Monday, April 8, 2019

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1

விசாவுக்காக காத்திருக்கிறேன் என்பது அண்ணல் அம்பேத்கருடைய ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். தான் ஒரு தீண்டத்தகாதவனாக இருந்ததற்காக அவர் மனம் பட்ட பெரும் வேதனைகளை அவரது சொந்த வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளால் விவரிக்கிறார். அதற்காக தனது இளமைக் காலத்தில் அவர் மீது சுமத்தப் பட்ட அவமானங்களை நினைத்துப் பார்க்கிறார். அந்த அவமானங்கள் எவ்வாறு தனது அயல்நாட்டு கல்வியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் கூறுகிறார்.
                             
     'விசா'வுக்காக காத்திருந்தேன்

இந்தியாவில் தீண்டாமை இருப்பதை அயல்நாட்டினர் அறிந்திருக்கக்கூடும். உண்மையில் அது எவ்வளவு அடக்குமுறை நிறைந்தது என்பதை அவர்கள் அடுத்த வீட்டில் இருந்தாலும் அறிந்து கொள்ள இயலவில்லை என்றே கூறலாம். அதிக எண்ணிக்கை கொண்ட இந்துக்கள் நிறைந்த ஒரு கிராமத்தின் ஓர் ஓரத்தில் எவ்வாறு ஒரு சில தீண்டத்தகாதவர்கள் வசிக்க இயலும் என்பதை தினமும் கிராமத்தை சுற்றி சென்று அங்கிருக்கும் அருவருக்கத்தக்க கழிவுகளை அகற்றும் ஊர்மக்கள் பணிக்கும் சில்லறை வேலைகளை செய்து கொண்டும் இந்துக்களின் வீட்டு வாசல்களில் நின்று அவர்கள் இடும் உணவைப் பெற்றுக் கொண்டும் இந்தியாவின் கடைகளில் எட்டி நின்று கொண்டே தங்களுக்கு தேவையான பொருட்களையும் எண்ணெய்யையும் வாங்கிக் கொண்டும் அந்தக் கிராமத்தை ஒவ்வொரு வழியிலும் தங்களின் வீட்டை போல் நினைத்துக் கொண்டிருந்தாலும் கிராமத்தார் எவரையும் தொட்டு விடாமலும் தன்னை யாரும் தொட்டு விடாமலும் நடந்து கொள்வதை புரிந்து கொள்வது அவர்களுக்கு எளிதானதல்ல. உயர் ஜாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்கள் என்று நடத்தப்பட்டார்கள் என்பதை எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்பதுதான் பிரச்சனை. இதைப்பற்றி ஒன்று பொதுவாக விவரித்து கூறலாம் அல்லது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை பற்றி தனிப்பட்டவர்களின் அனுபவங்களை கூறலாம். இந்த இரு வழிகளே நமது இந்த நோக்கத்தை நிறைவேற்ற இயன்ற சிறந்த வழிகளாகும். முந்தையதை விட பிந்தைய வழியே மேலானது என நான் உணர்கின்றேன். இந்த அனுபவங்களை தேர்ந்தெடுக்கையில் எனது சொந்த அனுபவங்களிலிருந்து சிலவற்றையும் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து சிலவற்றையும் எடுத்துக் கொண்டேன். எனது சொந்த வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவ நிகழ்ச்சிகளைக் கொண்டு இதனை நான் தொடங்குகிறேன்.

தண்ணீர் இன்றி உணவருந்த முடியாத இளம் வயதில் பட்ட கொடுமை!

பம்பாய் ராஜதானியின் இரத்தினகிரி மாவட்டத்து தபோலி தாலுகாவிலிருந்து வந்தது எங்கள் குடும்பம். கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் தொடங்கியபோதே எனது முன்னோர்கள் தங்களின் பாரம்பரியமான தொழிலை விட்டுவிட்டு கம்பெனியின் படத்தில் பணியாற்ற வந்துவிட்டார்கள். என் தந்தையும் குடும்ப பாரம்பரியத்தை பின்பற்றி ராணுவப் பணியேற்றார். இராணுவத்தில் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவர் ஓய்வு பெறும்போது சுபேதார் அந்தஸ்தில் இருந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் என் தந்தை தபோலியில் தங்கலாம் என்ற எண்ணத்தோடு எங்கள் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தபோலி வந்தார்.
ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக என் தந்தை தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

எங்கள் குடும்பம் தபோலியை விட்டுப் புறப்பட்டு சதாரா சென்று அங்கு 1904 வரை வாழ்ந்தது. எனக்கு நினைவிலிருந்து நான் பதிவு செய்யும் எனது முதல் அனுபவம் நிகழ்வு நாங்கள் சதாராவில் இருந்தபோது 1901 இல் ஏற்பட்டது. அப்போது என் தாயார் உயிருடன் இல்லை; இறந்து போய்விட்டார்.

சதாரா மாவட்டம் தாலுகாவில் உள்ள கடாவ் என்ற இடத்தில் அரசுப்பணியில் காசாளராக பணியாற்ற என் தந்தை சென்றுவிட்டார். பஞ்சத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருந்த நிலையில் பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு வேலை தரும் நோக்கத்தில் ஓர் ஏரியைத் தூர் வாரும் பணியை அங்கு பம்பாய் அரசு துவங்கி இருந்தது. எங்கள் தந்தை கார்கோன் சென்ற போது என்னையும் என் அண்ணனையும் இறந்து போன எனது அக்காவின் இரண்டு மகன்களையும் தனியாக என் அத்தை மற்றும் அக்கம் பக்கத்து மக்களின் பொறுப்பில் எங்களை விட்டு விட்டுச் சென்றார்.

நான் அறிந்த மனிதர்களில் என் அத்தை மிகவும் அன்பானவர் என்றாலும் எங்களுக்கு அவரால் எந்த உதவியும் இல்லை. மற்றவர்களைப் போலன்றி மிகவும் சிறிய உருவம் கொண்டவராக இருந்த என் அத்தைக்கு அவரது கால்களிலும் ஏதோ ஒரு வகையான ஊனம் இருந்தது.

மற்றவர்களின் உதவி இன்றி அவரால் இங்கும் அங்கும் நகர்ந்து செல்லவும் முடியாது. அனேகமாக அவரை யாராவது தூக்கிக் கொண்டு தான் செல்லவேண்டும். எனக்குத் சகோதரிகள் இருந்தனர் என்றாலும் அவர்களுக்குத் திருமணமாகி அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வெகு தொலைவில் வாழ்ந்து வந்தார்கள். எங்கள் அத்தையின் உதவியும் இன்றி சமைப்பது என்பதே எங்களுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது.

நாங்கள் நால்வரும் பள்ளிக்குச் சென்று கொண்டும் வீட்டில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டும் இருக்க வேண்டிய நிலையே நிலவியது. எங்களால் ரொட்டி சுட முடியாது என்பதால் புலவு சோற்றை மட்டுமே நாங்கள் உண்டு வாழ்ந்தோம். அரிசியையும் கறியையும் சேர்த்து வேக வைத்து புலவு தயாரிப்பது எங்களுக்கு எளிதாக இருந்தது.

அவர் காசாளராக இருந்ததால் எங்களை காண அடிக்கடி சதாராவுக்கு வர எங்கள் தந்தையால் இயலவில்லை. அதனால் கோடை விடுமுறைக்கு கோர்க்கான் வந்து அவருடன் தங்கி இருக்கும்படி கேட்டு அவர் எங்களுக்கு கடிதம் எழுதினார். எங்கள் வாழ்நாளில் அதுவரை நாங்கள் ரயிலையே பார்த்தது இல்லை என்பதால் அவரது அழைப்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

நாங்கள் புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தோம். இங்கிலாந்து நாட்டு துணியில் புதிய சட்டைகள் தைக்கப்பட்டன, அழகான அலங்காரத் தொப்பிகள் வாங்கப்பட்டன, புதிய காலணிகள், பட்டு கரை போட்ட பேட்டிகள் அனைத்தும் எங்கள் பயணத்துக்காக வாங்கப்பட்டன. எவ்வாறு நாங்கள் பயணம் செய்து வரவேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எங்கள் தந்தை தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.

அத்துடன் எப்போது நாங்கள் வருகிறோம் என்பதை முன்கூட்டியே கடிதம் மூலம் தெரிவித்தால் தான் நேரில் ரயிலடிக்கு வந்தோ அல்லது தனது சேவகரை அனுப்பியோ கோர்கானுக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த ஏற்பாட்டின்படி நானும் என் அண்ணனும் என் அக்கா மகன்களும் சதாரா விட்டுப் புறப்பட்டோம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என் அத்தையைப் பார்த்துக் கொள்வதாக வாக்களித்ததால் அத்தையை வீட்டிலேயே விட்டு விட்டுப் புறப்பட்டோம். ரயில்வே நிலையம் எங்கள் இடத்திலிருந்து 10 மைல் தொலைவில் இருந்த படியால் ஓர் இரட்டைக் குதிரை வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு நாங்கள் ரயிலடிக்குச் சென்றோம். இந்த அருமையான வாய்ப்புக்காக நாங்கள் புதிய உடைகள் அணிந்து கொண்டிருந்தோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்ட போது எங்களைப் பிரியும் துயரத்தில் எங்கள் அத்தை கீழே விழுந்து புரண்டு அழுதார்.

ரயில் நிலையத்தை நாங்கள் அடைந்தவுடன் என் அண்ணன் பயணச்சீட்டுகளை வாங்கியபின் எனக்கும் எங்கள் அக்கா மகன்களுக்கும் எங்கள் விருப்பம் போல் செலவு செய்ய கைச்செலவுக்காக தலா இரண்டு அணா கொடுத்தார். உடனே நாங்கள் ஆளுக்கு ஒரு புட்டி எலுமிச்சம் பழரசம் வாங்கி அருந்தி அதன் மூலம் எங்கள் ஆடம்பரமான வாழ்க்கையை தொடங்கினோம். சிறிது நேரத்தில் ஊதிக் கொண்டு வந்த ரயிலில் உடனே நாங்கள் ஏறிக்கொண்டோம். இல்லாவிட்டால் எங்களை விட்டுவிட்டு ரயில் சென்று விடுமோ என்று நாங்கள் அஞ்சினோம். கோர்கானுக்கு மிக அருகில் உள்ள மாசூரில் நாங்கள் இறங்க வேண்டும் என்று எங்களுக்கு கூறப்பட்டிருந்தது.

மாலை 5 மணிக்கு ரயில் மாசூரை வந்தடைந்தது. மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு நாங்கள் ரயிலை விட்டு இறங்கினோம். சில நிமிட நேரத்தில் அந்த ரயில் நிலையத்தில் ரயிலை விட்டு இறங்கி அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். எங்கள் தந்தையோ அல்லது அவரது சேவகரோ வருவார் என்று எதிர்பார்த்து நாங்கள் நால்வரும் ரயிலடியிலேயே காத்திருந்தோம். வெகு நேரம் காத்திருந்தும் எவரும் வரவில்லை. ஒரு மணி நேரம் கழித்த பின் ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எங்களிடம் விசாரித்தார். பயணச் சீட்டு இருக்கிறதா என்று அவர் எங்களை கேட்டார். நாங்கள் எங்கள் பயணச்சீட்டுகளை அவரிடம் காட்டினோம். நீங்கள் ஏன் தயங்கி நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் எங்களை கேட்டார்.

நாங்கள் கோர்கான் செல்ல வேண்டும் என்றும் எங்கள் தந்தையோ அல்லது அவரது சேவகரோ வருவார் என்று நாங்கள் காத்திருப்பதாகவும் கோர்கானுக்கு எப்படி போவது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும் அவரிடம் நாங்கள் கூறினோம். நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ எங்கள் பேச்சில் இருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக்கொண்டே ஸ்டேஷன் மாஸ்டர் எங்கள் பரிதாப நிலையை கண்டு மிகவும் வருந்தினார். இந்துக்களின் வழக்கம்போல, நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறி விட்டேன்( பம்பாய் ராஜதானியில் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட சமூகங்களில் மஹரும் ஒன்று). அவர் முகம் திடீரென மாறிவிட்டது.

அதிசயிக்கத்தக்க வெறுப்பு உணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது. இது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்றுவிட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்று கொண்டு இருந்தோம். பதினைந்து இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி எல்லாம் மறைந்து எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.
                                                                                                                                     



No comments:

Post a Comment