Thursday, April 18, 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-4

இந்த நெருக்கடிகளின் போது, இதற்கு முந்திய எல்லாச் சகாப்தங்களிலும் அடி முட்டாள்தனமாய்த் தோன்றியிருக்கும்படியான ஒரு கொள்ளை நோய் - அமித உற்பத்தி என்னும் கொள்ளை நோய் - மூண்டு விடுகிறது. திடுமென சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்பட்டுச் சிறிது காலத்துக்குக் காட்டுமிராண்டி நிலையில் விடப்படக் காண்கிறோம். பெரும் பஞ்சம், சர்வநாச முழுநிறைப் போர் ஏற்பட்டு வாழ்க்கைத் தேவைப் பொருள்கள் எவையும் கிடைக்காதபடி செய்து விட்டாற் போலாகிறது ; தொழிலும் வாணிபமும் அழித்தொழிக்கப்பட்டு விட்டதாய்த் தோன்றுகிறது - ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சி விட்டது, வாழ்க்கைத் தேவைப் பொருள்கள் அளவு மீறிவிட்டன. தொழிலும் வாணிபமும் எல்லை கடந்து விட்டன. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சிக்திகள் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்குப் பொருந்தாதபடி அளவு மீறி வலிமை மிக்கவையாகிவிட்டன. இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாகி விட்டன.

பொருளுற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் கடக்க முற்பட்டதும் அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் உண்டாக்குகின்றன. முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவை உற்பத்தி செய்யும் செல்வத்துக்குத் தம்முள் இடம் போதாத படி முதலாளித்துவச் சமூக உறவுகள் குறுகலாயிருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதலாளித்துவ வர்க்கம் எப்படிச் சமாளிக்கிறது ஒருபுறத்தில், வலுக்கட்டாயமாய் உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும், மறுபுறத்தில் புதிய சந்தைகளை வென்று கைப்பற்றுவதன் மூலமும் பழைய சந்தைகளை இன்னும் அழுத்திப் பிழிவதன் மூலமும் அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி கோலுவதன் மூலமும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கான வழிதுறைகளைக் குறைப்பதன் மூலமும், எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் பிரபுத்துவத்தை வீழ்த்திற்றோ, அதே ஆயுதங்கள் இப்பொழுது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்த் திருப்பப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்தொழிக்கப் போகும் ஆயுதங்களை வார்த்தெடுத்திருப்பதோடு அன்னியில், அந்த ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய ஆட்களையும் - பாட்டாளிகளாகிய நவீனத் தொழிலாளி வர்க்கத்தையும் - தோன்றியெழச் செய்திருக்கிறது.

எந்த அளவுக்கு முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் வளர்கிறதோ, பாட்டாளி வர்க்கமாகிய நவீனத் தொழிலாளி வர்க்கமும் அதே அளவுக்கு வளர்கிறது. இந்தத் தொழிலாளர்கள் தமக்கு வேலை தேடிக் கொள்ள முடிகிற வரைதான் வாழ முடியும், தமது உழைப்பு மூலதனத்தைப் பெருகச் செய்யும் வரைதான் வேலை தேடிக் கொள்ள முடியும். சிறுகச் சிறுகத் தம்மைத் தாமே விலைக்கு விற்க வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள் ஏனைய எல்லா விற்பனைப் பொருள்களையும் போல் தாமும் ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகவே இருக்கிறார்கள்; ஆகவே போட்டா போட்டியின் எல்லா அசம்பாவிதங்களுக்கும், சந்தையின் எல்லா ஏற்றஇறக்க அலைவுகளுக்கும் இலக்காகிறார்கள்.

விரிந்த அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவதன் விளைவாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும் பாட்டாளிகளுடைய வேலையானது தனித்தன்மையை முற்றும் இழந்து விட்டது; ஆதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகி விட்டது. இயந்திரத்தின் துணை உறுப்பு ஆகிவிடுகிறார் அவர்; மிகவும் எளிமையானதும், அலுப்புத் தட்டும்படியாய் ஒரே விதமானதும், ஆகவே சுலபமாய்ப் பெறத் தக்கதுமாகிய கைத்திறன்தான் அவருக்கு வேண்டி இருக்கிறது. எனவே தொழிலாளியினது உற்பத்திச் செலவு அனேகமாய் முற்றிலும் அவரது பராமரிப்புக்கும் அவரது இன விருத்திக்கும் தேவையான பிழைப்புச் சாதனங்களுக்கு மேற்படாத படி குறுகி விடுகிறது. ஆனால், பரிவர்த்தனைப் பண்டத்தின் விலை - ஆகவே உழைப்பின் விலை - அதன் உற்பத்திச் செலவுக்குச் சமமாகும்.

இதனால் வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாய் அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகிறது. அது மட்டுமல்ல, இயந்திரங்கள் பயன் படுத்திக் கொள்ளப்படுவதும் உழைப்புப் பிரிவினையும் எவ்வள்வுக்கு எவ்வளவு அதிகரிக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு வேலைப் பளுவும் அதிகமாகிறது - வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலயைக் கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ இன்ன பிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது. 

நவீனத் தொழில் துறையானது தந்தைவழிக் குடும்ப ஆண்டானுடைய சிறிய தொழிற்கூடத்தைத் தொழில் முதலாளியினது பெரிய தொழிற்சாலையாய் மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் நெருக்கமாய்க் கூட்டப்பட்டிருக்கும் திரளான தொழிலாளர்கள் படையாட்களைப் போல் ஒழுங்கமைக்கப் பட்டிருக்கிறார்கள். தொழில் துறைச் சேனையின் படையாட்களாகிய இவர்கள், ஆபீசர்கள் என்றும் சார்ஜெண்டுகள் என்றும் முற்றும் படிநிலைக் கிரமத்தில் அமைந்த படைத் தலைமையின் கீழ் இருத்தப்படுகிறார்கள். இவர்கள் அடிமைகளாய் இருப்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் மட்டுமல்ல; நாள்தோறும் மணிதோறும் இயந்திரத்தாலும், மேலாளர்களாலும், யாவருக்கும் முதலாய்த் தனித்தனி முதலாளித்துவ ஆலை யதிபராலும் இவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். 

இந்தக் கொடுங்கோன்மை எவ்வளவுக்கு எவ்வளவு பகிரங்கமாய் இலாபத்தைத் தனது இறுதி முடிவாகவும் குறிக்கோளாகவும் பிரகடனம் செய்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் இது இழிவானதாய், வெறுக்கத்தக்கதாய், கசப்பூட்டுவதாய் இருக்கிறது. உடலுழைப்புக்கு வேண்டிய திறமையும் உடல் வலிவும் குறையக் குறைய, அதாவது நவீனத் தொழில் துறையின் வளர்ச்சி மட்டம் உயர உயர, ஆடவரின் உழைப்பு மேலும் மேலும் அகற்றப்பட்டு அதனிடத்தில் பெண்களின் உழைப்பு அமர்த்தப்படுகிறது. வயது வேறுபாடும் ஆண், பெண் வித்தியாசமும் இனி தொழிலாளி வர்க்கத்துக்குத் தனியான எந்த சமூக முக்கியத்துவமும் இல்லாமற் போய் விட்டன. 

எல்லோருமே உழைப்புக் கருவிகள் தான், உபயோகித்துக் கொள்வதற்கு ஆகும் செலவுதான் வயதுக்கும் பாலுக்கும் ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது. ஆலை முதலாளியால் இது வரை சுண்டப்பட்ட தொழிலாளி, இந்தச் சுரண்டல் முடிவுற்று தனது கூலியைப் பணவடிவில் பெற்றுக் கொண்டவுடனே முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியோரான வீட்டுச் சொந்தக்காரராலும் கடைக்காரராலும் அடகு வட்டிக் கடைக்காரராலும் இன்ன பிறராலும் தாக்கப்படுகிறார். மத்தியதர வர்க்கத்தின் கீழ்த் தட்டுகளைச் சேர்ந்த சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், சிறு வாடகை, வட்டி வரு வாயினர், கைவினைஞர்கள், விவசாயிகள் ஆகிய எல்லோரும் சிறிது சிறிதாய்த் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கத்தை வந்தடைகிறார்கள். 

காரணம் என்னவெனில், முதலாவதாக அவர்களிடமுள்ள சொற்ப அளவு மூலதனம் நவீனத் தொழிலின் வீச்சுக்குப் போதாமல் பெரிய முதலாளிகளுடைய போட்டிக்குப் பலியாகி விடுகிறது, இரண்டாவதாக அவர்களுடைய தனித் தேர்ச்சியானது பொருளுற்பத்தியின் புதிய முறைகளால் மதிப்பற்றதாக்கப் படுகிறது. இவ்விதம் தேசமக்கள் தொகுதியைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பல்வேறு கட்டங்களைக் கொண்டதாகும். பிறந்ததுமே அது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துத் தனது போராட்டத்தைத் துவக்கி விடுகிறது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தைத் தனிப்பட்ட தொழிலாளர்களும், அடுத்து ஓர் ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற் கிளையைச் சேர்ந்த தொழிலாளர்களும் தம்மை நேரடியாய்ச் சுரண்டும் தனிப்பட்ட முதலாளிகளை எதிர்த்து நடத்துகிறார்கள். முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளை எதிர்த்து அவர்கள் தமது தாக்குதல்களைத் தொடுக்கவில்லை ; உற்பத்திக் கருவிகளையே தாக்குகிறார்கள். தமது உழைப்புக்குப் போட்டியாய் வந்த இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கிறார்கள். 

இயந்திரங்களை சுக்கு நூறாய்த் தகர்க்கிறார்கள்; ஆலைகளுக்குத் தீவைக்க எரிக்கிறார்கள்; மறைந்துவிட்ட மத்திய காலத்துத் தொழிலாளி நிலையை வன்முறையின் மூலம் மீட்டமைக்க முயலுகிறார்கள். இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள் இன்னமும் தம்மிடையே தொடர்பின்றி நாடெங்கிலும் சிதறியமைந்து திரளினராய் இருக்கிறார்கள்; தம்மிடையிலான போட்டியால் பிளவுபட்டிருக்கிறார்கள். எங்காவது ஒன்றுபட்டு முன்னிலும் ஒருங்கிணைந்த தொகுப்புகள் ஆகிறார்கள் என்றால், இன்னமும் அது அவர்களது செயல்திறன்மிக்க சொந்த ஒற்றுமையின் விளைவு அல்ல; முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்டதாகவே இருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பாட்டாளி வர்க்கம் அனைத்தையும் இயங்க வைக்க வேண்டி இருக்கிறது; சிறிது காலத்துக்கு அதனால் இப்படி இயங்க வைக்கவும் முடிகிறது. 

ஆகவே இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் தமது பகைவர்களை எதிர்த்துப் போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மீதமிச்சக் கூறுகளையும் நிலச்சுவான்தார்களையும் தொழில் துறையைச் சேராத முதலாளிகளையும் குட்டி முதலாளித்துவப் பிரிவோரையும்தான் எதிர்த்துப் போராடுகின்றனர். இவ்விதம் வரலாறு வழிப்பட்ட இந்த இயக்கம் முற்றிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்குள் இருக்கிறது; இவ்வழியில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியாகிறது. ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவதோடு கூட, மேலும் மேலும் பெருந்திரள்களாய் ஒன்று குவிகிறது; அதன் பலம் கூடுதலாகிச் செல்கிறது; அது இந்தப் பலத்தை மேன்மேலும் உணர்கின்றது. 

இயந்திரச் சாதனங்கள் உழைப்பின் இடையிலான பாகுபாடுகளை ஒழித்து அனேகமாய் எங்கும் கூலி விகிதங்களைக் கீழ்நிலையிலான ஒரே மட்டத்துக்குக் குறையச் செய்வதற்கு ஏற்ப, பாட்டாளி வர்க்க அணிகளினுள் வெவ்வேறு நலன்களும் வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமனமாக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளரும் போட்டியும் இதன் விளைவாய் மூளும் வாணிப நெருக்கடிகளும் தொழிலாளர்களுடைய கூலிகளை மேன்மேலும் அலைவுறச் செய்கின்றன. 

இயந்திரச் சாதனங்கள் ஓயாது ஒழியாது மேம்பாடடைந்து தொடர்ந்து மேலும் மேலும் வேகமாய் வளர்ந்து பெருகுவதானது, அவர்களுடைய பிழைப்பை மேன்மேலும் நிலையற்றுச் சரியச் செய்கிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையில் எழும் மோதல்கள் மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. இதனால் தொழிலாளர்கள் முத லாளிகளுக்கு எதிராய் இணைவுகள் (தொழிற்
சங்கங்கள்) அமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள்; கூலிகள் குறையாதவாறு பாதுகாத்துக் கொள்ள அவர்கள் ஒன்றிணைகிறார்கள். 

அவ்வப்போது மூண்டு விடும் இந்த மோதல்களுக்கு முன்னேற்பாடாய் நிரந்தரமான சங்கங்களை நிறுவிக் கொள்கிறார்கள். சிற்சில இடங்களில் இந்தப் போராட்டம் கலகங்களாய் வெடிக்கின்றன. சிற்சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் வெற்றியடைகிறார்கள். ஆனால் இவ்வெற்றிகள் சிறிது காலத்துக்கு மேல் நீடிப்பதில்லை. அவர்களுடைய போராட்டங்களது மெய்யான பலன் உடனடி விளைவில் அல்ல, தொழிலாளர்களது இடையறாது விரிவடையும் ஒற்றுமையில் காணக் கிடக்கிறது. நவீனத் தொழில் துறையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வளர்ச்சியுற்ற போக்குவரத்துச் சாதனங்கள், வெவ்வேறு வட்டாரங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒருவரோடொருவர் தொடர்பு பெறச் செய்து இந்த ஒற்றுமைக்குத் துனை புரிகின்றன. யாவும் ஒரே தன்மையனவாய் இருக்க, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களும் இடையே தேச அளவில் நடை பெறும் ஒருமித்த போராட்டமாய் மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாய் இருந்தது. வர்க்கப் போராட்டம் ஒவ்வொன்றும் ஓர் அரசியல் போராட்டமாகும். 

மத்திய கால நகரத்தார் அக்காலத்திய படுமோசமான சாலைகளின் துணை கொண்டு பெறுவதற்குப் பன்னூறு ஆண்டுகள் தேவைப்பட்ட அந்த ஒற்றுமையை நவீனப் பாட்டாளிகள் ரயில் பாதைகளின் துணை கொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே பெறுகிறார்கள். பாட்டாளிகள் இவ்விதம் ஒரு வர்க்கமாகவும், ஆகவே ஓர் அரசியல் கட்சியாகவும் ஒழுங்கமைப்பு பெறும் நிகழ்வானது தொழிலாளர்களிடத்தே ஏற்படும் போட்டியால் ஓயாமல் மீண்டும் குலைக்கப்படுகிறது. ஆயினும் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிவும் உறுதியும் சக்தியும் மிக்கதாய்த் திரும்பத் திரும்ப உயர்ந்து எழுகிறது. இது முதலாளித்து வ வர்க்கத்தாரிடத்தே இருக்கும் பிளவுகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயம் செய்து, தொழிலாளர்களுக்குரிய தனி நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் பெறுகிறது. இங்கிலாந்தில் பத்து மணி நேர வேலை நாள் மசோதா இவ்வாறுதான் சட்டமாய் நிறைவேற்றப்பட்டது. பொதுவாய்ப் பேசுமிடத்து, தொழிலாளி வர்க்க வளர்ச்சிப் போக்குக்குப் பழைய சமுதாயத்தின் வர்க்கங்களிடையே எழும் மோதல்கள் பல வழிகளிலும் உதவியாய் இருக்கின்றன. 

முதலாளித்துவ வர்க்கம் இடையறாத போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது; ஆரம்பத்தில் பிரபுக் குலத் தோருடனும் பிற்பாடு முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில் முன்னேற்றத்துக்கு விரோதமாகி விடும் போது இந்தப் பகுதிகளுடனும், எக்காலத்துமே அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடனும் அது போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டங்களின் போது முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கத்தை அணுகி வேண்டுகோள் விடுக்கும் படியும், அவ்வர்க்கத்தின் உதவியை நாடும் படியும், இவ்விதம் அதை அரசியல் அரங்கில் பிரவேசிக்குமாறு இழுக்கும்படியும் நேருகிறது. ஆகவே முதலாளித்துவ வர்க்கமே பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டிய அரசியல் கல்வி, பொதுக் கல்வி ஆகியவற்றின் கூறுகளை அதற்கு அளித்திடுகிறது. 

அதாவது தன்னையே எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதங்களை அது பாட்டாளி வர்க்கத்துக்கு வழங்குகிறது. தவிரவும், மேலே நாம் கண்ணுற்றது போல், தொழில் முன்னேற்றத்தின் விளைவாய் ஆளும் வர்க்கங்களில் முழு முழுப் பிரிவுகள் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன, அல்லது குறைந்தது அவை தமது வாழ்வு நிலைமைகளை இழக்கும் படியான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இப்பிரிவுகளும் பாட்டாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் பல புதிய கூறுகளை வழங்குகின்றன. 

இறுதியில், வர்க்கப் போராட்டம் முடிவு கட்டும் நிலையை நெருங்கும் நேரத்தில் ஆளும் வர்க்கத்தி னுள்ளும் பழைய சமுதாய அனைத்தினுள்ளும் நடந்தேறும் சிதைவுப் போக்கானது அவ்வளவு உக்கிரமுற்றுப் பட்டவர்த்தனமாகி விடுவதால், ஆளும் வர்க்கத்திலிருந்து ஒரு சிறு பிரிவு துண்டித்துக் கொண்டு அதனிடமிருந்து விலகி எதிர்காலத்தைத் தன் பிடியில் கொண்டிருக்கும் வர்க்கமாகிய புரட்சி வர்க்கத்துடன் சேருகிறது. இதற்கு முந்திய காலத்தில் எப்படிப் பிரபுக்களில் ஒரு பிரிவினர் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்புக்குச் சென்றார்களோ, அதே போல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தாரில் ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத் தரப்புக்குச் செல்கின்றனர்; குறிப்பாய் முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளில் வரலாற்று இயக்கத்தை ஒட்டுமொத்தமாய் தத்துவார்த்த வழியில் புரிந்து கொள்ளும் நிலைக்கு உயர்ந்துவிட்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத் தரப்புக்குச் செல்கின்றனர். 

இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றன, பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது. 

மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லோரும் தொடர்ந்து தாம் மத்தியதர வகுப்பினராய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித் தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும்கூட; ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்ய முயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய்ப் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம்; இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல ; பாட்டாளி வர்க்கத்தின் நோக்கு நிலையை ஏற்கும் பொருட்டு, தமது சொந்த நோக்கு நிலையைக் கைவிடுகிறார்கள்.


இணைப்புகள்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-7

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-6

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-5

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-4

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-3

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-2

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-1




No comments:

Post a Comment