உழைக்கும் மக்கள் அல்லது பாட்டாளி வர்க்கத்திற்கான பொருளாதார தீர்வை அறிவியல்பூர்வமாக அணுகிய பொருளாதார மற்றும் சமூக அறிஞர் காரல் மார்க்ஸ் ஆவார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பல்வேறு மொழிகளில், பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்டது.
1872 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு.
1882 ஆம் ஆண்டு ரஷ்ய பதிப்பு.
1883ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு.
1888 ஆம் ஆண்டு ஆங்கில பதிப்பு.
1890ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு.
1892 ஆம் ஆண்டு போலிஷ் பதிப்பு.
இந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்தியாவில் முதன்முதலில் தமிழில் தான் மொழிபெயர்க்கப்பட்டது. அதைச் செய்தவர் தந்தை பெரியார். நாம் இங்கு, 1888ஆம் ஆண்டு வெளியான எங்கெல்சால் சரிபார்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பின் தமிழாக்கத்தை, பகுதி பகுதிகளாக பார்க்கலாம்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்- கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும், ஜார் அரசனும், மெட்டர்னிஹூம் கிஸோவும், பிரஞ்சுத் தீவிரவாதிகளும், ஜெர்மன் உளவாளிகளும், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காக புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.
ஆட்சியிலுள்ள தனது எதிரிகளால் கம்யூனிஸ்டு என்று ஏசப்படாத எதிர்கட்சி எங்கேனும் உண்டா? கம்யூனிசம் என்று இடித்துரைத்துத் தன்னிலும் முன்னேறிய எதிர்த்தரப்பாருக்கும் மற்றும் பிற்போக்கான தனது எதிரிகளுக்கும் பதிலடி கொடுக்காத எதிர்க்கட்சி தான் உண்டா?
இரண்டு முடிவுகள் இவ்வுண்மையிலிருந்து எழுகின்றன;
1. கம்யூனிசம் ஆனது ஒரு தனிப்பெரும் சக்தியாகி விட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டன.
2. பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய்க் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தை பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இந்த நோக்கத்துடன், பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி, கீழ்கண்ட அறிக்கையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஃபிளெமிஷ், டேனிஷ் மொழிகளில் வெளியிடுவதற்காக வேலை திட்டம் வகுத்தனர்.
முதலாளிகளும் பாட்டாளிகளும்
இதுநாள் வரையிலுமாய் சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்.
சுதந்திரமுடையானும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலெபியப் பாமரக் கொடியோனும் நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும் கைவினைப் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகை கொண்டோராய், ஒரு நேரம் மறைமுகமாகவும், ஒரு நேரம் பகிரங்கமாகவும், இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்களது பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று.
வகுப்புகளில் அனேகமாய் ஒவ்வொன்றிலும் படிநிலை உட்பிரிவுகளும் இருக்கக் காண்கிறோம்.
பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டி விடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை.
ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சமூகத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது; சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இருபெரும் வர்க்கங்களாய் - முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய் பிளவுண்டு வருகிறது.
மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிடமிருந்து ஆதி நகரங்களின் சுதந்திர நகரத்தார் உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிடமிருந்து முதலாளித்துவ வர்க்கத்தின் ஆரம்ப கூறுங்கள் வளரலாயின.
அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதாளும், ஆப்பிரிக்க நன்நம்பிக்கை முனையை சுற்றி செல்லும் கடல்வழி கண்டறியப்பட்டதாலும், தலைதூக்கி வந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்தன. கிழக்கு இந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்காவில் குடியேற்றம், காலணிகளுடலான வாணிபம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாய் பரிவர்த்தனைப் பண்டங்களிலும் ஏற்பட்ட பெருக்கம் ஆகிய இவை எல்லாம் வாணிபத்திற்கும் கப்பல் போக்குவரத்து தொழில் துறைக்கும் இதன் முன் என்றும் கண்டிராத அளவுக்கு ஊக்கமூட்டின; ஆட்டங்கண்டுவிட்ட பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிக் கூறு வேகமாய் வளர்வதற்கு இவ்விதம் இவை தூண்டுதல் அளித்தன.
பிரபுத்துவ முறையில் அமைந்த தொழில் அமைப்பில் தொழிற் பண்டங்களது உற்பத்தியானது தனியுரிமை பெற்ற கைவினைச் சங்கங்களின் ஏகபோகமாய் இருந்தது. இப்போது இந்தப் பிரபுத்துவத் தொழில் அமைப்பு புதிய சந்தைகளில் வளர்ந்து பெருகும் தேவைகளுக்கு ஒவ்வாததாகியது. இதன் இடத்தில் பட்டறைத் தொழில் முறை வளரலாயிற்று. கைவினைச் சங்க ஆண்டைகளைப் பட்டறைத் தொழில் மத்தியதர வர்க்கத்தார் அப்புறப்படுத்தினர். பல்வேறு கூட்டிணைவுகளாய் அமைந்த கைவினைச் சங்கங்களுக்கு இடையிலான உழைப்புப் பிரிவினை தனித்தனி தொழிலகத்திலுமான உழைப்புப் பிரிவினையின் முன்னால் நிற்க முடியாமல் மறைந்தொழிந்தது.
இதற்கிடையில் சந்தைகள் தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்து விரிவடைந்தன, தேவை மேன்மேலும் உயர்ந்து சென்றது. பட்டறைத் தொழில் முறையும் கூட இப்போது போதாதாகியது. இந்நிலையில்தான் நீராவியும் எந்திரங்களும் தொழிற் பண்டங்களின் உற்பத்தியில் புரட்சியை உண்டாக்கின. பட்டறைத் தொழில் முறை போய் அதன் இடத்தில் பிரம்மாண்டமான நவீன தொழில் துறை எழுந்தது; பட்டறைத் தொழில் மத்தியதர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீசுவரத் தொழிலதிபர்கள், பெரும் பெரும் தொழில்துறைப் பொருளுற்பத்திச் சேனைகளது அதிபதிகள், தற்காலத்து முதலாளிகள் உருவாயினர்.
நவீனத் தொழில்துறை அனைத்து உலகச் சந்தையை நிறுவியிருக்கிறது; அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதானது இதற்கும் பாதையைச் செப்பனிட்டது. வாணிபத்தையும் கடல்வழிப் போக்குவரத்தையும் நிலவழிப் போக்குவரத்தையும் அனைத்து உலகச் சந்தை பிரமாதமாய் வரச் செய்திருக்கிறது. இந்த வளர்ச்சி அதன் பங்கிற்கு மீண்டும் தொழில் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்து. எந்த அளவுக்குத் தொழில் துறையும் வாணிபமும் கப்பல் போக்குவரத்தும் ரயில் பாதைகளும் விரிவடைந்து சென்றனவோ, அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியுற்று ஓங்கிற்று. தனது மூலதனத்தைப் பெருகச் செய்து கொண்டது, மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளிற்று.
இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் விளைவாய், உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் வரிசையாய் ஏற்பட்ட புரட்சிகளின் விளைவாக உருவானதே என்பதைக் காண்கிறோம்.
இணைப்புகள்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-7
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-6
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-5
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-4
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-3
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-2
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-1
இணைப்புகள்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-7
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-6
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-5
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-4
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-3
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-2
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-1
No comments:
Post a Comment