Wednesday, May 8, 2019

குற்றியலுகரம்

'லு'கரம் என்பது ஒரு குறில் உயிர்மெய் எழுத்து ஆகும்.

இலக்கணப்படி, குறில் உயிர்மெய் எழுத்துகள் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கக் கூடியவை.

குற்றியலுகரம் என்பது, ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்துகள், சொல்லின் இறுதியில் வரும்போது, மற்ற உயிர்மெய் எழுத்துகளைப் போல் ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து குறுகி அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.

இவ்வாறு குறுகி ஒலிக்கும் 'உ'கரம் குற்றியலுகரம் எனப்படும்.

சுருங்கக் கூறுமிடத்து, தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில், வல்லின மெய் ஏறி வரும் உகரம், அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.

வல்லின எழுத்துகள்

க, ச, ட, த, ப, ற 

'உ'கரம் ஏறிய வல்லின எழுத்துகள்

கு(க்+உ), சு(ச்+உ), டு(ட்+உ), து(த்+உ), பு(ப்+உ), று(ற்+உ)

உதாரணம்

ஆபத்து, உதடு, கடுகு, ஆறு

மேற்சொன்ன உதாரணத்தில் து, டு, கு, று ஆகிய உகரம் ஏறிய வல்லின எழுத்துகள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிப்பதைக் காணலாம்.

குற்றியலுகரத்தின் வகைகள்

நெடிற்றொடரக் குற்றியலுகரம்

இரண்டெழுத்துச் சொற்கள் நெடில் எழுத்தை முதல் எழுத்தாக பெற்றிருக்குமிடத்து, அதனைத் தொடர்ந்து வரும் வல்லின மெய் ஏறிய உகரம் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

உதாரணம்

பாடு, காடு, நாடு, வீடு, மாடு, சோறு, ஏறு, காது, பாகு, ஆறு, பேசு, ஏசு.

மேற்கண்ட உதாரணங்கள், ஈரெழுத்தாகவும், முதல் எழுத்து நெடிலாகவும் வந்து, இறுதி எழுத்து வல்லினம் ஏறிய உகரமாகவும் வருவதால், உகரம் அரை  குறுகி ஒலிக்கும்.

ஆயுதத்தெடர்க் குற்றியலுகரம்


தனக்கு முன்னால் அமையும் எழுத்து அல்லது ஓசை ஆயுதமாக இருக்குமிடத்து, இறுதியில் வரும் வல்லின உகரம், குறுகி ஒலிக்கும். இது ஆயுதத்தெடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

உதாரணம்

அஃது, எஃகு, இஃது

உயிரத்தொடர்க் குற்றியலுகரம்

தனக்கு முன்னால் உயிரோசை பெற்று வருவதால், இது இப்பெயர் பெற்றது.

இவ்வாறு உயிரோசையை தொடர்ந்து வரக்கூடிய வல்லின மெய் ஏறிய உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு ஒலிக்கும் உகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

உதாரணம்

பண்பாடு, செப்பேடு, சிறிது, பெரியது, மதகு, பாலாறு

மேற்சொன்ன உதாரணத்தில், டு, து, கு, று போன்றவற்றிற்கு முன்னே வரக்கூடிய பா, பே, றி, ய, த, லா போன்ற உயிர்மெய் எழுத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

மாறாக, அவற்றின் ஓசை இறுதியில் உயிரோசையாக இருப்பதையை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, பா(ப்+ஆ), பே(ப்+ஏ), றி(ற்+இ), (ற்+அ), (த்+அ), லா(லவ்+ஆ) போன்று இறுதியில், உயிரோசையுடன் வந்துள்ளது.

வன்றொடர்க் குற்றியலுகரம்

வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் போன்றவற்றைத் தொடர்ந்து இறுதியில் வரும் வல்லின உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு குறுகி ஒலிக்கும் உகரம் வன்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

உதாரணம்

ஆமணக்கு, அச்சு, பட்டு, பத்து, பொறுப்பு, பற்று

க், ச், ட், த், ப், ற் போன்ற வல்லின மெய்களைத் தொடர்ந்து வருகின்ற கு, சு, டு, து, பு, று ஆகிய வல்லின உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.

மென்றொடர்க் குற்றியலுகரம்

மெல்லின மெய்களான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் வல்லின உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு குறுகி ஒலிக்கும் உகரம் மென்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

உதாரணம்

நுங்கு, பஞ்சு, பண்பு, பந்து, அம்பு, அன்று, சிந்து, வேம்பு

இடைத்தெடர்க் குற்றியலுகரம்

இடையின மெய்களான ய், ர், ல், வ், ழ், ள் ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் வல்லின உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு குறுகி ஒலிக்கும் உகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

உதாரணம்

கொய்து, சார்பு, செய்து, பெய்து

குறிப்பு

'கள்' என்ற பன்மை விகுதி குற்றியலுகரச் சொற்களுக்குப் பன்மைத் தன்மை தரும்போது, வல்லெழுத்து ஒருபோதும் மிகாது.

உதாரணம்

வாழ்த்துகள், வீடுகள், எழுத்துகள்

வாழ்த்துக்கள், வீடுக்கள், எழுத்துக்கள் என்று வராது.

முற்றியலுகரம்

இரண்டெழுத்துச் சொல்லின் முதலெழுத்து குறியாக இருக்குமிடத்து, அதைத் தொடர்ந்து வரும் வல்லின உகரம் குற்றியலுகரமாக கருதப்பட்டாது. அது தனக்குரிய இயல்பான அளவாகிய ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும்.

உதாரணம்

படு, அது, இது, பசு, பொது

இவ்வாறு, இரண்டெழுத்துச் சொற்களில் முதல் எழுத்து குறிலாக இருக்குமிடத்து, இறுதியில் வரக்கடிய வல்லின உகரம் முற்றியலுகரம் ஆகும்.



No comments:

Post a Comment