Thursday, April 11, 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-2

முதலாளித்துவ வர்க்கம் அதனுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கும் ஏற்றவாறு அரசியல் வெற்றிகளும் அடைந்தது. பிரபுத்துவக் கோமான்களது ஆதிக்கத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு வகுப்பாகவும், மத்திய காலக் கம்யூனில்* ஆயுதமேந்திய தன்னாட்சிக் கழகமாகவும் இருந்தது.

* "கம்யூன்" என்பது பிரஞ்சு நாட்டில் உதித்தெழுந்துவந்த நகரங்கள், அவற்றின் பிரபுத்துவக் கோமான்களிடமிருந்தும்ருந்தும் ஆண்டான்களிடமிருந்தும் வட்டாரத் தன்னாட்சியும் அரசியல் உரிமைகளும் வென்று "மூன்றாவது ஆதீனம் (third estate)" ஆகும் முன்னரே தமக்கு இட்டுக் கொண்ட பெயராகும்.


இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனியிலும் காணப்பட்டது போல) சுயேச்சை நகரக் குடியரசாகவும், அங்கே (பிரான்சில் காணப்பட்டது போல) வரிக்குரிய "மூன்றாவது ஆதீன"மாகவும் விளங்கிற்று.

பிற்பாடு பட்டறைத் தொழில் மேலோங்கிய காலத்தில் பிரபுத்துவக் கோமான்களுக்கு எதிராய் அரைப்பிரபுத்துவ முடியரசுக்கோ வரம்பிலா முடியரசுக்கோ துணை நின்றது. மொத்தத்தில் முடிப்பேரரசுகளுக்கு ஆதாரத் துணாயிற்று. முடிவில் நவீனத் தொழில் துறையும் அனைத்து உலகச் சந்தையும் நிறுவப்பட்டதும் தனக்கு நவீன காலப் பிரதிநிதித்துவ அரசினில் ஏகபோக அரசியல் ஆதிக்கம் வென்று கொண்டது. நவீன கால அரசின் ஆட்சியதிகாரமானது முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறல்ல.

வரலாற்று அரங்கில் முதலாளித்துவ வர்க்கம் மிகவும் புரட்சிகரமான பங்காற்றியிருக்கிறது.

எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது எல்லாப் பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமாந்திரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. மனிதனை "இயற்கையாகவே மேலானோருக்குக்"கீழ்ப் படுத்திக் கட்டிப்போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்துவட்டு, மனிதனுக்கும் மனிதனுக்கும் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர, பரிவு உணர்ச்சியில்லாப் "பணப் பட்டுவாடா"வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கிற்று. சமயத் துறைப் பக்தி பரவசம், பேராண்மையின் வீராவேசம், சிறு மதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புனிதப் பந்தங்களையெல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனி குளிர் நீரில் மூழ்கடித்துள்ளது.

மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விளக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கங் கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில் சமயத் துறைப் பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டி இருக்கிறது.

இதுகாறும் போற்றிப் பாராட்டப்பட்டு, பணிவுக்கும் பக்திக்குமுரியதாய்க் கருதப்பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமய குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலியுழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது.

குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முகத்திரையைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவை வெறும் காசுபண உறவாய்ச் சிறுமையுறச் செய்து விட்டது. பிற்போக்கர்கள் போற்றிப் பாராட்டுகிறார்களே மத்திய காலத்துப் பேராண்மையின் முரட்டுக் கூத்து, அது எவ்வளவு மூடத்தனமான செயலின்மையைத் தனது உற்ற துணையாய்க் கொண்டிருந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் நிதர்சனமாக்கியிருக்கிறது. மனிதச் செயற்பாடு என்னவெல்லாம் செய்ய வல்லது என்பதை முதன் முதலாய்த் தெரியப்படுத்தியது முதலாளித்துவ வர்க்கம் தான். எகிப்திய பிரமிடுகளையும் ரோமானியக் கட்டுக் கால்வாய்களையும் கோகித் தேவாலயங்களையும் மிஞ்சிய மாபெரும் அதிசயங்களை அது சாதித்திருக்கிறது; முற்காலத்துக் குடிப் பெயர்ச்சிப் பயணங்களும் சிலுவைப் போர்ப் பயணங்களும் அற்ப காரியங்களாய்த் தோன்றும் படியான தீரப் பயணங்களை நடத்தியிருக்கிறது.

முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது. ஆனால் இதற்கு முந்திய தொழில் வர்க்கங்களுக்கு எல்லாம் பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வது தான் வாழ்வதற்குரிய முதலாவது நிபந்தனையாய் இருந்தது. ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும் சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும் முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும் கொந்தளிப்பும் முதலாளித்துவச் சகாப்தத்தை அதற்கு முந்திய எல்லாச் சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலையான, இறுகிக் கெட்டிப் பிடித்துப் போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்த பழங்காலத் தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன, புதிதாய் உருவாகியவை எல்லாம் இறுகிக் கெட்டியாவதற்கு முன்பே பழமைப்பட்டு விடுகின்றன. கெட்டியானவை யாவும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை‌ ‌‌‍யாவும் புனிதம் இழக்கின்றன. முடிவில் மனிதன் தெளிந்த புத்தியுடன் தனது வாழ்க்கையின் மெய்யான நிலைமைகளையும் தனது சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் நேர் நின்று உற்று நோக்க வேண்டியதாகிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து மேலும் மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியமாகும். இந்த அவசியம் முதலாளித்துவ வர்க்கத்தைப் புவிப்பரப்பு முழுதும் செல்லும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக் கொள்ள வேண்டியதாகிறது, எல்லா இடங்களிலும் குடியேற வேண்டியதாகிறது, எல்லா இடங்களிலும் தொடர்புகள் நிறுவிக் கொள்ள வேண்டியதாகிறது.

அனைத்து உலகச் சந்தையைப் பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. பிற்போக்கர்கள் கடுங்கோபங் கொள்ளும்படி அது தொழில்களது காலுக்கு அடியிலிருந்து அவற்றின் தேசிய அடிநிலத்தை அகற்றியுள்ளது. நெடுங் காலமாய் நாட்டிலே இருந்துள்ள தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டு விட்டன, அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களைத் தோன்றச் செய்வது நாகரிக நாடுகள் யாவற்றுக்கும் ஜீவ மரணப் பிரச்சினையாகி விடுகிறது. முன்பிருந்தவற்றைப் போல் இந்தப் புதிய தொழில்கள் உள்நாட்டு மூலப் பொருள்களை மட்டும் உபயோகிப்பவை அல்ல, தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படும் மூலப் பொருள்களை உபயோகிப்பவை.

இவற்றின் உற்பத்திப் பொருள்கள் தாய் நாட்டில் மட்டுமின்றி, உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டு எல்லாப் பகுதிகளிலும் நுகரப்படுகிறவை. தாய்நாட்டு உற்பத்திப் பொருள்களால் பூர்த்தி செய்யப்பட்டு பழைய தேவைகளுக்குப் பதில், தொலைதூர நாடுகள், மண்டலங்களது உற்பத்திப் பொருள்களால் பூர்த்தி செய்யப்படும் புதிய தேவைகள் எழுகின்றன.

வட்டாரங்கள், நாடுகள் இவற்றின் பழைய ஒதுக்க நிலைக்கும் தன்னிறைவுக்கும் பதில், எல்லாத் திசைகளிலுமான நெருங்கிய தொடர்பும் உலக அளவில் நாடுகளுக்கிடையிலான சார்புடைமையும் ஏற்படுகின்றன.

பொருள் உற்பத்தியில் எப்படியோ அப்படியேதான் அறிவுத்துறை உற்பத்தியிலும் தனித் தனி நாடுகளுடைய அறிவுத்துறைப் படைப்புகள் எல்லா நாடுகளுக்குமான பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்ச பார்வையும் குறுகிய மனப்பாங்கும் மேலும் மேலும் இயலாதனவாகின்றன. நாட்டளவிலும் மண்டல அளவிலுமான எத்தனையோ பல இலக்கியங்களிலிருந்து ஓர் அனைத்துலக இலக்கியம் உருவாகின்றது.


இணைப்புகள்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-7

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-6

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-5

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-4

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-3

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-2

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-1


                                                                                                          

No comments:

Post a Comment