Wednesday, April 24, 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-5

பழைய சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்குகளிலிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய "அபாயகரமான வர்க்கம்" பாட்டாளி வர்க்கப் புரட்சியால் எங்கேனும் ஒருசில இடங்களில் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சதியின் கைக் கருவியாய் லஞ்சம் பெற்று ஊழியம் புரியவே மிகப் பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றன.

பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளில் பழைய சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகள் ஏற்கெனவே அனேகமாய்ப் புதையுண்டு விடுகின்றன. பாட்டாளிக்குச் சொத்து ஏதும் இல்லை, மனைவி மக்களிடத்து அவனுக்குள்ள உறவுக்கும் முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் பொதுவானது இப்போது எதுவும் இல்லை. பிரான்சில் எப்படியோ அதே போல் இங்கிலாந்திலும், ஜெர்மனியில் எப்படியோ அதே போல் அமெரிக்காவிலும், நவீனத் தொழில்துறை உழைப்பானது, மூலதனத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கும் நவீன அடிமை நிலையானது, பாட்டாளி யிடமிருந்து தேசியத் தனித் தன்மையில் எந்தச் சாயலையும் விட்டு வைக்காமல் துடைத்தெடுத்து விட்டது. இந்தப் பாட்டாளிக்கு, சட்டம், ஒழுக்க நெறி, சமயம் ஆகியவை அத்தனையும் அத்தனை விதமான முதலாளித்துவ நலன்கள் பதுங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவத் தப்பெண்ணங்களே அன்றி வேறல்ல.

மேலாதிக்கம் பெற்ற முந்திய வர்க்கங்கள் யாவும் வாழ்க்கையில் ஏற்கனவே தாம் அடைந்திருந்த உயர் நிலைக்கு அரண் அமைத்துக் கொள்ளும் பொருட்டுத் தமது சுவீகரிப்பு முறைக்கு சமுதாயம் முழுவதையும் கீழ்ப்படுத்த முற்பட்டன. ஆனால் பாட்டாளிகள் தமது முந்திய "வகாப்பு முறையையும், ஆகவே ஏனையோரது முந்திய வீகரிப்பு முறைகள் யாவற்றையும் ஒழித்திடாமல் சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கு எஜமானர்களாக முடியாது. அவர்கள் பாதுகாத்துக் கொள்ளவும் அரண் அமைத்துக் கொள்ளவும் சொந்தத்தில் ஏதும் இல்லாதவர்கள், தனியார் சொத்துடைமைக்கு இதற்கு முன்பிருந்த பாதுகாப்புகளையும் காப்புறுதிகளையும் தகர்த்து ஒழிப்பதே அவர்களது இலட்சியப் பணி.

முந்தைய வரலாற்று இயக்கங்கள் எல்லாம் சிறுபான்மையோரது இயக்கங்களே, அல்லது சிறு பான்மையோரது நலனுக்கான இயக்கங்களே ஆகும். ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பெருவாரியானோரது நலனுக்காக மிகப் பெருவாரியானோர் தன்னுணர்வோடு நடத்தும் சுயேச்சையான இயக்கமாகும். தற்கால சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்காகிய பாட்டாளி வர்க்கமானது அங்கீகாரம் பெற்ற சமுதாயத்தில் மேலமைந்த அத்தனை அடுக்குகளையும்
காற்றிலே பறந்தெழச் செய்யாமல் அசையவோ நிமிர்ந்து நிற்கவோ முடியாது.

முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லையேனும் எப்படியும் வடிவத்தில், ஆரம்பத்தில் தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன்தான் முதலில் கணக்கு தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பாட்டாளி வர்க்கத்தினது வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை விவரித்த நாம், தற்கால சமுதாயத்தில் ஏறக்குறைய திரை மறைவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை, அது பகிரங்கப் புரட்சியாய் வெடித்து, முதலாளித்துவ வர்க்கம் பலாத்காரமாய் வீழ்த்தப்படுவதன் மூலம் பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் நிலை வரையில் உருவரை தீட்டிக் காட்டினோம்.

இதுகாறும் சமூக அமைப்பு ஒவ் வொன்றும், ஏற்கெனவே நாம் கண்ணுற்றது போல், ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையை யே அடிப்படையாய்க் கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்கி வைக்க வேண்டுமாயின், அந்த வர்க்கம் தொடர்ந்து தனது அடிமை நிலையிலாவது நீடிப்பதற்கு அவசியமான குறிப்பிட்ட நிலைமைகளை அதற்கு உத்தரவாதம் செய்து தந்தாக வேண்டும். பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை தன்னை நகர சமுதாய உறுப்பினனாய் உயர்த்திக் கொள்ள முடிந்தது.

அதே போல் பிரபுத்துவ எதேச்சாதிகாரத்தின் ஒடுக்குமுறையில் குட்டி முதலாளித்துவப் பிரிவினர் முதலாளியாய் வளர முடிந்தது. ஆனால் நவீன காலத்திய தொழிலாளி இதற்கு மாறாய், தொழில் முன்னேற்றத்துடன் கூடவே உயர்ந்து செல்வதற்குப் பதில், தனது வர்க்கம் நிலவுவதற்கு அவசியமான நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து செல்கிறான். அவன் ஓட்டாண்டியாகி ஏதும் இல்லாதான் ஆகின்றான்; மக்கள் தொகையையும் செல்வத்தையும் காட்டிலும் இல்லாமை அதிவேகமாய் அதிகரிக்கிறது.

ஆகவே இப்போது தெட்டத் தெளிவாய்த் தெரிகிறது - முதலாளித்துவ வர்க்கம் இனி சமுதாயத்தின் ஆளும் வர்க்கமாய் இருக்கத் தகுதியற்றது, தான் நீடித்து நிலவுவதற்கு வேண்டிய நிலைமைகளை யாவற்றுக்கும் மேலான சட்டவிதியாய் இனியும் சமுதாயத்தின் மீது பலவந்தமாய் இருத்தத் தகுதியற்றது என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது. அது ஆளத் தகுதியற்றதாகிறது - ஏனெனில் அதன் அடிமை அவனது அடிமை நிலையில் தொடர்ந்து வாழ்வதற்கு அதனால் வகை செய்ய முடியவில்லை; அவன் அதற்கு உண்டி அளிப்பதற்குப் பதில் அது அவனுக்கு உண்டி அளிக்க வேண்டிய ஒரு நிலைக்கு அதன் அடிமை தாழ்ந்து செல்வதை அதனால் தடுக்க முடிய வில்லை . சமுதாயம் இனி இந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பணிந்து வாழ முடியாது.

அதாவது முதலாளித்துவ வர்க்கம் இனியும் தொடர்ந்து நீடிப்பது சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.

மூலதனம் உருவாதலும் பெருகிச் செல்லுதலும் தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுதற்கும் ஆதிக்கம் புரிவதற்குமான அத்தியாவசிய நிபந்தனை. கூலி உழைப்புதான் இந்த மூலதனத்துக்கு அத்தியாவசிய நிபந்தனையாய் அமைகிறது. கூலியுழைப்பானது தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியையே ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஊக்குவிக்க வேண்டியிருக்கும் தொழில் முன்னேற்றமானது, தொழிலாளர்களிடையே போட்டியின் விளைவான தனிமைப்பாட்டை நீக்கி, ஒற்றுமையின் விளைவான புரட்சிகர இணைவை உண்டாக்குகிறது. இவ்விதம் நவீனப் பெருவீதத் தொழிலின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம் பொருள்களை உற்பத்தி செய்தும் சுவீகரித்தும் வருகிறதோ அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆகவே முதலாளித்துவ வர்க்கம் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாய் உற்பத்தி செய்கிறது. இவ்வர்க்கத்தின் வீழ்ச்சியும், அதேபோல் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்க இயலாதவை.


இணைப்புகள்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-7

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-6

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-5

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-4

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-3

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-2

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-1


No comments:

Post a Comment