Wednesday, April 10, 2019

குறிஞ்சிப் பாட்டு

பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை பெரும்புலவர் கபிலர் பாடியுள்ளார். இவர் பறம்பின் கோமான் என்று போற்றப்படும் வேள்பாரியின் உயிர்த்தோழர் ஆவார். இவர் "குறிஞ்சிக்கு ஒரு கபிலர்" என்று போற்றப்படக்கூடியவராவார். அதாவது குறிஞ்சியை பாடுவதில் இவருக்கு நிகர் இவரே. குறிஞ்சிப்பாட்டு 261 அடிகளைக் கொண்டது. குறிஞ்சிப் பாட்டில் 99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளது.


காதலர்களின் களவு ஒழுக்கத்தை சிறப்பித்துக் கூறக் கூடிய இந்த நூல், திருமணப் பருவத்தை அடைந்த குறிஞ்சிநில பெண் ஒருத்தி நலிவடைந்து வருகிறாள். அதைக் கண்ட செவிலித் தாயை பார்த்து தோழி கூறுகிறாள் " அன்னையே நீ தலைவியின் நோய்க்கு காரணம் என்ன என்று தெரியாமல் கலங்குகிறாய், தலைவியோ தன் உள்ளத்து துயரை சொல்லமுடியாமல் வாடுகிறாள், நானும் உண்மையைச் சொல்ல நடுங்குகிறேன், இருப்பினும் நான் சொல்வதைக் கேட்பாயாக"

நாங்கள் தினைப்புனத்தைக் காவல் காப்பதற்காக சென்றிருந்தோம். ஒருநாள் விச்சி வேலையில் நல்ல மழை பொழிந்தது.

அருவி நீரில் சென்று ஆடினோம் பாடினோம். அங்குள்ள மலர் செடிகளில் பூப்பறித்துக் கொண்டு வந்து மரநிழலில் அமர்ந்து விளையாடினோம்.
     
99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்,
  1. காந்தள் மலர்
  2. ஆம்பல் மலர்
  3. அனிச்சம் பூ
  4. குவளை மலர்
  5. குறிஞ்சிப்பூ
  6. வெட்சிப்பூ
  7. செங்கோடுவேரி மலர்
  8. தேமாம் பூ
  9. மணிச்சிகை (செம்மணிப்பூ)
  10. உந்தூழ் (மூங்கில் பூ)
  11. கூவிளம் பூ
  12. எறுழம் பூ
  13. சுள்ளி (மராமரப்பூ)
  14. கூவிரம் பூ
  15. வடவனம் பூ
  16. வாகைப்பூ
  17. குடசம் (வெட்பாலை)
  18. எருவை (கோரைப்பூ)
  19. செருவிளை (வெண்காக்கணம்)
  20. கருவிளம் பூ
  21. பயணிப்பூ
  22. வானிப்பூ
  23. குரவம் பூ
  24. பசும்பிடி (பச்சிலைப்பூ)
  25. வகுளம் (மகிழம்பூ)
  26. காயா மலர்
  27. ஆவிரைப்பூ
  28. வேரல் (சிறுமூங்கில் பூ)
  29. சூரல் மலர்
  30. சிறுபூளைப்பூ
  31. குறுநறுங்கண்ணி மலர்
  32. குருகிலை (முருக்கிலை)
  33. மருதம் பூ
  34. கோங்கம் பூ
  35. போங்கம் பூ
  36. திலகம் பூ
  37. பாதிரி மலர்
  38. செருந்தி மலர்
  39. அதிரல் பூ
  40. சண்பகம் மலர்
  41. கரந்தை மலர்
  42. குளவி (காட்டு மல்லி)
  43. மாம்பூ
  44. தில்லைப்பூ
  45. பாலைப்பூ
  46. முல்லைப்பூ
  47. கஞ்சங்குல்லை
  48. பிடவம் பூ
  49. செங்கருங்காலி மலர்
  50. வாழைப்பூ
  51. வள்ளிப்பூ
  52. நெய்தல் மலர்
  53. தாழைப்பூ
  54. தளவம் (செம்முல்லைப்பூ)
  55. தாமரை மலர்
  56. ஞாழல் மலர்
  57. மௌவல் பூ
  58. கொகுடிப்பூ
  59. சேடல் (பவளமல்லி பூ)
  60. செம்மல்
  61. சிறுகெங்குரலி (கருந்தாமரைக் கொடிப்பூ)
  62. கோடல் (வெண்காந்தள் மலர்)
  63. கைதை (தாழம் பூ)
  64. வழைப்பூ (சுரபுன்னை)
  65. காஞ்சிப்பூ
  66. கருங்குவளைப்பூ (மணிக்குலை)
  67. பாங்கர் பூ
  68. மரவம் பூ
  69. தணக்கம் பூ
  70. ஈங்கைப்பூ
  71. இலவம் பூ
  72. கொன்றைப்பூ
  73. அடுப்பம் பூ
  74. ஆத்திப்பூ
  75. அவரைப்பூ
  76. பகன்றைப்பூ
  77. பலாசம் பூ
  78. பிண்டி (அசோகம் பூ)
  79. வஞ்சிப்பூ
  80. பித்திகம் (பிச்சிப்பூ)
  81. சிந்துவாரம் (கருநொச்சிப்பூ)
  82. தும்பைப்பூ
  83. துழாய்ப்பூ
  84. தோன்றிப்பூ
  85. நந்திப்பூ
  86. நறவம் (நறைக்கொடிப்பூ)
  87. புன்னாகம் பூ
  88. பாரம் (பருத்திப்பூ)
  89. பீரம் (பீர்க்கம் பூ)
  90. குருக்கத்திப்பூ
  91. ஆரம் (சந்தனப்பூ)
  92. காழ்வைப்பூ
  93. புன்னைப்பூ
  94. நரந்தம் (நாரத்தம் பூ)
  95. நாகப்பூ
  96. நள்ளிருநாறி (இருள்வாசிப்பூ)
  97. குருந்தம் பூ
  98. வேங்கைப்பூ
  99. புழகுப்பூ
அந்த சமயம் வில்லும், அம்பும் தாங்கிய கட்டிளங்காளை ஒருவனுடன் வந்த வேட்டை நாயை கண்டு பயந்து அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு நடந்தோம்.

அங்கு வந்தவன் எங்களை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து எங்கள் கூந்தலை புகழ தொடங்கினான்.
இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லாமல் விட்டுவிட்டேன். அது என்ன சொல்லுங்கள் என்று கேட்டான்.

நாங்கள் ஒன்றும் சொல்லமுடியாமல் விழித்தோம். நீங்கள் தெரியாமல் விட்டதை நான் சொல்ல வேண்டும் என்றால் என்னுடன் ஒரு வார்த்தையாவது பேச கூடாதா? என்று கேட்டான்.

அந்த சமயம் வேடுவர்களால் விரட்டப்பட்ட மேலும் ஒன்று எங்களை நோக்கி விரைந்தது. அதைக் கண்டு பயந்து பதறிப் போன நாங்கள் நாணத்தை மறந்துவிட்டு நடுங்கி அந்தக் காளையின் அருகே நெருங்கி நின்றோம்.

உடனே அந்த இளைஞன் துரத்தி வந்த யானையின் மீது அம்பை எய்தான். யானை வந்த வழியே ஓடி விட்டது.

நநடுங்கி நின்ற தலைவியின் அழகைப் பாராட்டி உன்னை என் இல்லத் துணைவியாக ஏற்றுக் கொள்வேன் என்று தெய்வத்தின் முன்னிலையில் ஆணையிட்டு வாக்குறுதி தந்தான்.

இதற்குள் மாலை நேரம் வந்ததால் அவன் எங்களுக்கு ஊருக்கு வெளியே வரை துணையாக வந்து ஊரில் சேர்த்து விட்டு சென்றான்.

தலைவியைத் தழுவ முடியாவிட்டாலும், தினந்தோறும் நள்ளிரவு நேரத்தில் தவறாமல் வந்து செல்கின்றான்.

அவன் ஒழுக்கத்தில் சிறந்தவன். இவ்வாறு அவன் இரவு பொழுதெல்லாம் துன்பம் மிகுந்த காட்டையும், ஆற்றினையும் கடந்து வருவது நல்லதல்ல என்று தலைவி ஏங்கி நிற்கிறாள். இதுதான் தலைவிக்கு வந்திருக்கும் நோய் என்று தோழி செவிலித்தாயிடம் மிக்க நாகரிகத்துடன் கூறுகின்றாள்.

இந்த நிகழ்ச்சி தான் குறிஞ்சிப் பாட்டில் அமைந்துள்ள சுருக்கமான கருத்தாகும்.
குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கத்தை அழகுபட அமைத்துக் காட்டுவதில் இந்த நூலுக்கு இணையான நூல் இதுதான் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment