முடத்தாமகண்ணியார் என்னும் புலவர் கரிகால் சோழன் சிறப்புக்கள் குறித்து பாடிய நூல். பரிசு பெற விரும்பி இருக்கும் பொருநனை ஆற்றுப் படுத்துவதாக இந்த நூலில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளது. இந்த நூல் வஞ்சி அடிகளும் ஆசிரியத்தாளும் கலந்து 248 அடிகளில் அமைந்துள்ளது.
பொருநர் என்று சொன்னால் வேடமணிந்து கொள்பவர் அல்லது வீரர் என்று அர்த்தம். இக்காலத்திலும் சிலரை பகல்வேடக்காரர் என்று கூறுகிறோம். அவர்களும் கூட இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
பொருநர்கள் பல வகையில் உள்ளனர். ஏர்க்கலம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று சொல்லலாம். இந்த நூலில் சிறப்பிக்கப்படும் பொருநர் போர்க்களத்தில் பாடுபவன். இவர்கள் திருவிழாக்கள் தோறும் சென்று தங்கள் திறமைகளைக் காட்டுவார்கள். ஒரு ஊரில் அந்த விழா முடிந்த பிறகு மற்றொரு ஊருக்குச் செல்வர்.
இந்த நூலில் யாழ் என்னும் வாத்தியக் காருவி மணமகளுக்கு உவமையாக காட்டப்படுகிறது. அத்துடன் கரிகால் சோழனின் கொடைச் சிறப்பும் நாட்டின் வளமும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த நாட்டில் உள்ள விறலியர்கள் தங்க மாலையை பரிசாகப் பெறுவதும் பொன்னி நதியின் புது வெள்ளமும் செல்வ செருக்கும், வறுமைக் துன்பமும் அழகுபட கூறப்பட்டுள்ளது.
வறுமையால் வேதனைப்பட்டிருந்த பொருநன் ஒரு வள்ளலிடம் பரிசு பெறச் சென்றான். அங்கு யாழை மீட்டி பாடுகின்றான். அவனை சந்தித்த பொருநன், தான் அடைந்தத் துன்பத்தையும் அதை நீக்க கரிகால் சோழனிடம் சென்று பரிசு பெற்றதையும் கூறுகின்றான்.
அவ்வாறு கூறும்போது சோழனின் வீரத்தையும் அவன் விருந்தினரை உபசரிக்கும் பன்மையும் கொடை சிறப்பையும் விரிவாக எடுத்துரைக்கின்றார். அவற்றிற்கு இடையே சோழ நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தொழில் வளத்தையும், கலைச் சிறப்பையும் இந்த நூல் எடுத்துக் கூறுகிறது.
மேலும், இந்த நூலில் யாழில் உண்டாகும் இசையைப் பற்றி மிகவும் உயர்வாக கூறுகிறது. இதன் மூலம் அந்தக் காலகட்டத்தில் இசைக் கலை சிறப்புப் பெற்றிருந்ததை அறியலாம். பாம்பின் தோலைப் போல பளபளப்பான
துணிகளை உருவாக்கும் நெசவாளர்கள் அன்று வாழ்ந்ததை அறிய முடிகிறது. பட்டாடை என்பது தமிழகத்தில் கலை என்று தெரிகின்றது.
அத்துடன் காக்கைக்கு உணவிடும் இன்றைய பழக்கம் அன்றும் இருந்ததை அறிந்து கொள்ளலாம். விழா கொண்டாடும் ஊரில் திருவிழா முடிந்த பின்பு, அங்கு வழங்கப்படும் சோற்றை விரும்பாமல் வேறொரு விழா கொண்டாடும் ஊருக்கு செல்வதையும் அறிய முடிகிறது.
மானின் காலடி குளம்பு அழுந்திய இடத்தில் இருந்த தாழ்ந்து உயர்ந்த பத்தன் என்னும் உவமையும் சிவப்பு நிறமாக போர்த்திய தோல் சிவந்த நிறம் கொண்டவளின் வயிற்றில் உள்ள ஐந்தாறு மயிர் ஒழுங்குத் தோற்றம் இரண்டு தலையும் பூட்டி தைத்த மரத்தைப் போன்ற போர்வை.
நண்டின் கண்களைப் போன்ற ஆணி எட்டாவது நாள் நிலவைப் போல உள் நாக்கு இல்லாத வாய், பாம்பின் தலையை எடுத்தது போல் கரிய தண்டு, முங்கை தொடியைப் போன்ற வார்க்கட்டு, கல்யாணத்திற்கு அலங்கரித்தது போன்ற பெண்ணின் அழகு, யாழ் தெய்வமான மாதங்கி போன்ற அழகு.
கள்வர்களின் கையில் உள்ள போர்க்கருவிகளை கைவிடச் செய்யும் பாலை யாழ், என்றெல்லாம் யாழின் சிறப்புகள் கூறப்பட்டிருக்கின்றது.
ஆற்றின் மேல்பரப்பு போன்ற கூந்தல், பிறை போன்ற நுதல், வில் போன்ற புருவங்கள், குளிர்ந்த கண்கள், செம்மை நிறமுள்ள வாய், வரிசையாக அடுக்கப்பட்ட முத்து போன்ற பற்கள், மகரக் குழை, அசையும் காதுகள், நாணத்தால் கவிழ்ந்த கழுத்து, காந்தள் போன்ற மெல்லிய விரல்கள், கிளியின் வாய் போல நகங்கள்.
பிறருக்கு வருத்தத்தை உண்டாக்கும் முலைகள் நீர்வீழ்ச்சியின் சுழி போல உள்ள தொப்புள், உண்டா இல்லையா என்று சொல்லக் கூடிய இடை, திறந்த தொடைகள், நிலத்தில் நடக்கும்போது சுக்கா கற்கள், வருத்திய துளும்பு நீரைக் கொண்ட கொப்பளங்கள் போன்றவை விறலியை குறித்து வர்ணித்து கூறப்படும் பாடல்கள்.
ஆற்றுப்படுத்துதல்
மற்றவர்கள் மனதில் உள்ளதை குறிப்பால் அறிய வல்லவன் பொருநன். அவன் இந்த கூத்தரைப் பார்த்ததும் கூத்தர் தலைவனே இந்த வழியில் நீ என்னைக் கண்டது போன பிறவியில் செய்த பயன்.
உனக்கு பரிசு கிடைக்கும் வழியை நான் சொல்லுகின்றேன். பசியால் வருந்தும் உன் சுற்றத்தாருடன் காலம் தாழ்த்தாமல் எழுந்திருப்பாயாக. நீ நல்வாழ்வு அடைவாய்.
குரல், துத்தம், கைக்கிளை, குழை, இளி, விளரி, தாரம் என்னும் நரம்பு யாழ் கொண்டவன் நீ. பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவையைப் போல இந்த கருவிகளுடன் நான் கரிகாலன் கோபுரவாசலில் சென்று சேர்ந்தேன்.
அவன் வாயிலில் உள்ளே செல்லும்போதே காப்பாளர்கள் தடையின்றி வரவேற்றனர். என்னுடைய இளைப்பும் தீர்ந்தது. கண் போல இருக்கும் உடுக்கையின் இரட்டை தாளத்திற்கு பொருந்துமாறு, பாடுவதற்கு முன்பே விடிந்து விட்டது.
அங்குள்ளவர்கள் சொந்த நாட்டினரைப் போல என்னை வரவேற்றனர். கிழிந்த துணியுடன் போன என்னுடைய ஆடைகளை களைந்து மிக உயர்ந்த பூப்போட்ட துணி வகைகளை எனக்கு வழங்கினான்.
என்னுடைய வருத்தம் போகும்படி தங்கத்தால் செய்யப்பட்ட வட்டில்களில் உணவும், கள்ளும். ஏராளமாக வழங்கினார்கள். மகிழ்ச்சி அடைந்தேன். அங்குள்ள ஒரு கோயிலில் மாலை நேரத்தில் தங்கியிருந்தேன்.
அப்போது என்னுடைய வழித்துன்பம் நீங்கியது. நேற்று வரை இருந்த வறுமையும் மறந்தது. ஏதோ கனவு கண்டது போல எல்லா இன்பமும் எனக்கு
கிடைத்தது.
என்னை அழைத்து வரும்படி வாயிலில் இருந்தவர்களுக்கு மன்னன் உத்தரவிட்டான். உள்ளே சென்றபோது செம்மறி கிடாவை வெட்டி சமைத்த உணவு மேலும் பணியாரங்கள் போன்ற ஏராளமான உணவுப் பொருட்களை உண்ணும்படி வழங்கினான்.
சிறிய யாழினை பாடியும் முழவின் தாளத்திற்கு ஏற்ப ஆடியும் கள்ளுண்டும் உயர்ந்த உணவு உண்டும் மகிழ்ந்திருந்தோம்.
முல்லை அரும்பு போன்ற சோற்றையும் பொரிக் கறிகளையும் நிறைய உண்டோம். எம்முடைய இறைச்சியை உண்டு உண்டு முனை மழங்கியது. இளப்பாற இடம் கிடைக்காமல் உணவுகளையே வெறுத்தோம்.
ஒரு நாள் மன்னனிடம் எங்கள் ஊருக்கு செல்லுகின்றோம் என்று கூறினோம். மன்னன் கோபித்து உடனே விடை கொடுக்கவில்லை. பின்னர் ஆண் யானையும், பெண் யானையும் கன்றுகளுடன் தந்து ஏராளமான ஊர்திகளில் ஆடைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் குறையின்றி வாரிக் கொடுத்து சென்று வாருங்கள் என்றான்.
கரிகாலனின் சிறப்பு
இவன் இளஞ்சேட்சென்னியின் புதல்வன். முருகனைப் போன்ற சீற்றம் கொண்டவன். இளம் ஞாயிறு கடலில் தோன்றியது போல வலிமை மிக்கவன்.
இளம் வயதிலேயே பெரும் புகழ் பெற்றான். வெண்ணி என்ற இடத்தில் சேரனையும் பாண்டியனையும் வீழ்த்தியவன். அவன் திருவடிகளை வணங்கினால் பசு தனது கன்றுக்கு விரும்பி பால் சுரப்பது போல நம் துன்பத்தை உணர்ந்து உதவக் கூடியவன்.
அங்கு நீங்கள் சென்றால் தூய பட்டாடைகளை தந்து தங்க கலத்தில் உணவு படைத்து தெளிவான கள்ளையும் பருக தருவான். பொற்றாமரையை தலையில் சூட்டுவான்.
பொன்னறி மாலையை முத்தாரத்துடன் அணியத் தருவான். வெள்ளைக் குதிரைகள் நான்கைப் பூட்டி பாணருக்கு கொடுக்கும்படி உத்தரவிடுவான். யானைகளும் தருவான். சென்று வாருங்கள்.
பகை மன்னர்கள் நடுங்கும்படி பல உயிர்களையும் காக்கும் கதிரவன் போல கதிர்களை பரப்புபவன். மரக்கிளைகளில் நெருப்பு உண்ணவும், அருவிகளை இல்லாமல் ஆக்கவும், மேகம் கடலில் நீர் அருந்துவதை மறக்கவும், காவிரி ஆறு நறை கொடியும், நரந்த புல்லும், அகிலும் சந்தனமுமாகிய சுமையை துறைகளில் இளப்பாறத் தள்ளிச் சென்று நீர் புறத்திலும் கோட்டகத்திலும் புகுந்து நீராடும் பெண்கள் விளையாடுவர்.
வளைந்திருக்கும் அரிவாளியின் வாயால் நெல்லை அறுத்து அவற்றை மலையாக அடுக்கி அவற்றின் மீது கடாவை நடக்க விட்டு நெல்லை குதிர்களில் வெற்றிடம் இல்லாதபடி குவித்து வைக்கும் வேலி நிலம் ஆயிரத்தை பாதுகாக்கும் நாடு கரிகால் பெருவளத்தான் ஆட்சி செய்யும் சோழ வளநாடு.
அதனால் தான் "காவிரிபுரக்கும் நாடுகிழவோனே" என்று இப்பாடல் முடிகிறது.
இவ்வாறு கரிகால் சோழனுடைய வீரம், புகழ், கொடைச் சிறப்பு, அவன் நாட்டின் வளம் என்று அனைத்து சிறப்புகளும் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது.
கீழ்க்காணும் வரிகள் பொருநராற்றுப்படையில் கரிகால் சோழனின் கொடைத் தன்மையை பற்றி சொல்லக் கூடியவை.
கரிகாலனின் கொடைத் தன்மை
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
தொழுதுமுன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று
ஈற்று ஆ விருப்பின் போற்றும் நோக்கி நும்
கையது கேளா அளவை ஒய் எனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்
பெறல் அருங் கலத்தில் பொட்டாங்கு உண்க எனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல் வைகல் கைகவி பருகி. (149-158)
கரிகால் சோழன் இரக்கத்தின் வடிவமாகி இரவலர்களுக்கு தர்மம் செய்பவன். அவன் திருப்பாதங்களைக் கண்டு யாரும் வறுமை வந்தது என்று நின்றால், அதுவரை அவர்களை வாட்டி, வதைத்த வறுமை அவர்களிடம் இல்லாத நிலையை உண்டாக்குவான்.
பசியுடன் நிற்கும் கன்றைத் தாய்ப் பசு பார்ப்பது போல் இரவலர்களை ஆர்வத்துடன் பார்த்து, அவர்களுக்கு வந்த துன்பங்களைக் கேட்டறிவான்.
கொட்டை பாசியின் வேரினைப் போல அழுக்குடன் குறைந்து போன தையலுடன் வந்த கந்தலாடை அணிந்தவர்களுக்கு, அவர்கள் குறைகளைப் போக்குவான்.
ஏழைகளுக்கு தூய பட்டாடைகளைத் தந்து, அவர்களை உடுத்த வைத்து அதனைக் கண்டு மகிழ்வான். வந்த இரவலர்களுக்கு பொற்கலத்தில் உணவைத் தந்து நீங்கள் விரும்பியதெல்லாம் உண்ணுங்கள், உண்ணுங்கள் என வேண்டுவான். பூமணம் கமழ்கின்ற கள்ளினை அனைவருக்கும் தந்து அவற்றை பிறருக்குப் பருகத் தருவான்.
No comments:
Post a Comment