Saturday, April 27, 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-6

பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்

ஒட்டு மொத்தமாய்ப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் உறவு என்ன?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாய் இருக்கவில்லை. அவர்கள் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்றி தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள். பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்க அவர்கள் தமக்கெனக் குறுங்குழுக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை. ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து கம்யூனிஸ்டுகளை வேறுபடுத்திக் காட்டுகிறவை பின்வருவன மட்டுமே தான்;


1. வெவ்வேறு நாடுகளிலும் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரித்தான பொது நலன்களைச் சுட்டிக் காட்டி முன்னிலைக்குக் கொண்டு வருகிறார்கள்.

2. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி போராட்டம் கடந்து செல்ல வேண்டியிருக்கும் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

ஆகவே நடைமுறையில் கம்யூனிஸ்டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய, மிகவும் வைராக்கியமான பகுதியாய், ஏனைய எல்லோரையும் முன்னோக்கி உந்தித் தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள்; தத்துவார்த்தத்தில் அவர்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழி நடப்பையும் நிலைமைகளையும் பொதுவான இறுதி விளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுவேதான்: பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப் பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தை வென்று கொள்வதும்தான். கம்யூனிஸ்டுகளுடைய தத்துவார்த்த முடிவுகள் உலகைப் புத்தமைக்க நினைக்கும் இந்த, அல்லது அந்தச் சீர்திருத்தாளர் புனைந்தமைத்தோ, கண்டுபிடித்தோ கூறிய கருத்துகளை அல்லது கோட்பாடுகளை எவ்வகையிலும் அடிப்படையாய்க் கொண்டவையல்ல.

நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிரே நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்திலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளையே இந்த முடிவுகள் பொதுப்பட எடுத்துரைக்கின்றன. நடப்பிலுள்ள சொத்துடைமை உறவுகளை ஒழிப்பது எவ்விதத்திலும் கம்யூனிசத்துக்கு உரித்தான ஒரு தனிச் சிறப்பல்ல.

வரலாற்று நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாய்ச் சொத்துடைமை உறவுகள் யாவும் கடந்த காலத்தில் தொடர்ந்தாற்போல் வரலாற்று வழியில் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன.

எடுத்துக்காட்டாய் பிரெஞ்சுப் புரட்சியானது. பிரபுத்துவச் சொத்துடைமையை ஒழித்து அதனிடத்தில் முதலாளித்துவச் சொத்துடைமையை நிலைநாட்டிற்று.

பொதுப்பட சொத்துடைமையை ஒழிப்பதல்ல, முதலாளித்துவச் சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிசத்திற்குரிய சிறப்பியல்பு. ஆனால் நவீன முதலாளித்துவத் தனிச் சொத்துடைமையானது வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில், ஒருசிலர் மிகப் பலரைச் சுரண்டுவதன் அடிப்படையில் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் சுவீகரிப்பதற்குமான அமைப்பின் இறுதியான, மிகவும் நிறைவான வெளிப்பாடாகும்.

இந்த அர்த்தத்தில் கம்யூனிஸ்டுகளுடைய தத்துவத்தை இரத்தனச் சுருக்கமாய், தனிச் சொத்துடைமையை ஒழித்திடல் என்பதாய்க் கூறலாம். 

ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையை கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள்; இந்தத் தனிச் சொத்துதான் தனியாளின் சுதந்திரம், செயற்பாடு, சுயேச்சை வாழ்வு ஆகியவற்றுக்கு எல்லாம் அடிநிலை என்கிறார்கள்.

பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது! இங்கே நீங்கள் குறிப்பிடுவது எந்தச் சொத்து? சிறு கைவினைஞர், சிறு விவசாயி ஆகியோரது சொத்தா? அதாவது முதலாளித்துவச் சொத்து வடிவத்துக்கு முற்பட்ட தாகிய சொத்து வடிவமா? இம்மாதிரியான சொத்தை ஒழிக்கத் தேவையில்லை; தொழில் வளர்ச்சியானது இதை ஏற்கெனவே பெருமளவுக்கு அழித்து விட்டது, இனியும்
நாள்தோறும் அழித்து வருகிறது.

அல்லது நவீன கால முதலாளித்துவத் தனிச் சொத்தையா குறிப்பிடுகிறீர்கள்?

ஆனால் கூலியுழைப்பானது பாட்டாளிக்குச் சொத்தையா படைத்தளிக்கிறது? இல்லவே இல்லை. அது படைப்பது மூலதனம்தான்; அதாவது கூலி உழைப்பைச் சுரண்டுவதும்  புதிதாய்ச் சுரண்டுவதற்கு புதிதாய்க் கூலியுழைப்பு கிடைக்காவிடில் அதிகரிக்க முடியாததுமாகிய சொத்து வகைதான். சொத்தானது அதன் தற்கால வடிவில் மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலான பகைமையை அடிப்படையாய்க் கொண்டதாகும். இந்தப் பகைமையின் இரு தரப்புகளையும் பரிசீலிப்போம்.

முதலாளியாய் இருப்பதற்கு அர்த்தம் பொருளுற்பத்தியில் தனியாள் வழியில் மட்டுமின்றி சமூக வழியிலுமான அந்தஸ்து வகிப்பதாகும். மூலதனமானது கூட்டுச் செயற்பாட்டினால் விளைவதாகும்; சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே அதை இயங்க வைக்க முடியும்.

எனவே மூலதனம் தனியாளின் சக்தியல்ல, சமூக சக்தி.

ஆகவே மூலதனமானது பொதுச் சொத்தாய், சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்குமான சொத்தாய் மாற்றப்படும் போது, தனியாளின் சொத்து அதன் மூலம் சமூகச் சொத்தாய் மாற்றப்படவில்லை. சொத்தின் சமூகத் தன்மைதான் மாற்றப்படுகிறது. சொத்தானது அதன் வர்க்க தன்மையை இழந்து விடுகிறது.

இனி கூலியுழைப்பைப் பரிசீலிப்போம்.

கூலியுழைப்பின் சராசரி விலைதான் குறைந்த பட்சக் கூலி, அதாவது தொழிலாளி தொழிலாளியாய்த் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாய்த் தேவைப்படும் அமைப்புச் சாதனங்களின் மொத்த அளவு. ஆகவே கூலித் தொழிலாளி தமது உழைப்பின் மூலம் சுவீகரித்துக் கொள்வது எல்லாம், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் இவ்வாழ்வினைப் புனருற்பத்தி செய்வதற்கும் மட்டும்தான் போதுமானது. உழைப்பின் உற்பத்திப் பொருள்களிலான இந்தத் தனியாள் சுவீகரிப்பை, மனித உயிர் வாழ்வின் பராமரிப்புக்காகவும் புனருற்பத்திக்காகவும் வேண்டியதை மட்டும் அளித்து, ஏனையோரது உழைப்பின் மீது ஆளுமை செலுத்த உபரியாய் எதையும் விட்டு வைக்காத இந்தச் சுவீகரிப்பை ஒழிக்க வேண்டுமென்ற விருப்பம் எங்களுக்குக் கிஞ்சித்தும் இல்லை. இந்தச் சுவீகரிப்பின் இழிவான தன்மையைத்தான், மூலதனத்தைப் பெருகச் செய்வதற்கு மட்டுமே தொழிலாளி வாழ்கிறான், ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும் வரை மட்டுமே தொழிலாளிக்கு வாழ அனுமதி உண்டு என்ற இந்த இழிவான தன்மையைத்தான் நாங்கள் ஒழித்திட விரும்புகிறோம்.

முதலாளித்துவ சமுதாயத்தில் உயிருள்ள உழைப்பு சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பைப் பெருகச் செய்வதற்குரிய ஒரு சாதனமாகவே இருந்து வருகிறது. கம்யூனிச சமுதாயத்தில் சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பானது தொழிலாளியின் வாழ்வை விரிவு பெற்று வளமடைந்து ஓங்கச் செய்வதற்கான ஒரு சாதனமாகவே இருக்கும்.

ஆகவே முதலாளித்துவ சமுதாயத்தில் கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் புரிகிறது; கம்யூனிச சமுதாயத்தில் நிகழ்காலம் கடந்த காலத்தின் மீது ஆதிக்கம் புரியும். முதலாலித்துவ சமுதாயத்தில் மூலதனம் சுயேச்சையாய், தனித்தன்மை கொண்டதாய் இருக்கிறது; அதேநேரம் உயிருள்ள ஆள் சுயேச்சையற்றவனாய், தனித்தன்மை இல்லாதவனாய் இருக்கின்றான்.

இப்படிப்பட்ட உறவுகளை ஒழிப்பதைத் தனியாளது தனித்தன்மையின் ஒழிப்பாய், சுதந்திரத்தின் ஒழிப்பாய்க் கூறுகிறார்கள் முதலாளிகள்! சந்தேகமே வேண்டாம், முதலாளித்துவத் தனித்தன்மையையும் முதலாளித்துவ சுயேச்சையையும் முதலாளித்துவ சுதந்திரத்தையும் ஒழிப்பதுதான் குறிக்கோள்.

தற்போதுள்ள முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளில், சுதந்திரம் என்பதற்கு சுதந்திரமான வாணிபம், சுதந்திரமான விற்பனையும், வாங்குதலும் என்றே அர்த்தம்.

ஆனால் விற்பனையும் வாங்குதலும் மறையும்போது சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும் கூடவே மறைந்து போகும். சுதந்திரமான விற்பனை, வாங்குதல் என்ற பேச்சுக்கும் பொதுப்பட சுதந்திரத்தை பற்றிய நமது முதலாளித்துவ வர்க்கத்தாரது ஏனைய எல்லாத் "தீரச் சொல்வீச்சுகளுக்கும்'' எதாவது அர்த்தம் இருக்குமாயின், அது மத்திய காலத்திய கட்டுண்ட விற்பனையுடனும் வாங்குதலுடனும் வணிகர்களுடனும் ஒப்பிடும்போது மட்டும்தான். ஆனால் விற்பனையும் வாங்குதலும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளும், இவற்றோடு முதலாளித்துவ வர்க்கமும்கூட கம்யூனிசத்தின் மூலம் ஒழிக்கப்படுவதற்கு எதிராய் முன் வைக்கப் படுகையில் இந்தப் பேச்சுகள் யாவும் அர்த்தமற்றுப் போகின்றன.

தனிச்சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்குத் தனிச் சொத்து ஏற்கெனவே இல்லாமல் ஒழிக்கப்பட்டு விட்டது; ஒருசிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கானோரிடத்தே அது இல்லாது ஒழிந்தது தான். ஆக சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று
எங்களை ஏசுகிறீர்கள்!

கருங்கச் சொல்வதெனில், உங்களுடைய சொத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று ஏசுகிறீர்கள். ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.

எத்தருணம் முதல் உழைப்பை மூலதனமாய், பணமாய், நிலவாடகையாய் - ஏகபோகமாக்கிக் கொண்டு விடுவதற்கு ஏற்ற ஒரு சமூக சக்தியாய் - மாற்ற முடியாமற் போகிறதோ, அதாவது எத்தருணம் முதல் தனியாளின் சொத்தினை முதலாளித்துவச் சொத்தாய், மூலதனமாய் மாற்ற முடியாமற் போகிறதோ, அத்தருணம் முதற்கொண்டே தனியாளின் தனித்தன்மை மறைந்து விடுவதாய் நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆதலால் ''தனியாள்' என்னும் போது நீங்கள் முதலாளியையே தவிர, மத்தியதர வர்க்கச் சொத்துடைமையாளரையே தவிர, வேறு யாரையும் குறிப்பிடவில்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இம்மாதிரியான தனியாள் மெய்யாகவே மறையத்தான் வேண்டும், இருக்க முடியாதபடிச் செய்யப்படத்தான் வேண்டும்.

சமுதாயத்தின் உற்பத்திப் பொருளைச் சுவீகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கம்யூனிசம் எம்மனிதனிடமிருந்தும் பறிக்கவில்லை; இப்படிச் சுவீகரித்துக் கொள்வதன் மூலம் அவன் ஏனையோரது  உழைப்பை அடிமைப்படுத்துகிறவனாகும் வாய்ப்பை தான் அது அவனிடமிருந்து பறிக்கிறது.



No comments:

Post a Comment