Thursday, April 11, 2019

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-3

விடியற்காலை 5 மணிக்கு எங்கள் வண்டிக்காரர் வந்து நாம் கோர்கானுக்குப் புறப்படலாம் என்று கூறினார். நாங்கள் ஒரேயடியாக மறுத்துவிட்டோம். காலை 8 மணிக்கு முன் நாங்கள் நகரமாட்டோம் என்று அவரிடம் கூறிவிட்டோம். எங்களை எந்த ஆபத்திலும் உட்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. வண்டிக்காரர் பதிலேதும் கூறவில்லை. எனவே காலை 8 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் 11 மணிக்கு கோர்கானைச் சென்றடைந்தோம். எங்களைக் கண்ட எங்கள் தந்தை வியப்படைந்தார். நாங்கள் வரப் போவதைப் பற்றிய தகவல் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். அவருக்குக் கடிதம் எழுதிவிட்டுத்தான் வந்ததாக நாங்கள் அவரிடம் கூறினோம். எங்கள் தந்தையின் பணியாளரின் தவறு என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எங்களின் கடிதத்தை அந்தப் பணியாளர் எங்கள் தந்தையிடம் கொடுக்கத் தவறிவிட்டார்.

இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. அது நிகழ்ந்தபோது எனக்கு 9 வயதிருக்கும். ஆனால் அது என் மனதில் மறையாத ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பே நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், தீண்டத் தகாதவர்கள் சில அவமானங்களுக்கும், பாகுபாட்டுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திருந்தேன். எடுத்துக் காட்டாக, என்னுடைய தர வரிசைப்படி எனது வகுப்பறையில் மற்ற மாணவர்களிடையே நான் உட்கார முடியாது. வகுப்பறையில் ஒரு தனியான கோணிப்பை மீதுதான் நான் உட்கார வேண்டும் என்றும், பள்ளியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர் நான் பயன்படுத்திய கோணித்துணியைத் தொடவும் மாட்டார் என்பதையும் நான் அறிவேன். ஒவ்வொரு நாள் மாலையும் நான் அந்தக் கோணித் துணியைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டு, மறுநாள் காலை மறுபடியும் வீட்டிலிருந்து அதைப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

பள்ளியில் தீண்டத்தக்க பிரிவுப் பிள்ளைகள் தாகம் எடுக்கும்போது, தண்ணீர்க் குழாயிடம் சென்று, அதைத் திறந்து தண்ணீர் குடித்து, தாகத்தைத் தணித்துக் கொள்வதை நான் அறிவேன். அவர்களுக்குத் தேவையான தெல்லாம் ஆசிரியரின் அனுமதி மட்டுமே. ஆனால் எனது நிலைமையே வேறு. நான் அந்தத் தண்ணீர்க் குழாயைத் தொட முடியாது. தீண்டத்தக்க ஒருவர் குழாயைத் திறந்துவிட்டால் தவிர, எனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வழி இல்லை. என்னைப் பொறுத்தவரை ஆசிரியரின் அனுமதி மட்டும் போதாது. தண்ணீர்க்குழாயைத் திறந்து விடப் பள்ளி ஊழியர் அங்கே இருக்க வேண்டும்; தண்ணீர் திறந்து விடுவதற்கு அந்தப் பணியாளர் ஒருவரைத்தான் பள்ளி ஆசிரியர் பயன்படுத்துவார். அந்தப் பணியாளர் இல்லையென்றால் நான் தண்ணீர் குடிக்காமலேயே போக வேண்டியதுதான். பணியாளர் இல்லை என்றால் எனக்குத் தண்ணீர் இல்லை என்றுதான் சுருக்கமாகக் கூறவேண்டும்.
வீட்டில் என் சகோதரிகள் துணிகளைத் துவைப்பார்கள் என்பது எனக்குத் தெரியும், சதாராவில் துணி வெளுப்பவர் இல்லாமல் இல்லை; அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் முடியாது என்பதுமில்லை. தீண்டத்தகாதவரின் துணிகளை எந்தத் துணி வெளுப்பவரும் வெளுக்கமாட்டார் என்பதால், எங்கள் துணிகளை என் சகோதரிகளே வெளுப்பார்கள்.

எங்கள் குடும்பத்து ஆண் பிள்ளைகளுக்கு முடி வெட்டுவது, முகச் சவரம் செய்வது போன்ற அனைத்துப் பணிகளையும் எங்கள் மூத்த சகோதரியே செய்வார்; எங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர் சிறந்த முடித்திருத்தக் கலைஞராகவே ஆகிவிட்டார். சதாராவில் முடிதிருத்துபவர்கள் இல்லாமல் இல்லை; அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் இயலாது என்பதுமில்லை. ஆனாலும் எந்த முடிதிருத்துபவரும் தீண்டத்தகாத ஒருவருக்கு சவரம் செய்ய ஒப்புக் கொள்ளமாட்டார் என்பதால்தான் இப்பணியை என் சகோதரி செய்து வந்தார். இவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் கோர்கான் செல்லும்போது நேர்ந்த நிகழ்ச்சி இதற்கு முன் நான் எப்போதுமே அனுபவித்திராத பேரதிர்ச்சியை எனக்கு அளித்தது. தீண்டாமையைப் பற்றி என்னை அந்த நிகழ்ச்சி சிந்திக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன், தீண்டாமை என்பது பல தீண்டத் தகாதவர்களுக்கும், தீண்டத் தக்கவர்களுக்கும் சாதாரணமான விஷயமாக இருந்ததாகும்.
 
  பரோடா பார்சி விடுதியில் பட்ட பாடு!

1916 இல் நான் இந்தியாவுக்குத் திரும்பினேன். உயர் கல்விக்காக மேற்கு பரோடா மன்னர் அவர்களால் நான் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன். 1913 முதல் 1917 வரை நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நான் பயின்றேன். 1917 இல் இலண்டனுக்குச் சென்ற நான் இலண்டன் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பயிலச் சேர்ந்தேன். ஆனால் என் கல்வியை முடிக்காமல் இடையில் இலண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் நிலை எனக்கு ஏற்பட்டது. பரோடா சமஸ்தானத்தினால் நான் படிக்க வைக்கப்பட்டேன் என்பதால், அந்தச் சமஸ்தானத்திற்காகப் பணியாற்ற நான் கடமைப்பட்டிருந்தேன். அதன்படி நான் இந்தியாவை வந்தடைந்தவுடன் நேரடியாகப் பரோடாவுக்குச் சென்றேன். நான் பரோடாவிலிருந்து ஏன் திரும்பி வந்தேன் என்பதற்கான காரணங்கள் நான் இங்கே சொல்ல வந்த விஷயங்களுக்குத் தொடர்புடையது அல்ல. அதனால் அவற்றைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை, பரோடாவில் எனக்கு ஏற்பட்ட சமூக அனுபவங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் நான் அவற்றை விவரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத் தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சினையாகவே இருப்பான் என்பதையும் பற்றிய அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்து விட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது "எங்கு தங்குவது? யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்?' என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். நான் பொய்சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை. அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்து விட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன்.

அமெரிக்காவுக்குப் படிக்க வந்த என் நண்பர்கள் பரோடாவில் இருந்தனர். அவர்களிடம் சென்றால் என்னை வரவேற்பார்களா? வரவேற்பார்கள் என்று என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. தங்கள் வீட்டில் ஒரு தீண்டத்தகாதவனை அனுமதித்ததற்காக அவர்கள் சங்கடப்பட நேரலாம். எங்கு போவது, என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே சிறிது நேரம் இரயில் நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தேன். முகாமில் தங்குவதற்கு ஏதேனும் இடமிருக்கிறதா என்று விசாரிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் இரயிலில் வந்த அனைத்துப் பயணிகளும் இரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டபடியால் நான் மட்டும் தனியாக இருந்தேன்.

எந்தச் சவாரியும் கிடைக்காத சில குதிரை வண்டிக்காரர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்த நான், முகாமில் ஏதேனும் தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி. இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்று அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராட்டுவதில்லை. என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம். தேவையில்லை என்று கருதினேன். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த உள்ளத்துடனும் அச்சமற்ற மனத்துடனும் எனது சுமைகளைக் குதிரை வண்டியில் வைத்துவிட்டு பார்சி விடுதிக்குச் செல்லுமாறு கூறினேன்.

No comments:

Post a Comment