Friday, May 3, 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-7

தனிச் சொத்தை ஒழித்ததும் எல்லாச் செயற்பாடுகளும் நின்று போய்விடும். அனைத்து மக்களும் சோம்பேறித் தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது.

இது மெய்யானால், முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்க வேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை. மூலதனம் இல்லாமற் போகும் போது கூலியுழைப்பு இருக்க முடியாதென்ற ஓர் உண்மையையே திருப்பித் திருப்பிப் பலவாறாய்ச் சொல்லும் கூற்றே ஆகும் இந்த ஆட்சேபம் அனைத்தும்.

பொருளாயதப் படைப்புகளின் உற்பத்திக்கும் சுவீகரிப்புக்குமான கம்யூனிச வழிமுறைக்கு எதிராய் எழுப்பப்படும் எல்லா ஆட்சேபங்களும், அறிவுத்துறைப் படைப்புகளின் உற்பத்திக்கும் சுவீகரிப்புக்குமான கம்யூனிச வழிமுறைக்கு எதிராகவும் எழுப்பப்படுகின்றன. எப்படி வர்க்கச் சொத்துடைமையின் மறைவு முதலாளிக்குப் பொருளுற்பத்தியே மறைந்து போவதைக் குறிப்பதாகின்றதோ, அதேபோல வர்க்கக் கலாச்சாரத்தின் மறைவு அவருக்கு எல்லாக் கலாச்சாரமுமே மறைவதற்கு ஒப்பானதாகின்றது.

அழிந்து விடுமென அவர் அழுது புலம்பும் அந்தக் கலாச்சாரம் மிகப் பெருவாரியான மக்களுக்கு இயந்திரமாய்ச் செயல் படுவதற்கு பயிற்சியாகவே இருந்து வருகிறது.

ஆனால் முதலாளித்துவச் சொத்துடைமையின் ஒழிப்பை நீங்கள் சுதந்திரத்தையும் கலாச்சாரத்தையும் சட்ட நெறியையும் இன்ன பிறவற்றையும் பற்றிய உங்கள் முதலாளித்துவக் கருத்துகளைப் பிரமாணமாய்க் கொண்டு மதிப்பீடு செய்யும் வரை எங்களுடன் சர்ச்சைக்கு வர வேண்டாம். உங்களுடைய சட்டநெறி உங்கள் வர்க்கத்தின் சித்தத்தை எல்லாருக்குமான சட்டமாய் விதித்திடுவதுதான்; உங்களது இந்தத் சித்தத்தின் சாரத்தன்மையும் போக்கும் உங்களது வர்க்கம் நிலவுவதற்கு வேண்டிய பொருளாதார நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகிறவைதாம். இதேபோல் உங்கள் கருத்துகள் எல்லாமே உங்களது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவச் சொத்துடைமைக்கும் வேண்டிய நிலைமைகளிலிருந்து பிறந்தெழுகிறவைதாம்.

தற்போதுள்ள உங்களுடைய பொருளுற்பத்தி முறையிலிருந்தும் சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக அமைப்பு வடிவங்களை, பொருள் உற்பத்தியின் முன்னேற்றத்தின்போது வரலாற்று வழியில் தோன்றி மறைந்து போகும் உறவுகளாகிய இவற்றை, என்றும் நிலையான சாசுவத இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி உங்களது தவறான தன்னலக் கருத்தோட்டம் உங்களைத் தூண்டுகிறது. இந்தத் தவறான கருத்தோட்டம் உங்களுக்கு மட்டும் உரியதன்று, உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வர்க்கங்கள் யாவற்றுக்குமே உரியதாய் இருந்ததுதான். பண்டைக் காலத்துச் சொத்துடைமையைப் பொறுத்தவரை நீங்கள் தெட்டத்தெளிவாய் காண்பதை, பிரபுத்துவச் சொத்துடைமை சம்பந்தமாய் நீங்கள் ஒத்துக் கொள்வதை, உங்களுடைய முதலாளித்துவச் சொத்துடைமை குறித்து உங்களால் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை, நீங்கள் தடுக்கப்பட்டு விடுகிறீர்கள்.

குடும்பத்தை ஒழிப்பதாவது! கம்யூனிஸ்டுகளுடைய இந்தக் கேடுகெட்ட முன்மொழிவை எதிர்த்து அதிதீவிரவாதிகளுங்கூட   கொதித்தெழுகிறார்கள். இக்காலத்துக் குடும்பத்துக்கு, முதலாளித்துவக் குடும்பத்துக்கு அடிப்படையாய் அமைவது எது?

மூலதனம்தான், தனியார் இலாபம்தான். இந்தக் குடும்பம் அதன் முழு வளர்ச்சியிலுமான வடிவில் முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே மட்டும்தான் இருந்து வருகிறது. ஆனால் இந்நிலைமையின் உடன் நிகழ்வாய் குடும்ப வாழ்வு பாட்டாளிகளிடத்தே அனேகமாய் அற்றுப் போயிருப்பதையும், பொது நிலையிலான விபச்சாரத்தையும் காண்கிறோம்.

முதலாளித்துவக் குடும்பத்தின் உடன் நிகழ்வு மறையும்போது கூடவே முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும், மூலதனம் மறையும் போது இரண்டும் மறைந்து விடும்.

குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான், ஒப்புக் கொள்கிறோம்.

ஆனால் வீட்டுக் கல்விக்குப் பதிலாய் நாங்கள் சமூக முறையிலான கல்வியைப் புகுத்தி மனிதர்களிடையிலான உறவுகளிலேயே மிகப் புனிதமானவற்றை நாசமாக்க விரும்புகிறோம் என்பீர்கள்.

உங்களுடைய கல்வி இருக்கிறதே, அது மட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்வி தானே? எந்தச் சமூக நிலைமைகளில் நீங்கள் கல்வி போதிக்கிறீர்களோ அந்த நிலைமைகளாலும், பள்ளிக் கூடங்கள் மூலமும் இன்ன பிறவற்றின் மூலமும் சமுதாயத்தின் நேரடியான அல்லது மறைமுகமான தலையீட்டாலும் தீர்மானிக்கப்பட்டதுதானே அது? கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்.

குடும்பம், கல்வி என்றும், பெற்றோருக்கும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவருக்கத்தக்கனவாகி வருகின்றன; ஏனெனில் நவீனத் தொழில் துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.

ஆனால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கி விடுவீர்களே என்று முதலாளித்துவ வர்க்கம் அனைத்துமாய்ச் சேர்ந்து கூக்குரலிடுகிறது.

முதலாளியாய் இருப்பவர் தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பாவிக்கிறார். உற்பத்திக் கருவிகள் எல்லாருக்கும் பொதுவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படப் போவதாய்க் கேள்விப்பட்டதும், உடனே அவர் எல்லார்க்கும் பொதுவாகி விடும் இதே கதிதான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயற்கையாகவே முடிவு செய்து கொண்டு விடுகிறார்.

பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் இருத்தப்பட்டிருப்பதை ஒழிக்க வேண்டும், உண்மையில் இதுதான் நோக்கம் என்பது அவருக்குக் கனவிலும் கருதமுடியாத ஒன்றாகும்.

இருப்பினும், பெண்களைக் கம்யூனிஸ்டுகள் பங்கமாகவும் அதிகாரபூர்வமாகவும் எல்லார்க்கும் பொதுவாக்கப் போகிறார்களென நமது முதலாளிமார்கள் புரளி பண்ணி நல்லொழுக்கச் சீலர்களாய் சீற்றம் கொள்கிறார்களே, அதைக் காட்டிலும் நகைக்கத்தக்கது. எதுவும் இருக்க முடியாது. பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கும் கைங்கரியத்தைக் கம்யூனிஸ்டுகள் செய்யத் தேவையில்லை, நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே இது செய்யப்பட்டு வருகிறது.

நமது முதலாளிமார்கள் சாதாரண விபசாரிகளிடம் செல்வதைச் சொல்லவே வேண்டாம். அதோடு அவர்கள் தமது பிடியிலுள்ள பாட்டாளிகளது மனைவியரும் பெண்டிரும் போதாமல் தமக்குள் ஒருவர் மனைவியை ஒருவர் வசப்படுத்திக் களவொழுக்கம் கொள்வதில் ஆகப்பெரிய இன்பம் காண்கிறார்கள்.

முதலாளித்துவத் திருமணமானது உண்மையில் மனைவியரைப் பொதுவாக்கிக் கொள்ளும் ஒரு முறையே ஆகும். ஆகவே கள்ளத்தனமாய்த் திரை மறைவில் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கி வைக்கும் முறைக்குப் பதில், ஒளிவுமறைவற்ற சட்டபூர்வ முறையைக் கொண்டு வர விரும்புகிறார்கள் கம்யூனிஸ்டுகள் என்று இவர்கள் கண்டிக்கலாமே தவிர அதிகமாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. எப்படியும், இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும் போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப் பெண்டிர் முறையும் - அதாவது பகிரங்கப் பொது விபசாரமும் இரகசியத் தனி விபசாரமும் - கூடவே ஒழிந்தே ஆகவேண்டும் என்பது தெளிவு.

மேலும் தாய்நாட்டையும் தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்டுகள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

தொழிலாளர்களுக்குத் தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத காரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும், தேசத்தின் தலைமையான வர்க்கமாய் உயர்ந்தாக வேண்டும், தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளி வர்க்கம் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது, ஆனால் இச்சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல.

முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சி, வாணிபச் சுதந்திரம், அனைத்துலகச் சந்தை, பொருளுற்பத்தி முறையிலும் இம்முறைக்கு உரித்தான வாழ்க்கை நிலைமைகளிலும் நாடுகள் ஒருபடித்தானவை ஆதல் - இவற்றின் காரணமாய் வெவ்வேறு நாடுகளது மக்களுக்கும் இடையிலுள்ள தேசிய வேறுபாடுகளும் பகைமைகளும் நாள்தோறும் மேலும் மேலும் மறைந்து வருகின்றது.

பாட்டாளி வர்க்க மேலாண்மையானது இவற்றை மேலும் துரிதமாய் மறையச் செய்யும். குறைந்தது தலைமையான நாகரிக நாடுகளின் அளவிலாவது அமைந்த செயல் ஒற்றுமை, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வேண்டிய தலையாய நிபந்தனைகளில் ஒன்றாகும்.

தனியொருவர் பிறர் ஒருவரைச் சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிறிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கங்களுக்கிடையிலான பகைநிலை எந்த அளவுக்கு மறைகிறதோ, அதே அளவுக்குத் தேசங்களுக்கிடையிலான பகைமையும் இல்லாதொழியும்.

சமயத்தின், தத்துவவியலின், பொதுவாய்ச் சித்தாந்தத்தின் நோக்குநிலையிலிருந்து கம்யூனிசத்துக்கு எதிராய்க் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விவரமாய்ப் பரிசீலிக்கத் தக்கவையல்ல.

மனிதனது கருத்துகளும், நினைப்புகளும் கண்ணோட்டங்களும் - சுருங்கச் சொன்னால், மனிதனது உணர்வானது - அவனது பொருளாதாய வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக்கின்றன.

சமுதாயத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் என்பதாய்ச் சொல்கிறார்களே, அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது என்ன? பழைய சமுதாயத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துருவாக்கப்பட்டு விட்டன, பழைய வாழ்நிலைமைகள் சிதைவதற்கு ஒத்தபடி பழைய கருத்துகளும் கூடவே சிதைகின்றன என்ற உண்மையைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பண்டைய உலகு அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது பண்டையச் சமயங்களை கிறிஸ்தவ சமயம் வெற்றி கொண்டது. பிறகு 18-ஆம் நூற்றாண்டில்
கிறிஸ்தவ சமயக் கருத்துகள் அறிவொளி இயக்கக் கருத்துகளுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது
அக்காலத்திய புரட்சி வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. சமயத்துறை சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துகள் கட்டற்ற சுதந்திரப் போட்டியின் ஆதிக்கத்தினது அறிவு உலகப் பிரதிமைகளே ஆகும்.


இணைப்புகள்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-7

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-6

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-5

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-4

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-3

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-2

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-1




No comments:

Post a Comment