கியும் தலைவன் வராததால் தலைவி ஏழெடுக்கு மாளிகையில் நின்று கொண்டு பாவை விளக்கின் ஒளியையும் மழை நீர் ஒளியையும் பார்த்தும் கேட்டும் அவன் விரைவில் வருவான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே படுக்கையில் படுத்திருப்பாள்.

கழன்ற வளையல்கள் கீழே விழாமல் தடுத்தும் மயங்கியும் பெருமூச்சு விட்டும் அம்பு தைக்கப்பட்ட‌மயில் போல நடுங்கியும் துன்பம் அடைந்தாள்.

அவள் கொண்ட துன்பத்தால் அணிந்திருந்த‌ அணிகலன்கள் நெகிழ்ந்தன. இந்த நிலையில், பாவை விளக்கு சுடர் விட்டு எரிய பொன்னாலும் மணியாலும் அலங்கரிக்கப்பட்ட ஏழெடுக்கு மாளிகையில் கூடல் வாயிலிலிருந்து மழை நீர் அருவி போல விழுவதால் பல ஓசைகள் கேட்டுக்கொண்டே இருந்தன.

மன்னன் எதிரிகளை வென்று வருகிறான். சங்குகளும் கொம்புகளும் வெற்றி முழக்கம் செய்கின்றன. வரும் வழியில் காயா, வெண்காந்தள் மலர்களையும் கண்டு வருகின்றான்.

குதிரையின் கணைப்பொலியும் தலைவியின் செவியில் விழுகின்றது. அதைக் கேட்ட தலைவியின் முகம் மலர்ச்சி அடைகிறது.

காயாம்செடி அஞ்சணம் போன்ற மலர் போல விளங்கியது. கொன்றை பூத்து மலர்ந்தது. இத்தகைய காட்டு வழியில் தேர் ஏறி மன்னன் வந்தான்.

மான்கள் துள்ளி குதித்து விளையாடியது. முல்லை நிலத்தில் பூக்கும் பூ முல்லைப்பூவாகும். முல்லைப்பாட்டின் தொடக்கத் திலேயே கார்காலம் வந்தது. இறுதியில் தலைவன் தான் மேற்கொண்ட கடமையில் வென்று திரும்புகின்றான். இது புறத்திணைகளில் ஒன்று. பகையரசரின் நாட்டை கைப்பற்ற செல்லும் மன்னன், வெற்றியுடன் திரும்புவது வஞ்சித்திணையாகும். அப்போது வீரர்கள் வஞ்சிப்பூவை சூடுவர்.






No comments:

Post a Comment