Friday, May 3, 2019

பட்டினப்பாலை

கடியலூர் உருத்திர கண்ணனாரால் பாடப்பட்டது பட்டினப்பாலை. இந்த நூலில் சோழ வளநாடும் காவிரி ஆறும் காவிரிப் பூம்பட்டினமும் சோழ மன்னன் திருமாவளவனின் வலிமையும் வள்ளல் தன்மையும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு எனச் சான்றோர்கள் தொகை நூல்களாக தொகுத்து உள்ளார்கள்.


இவற்றில் பத்துப்பாட்டு இலக்கிய, இலக்கண முறைகளில் மேற்கோள் காட்டப்படும் சிறப்புப் பெற்றது. இந்த நூல்களில் தமிழ் பண்பாட்டிற்கே உரித்தான அகம், புறம் என்னும் ஒழுக்கங்கள் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இதனைப் பற்றி பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்,

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே

என்று சிறப்பித்து பாராட்டுகின்றார். மேலும், மலை, கடல், நகரம், நாடு, பெரும்பொழுது, சிறு பொழுது போன்றவற்றை அறிவியல் தன்மையுடன் விளக்குவதுடன் அந்த காலத்தில் மக்களின் பண்பு அரசாட்சி, பழக்க வழக்கங்கள், அரசியல், போர் முறை, சமய நிலை போன்றவற்றை தெரிவிக்கும் வரலாற்று களஞ்சியமாகவும் விளங்குகிறது.

காவிரி பூம்பட்டினத்தையும் பாலைத் திணையையும் கூறுவதால் இந்த நூல் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. பொருள் தேடிச் சென்ற தலைவன் பிரிந்து சென்றதால் அந்தத் துன்பத்தை தலைவி கூறுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளது.

ஆசிரியப்பாவால் அமைந்த பட்டினப்பாலையில் வஞ்சிப்பாவும், விரவி 301 அடிகளில் வந்திருப்பதால் இந்த நூலை வஞ்சி நெடும்பாட்டு என்றும் கூறுவார்கள்.

கடற்கரை ஓரம் உலர வைக்கப்பட்டுள்ள திண்பதற்கு வரும் கோழிகளை தடுப்பதற்காக செவிகளில் அணிந்த தங்கக் குழைகளை வீசித் தடுப்பர்.

அவ்வாறு வீசி எறியப்பட்ட குழைகள் முற்றம் எங்கும் சிதறிக் கிடக்கும். அவை சிறுவர்கள் ஓட்டும் தேர்களைத் தடுக்கும்.

இத்தகைய செல்வந்தர்கள் பலர் அங்கு வாழ்ந்து வந்தனர், உப்பை படகில் ஏற்றிச் சென்று அதற்கு விலையாக நெல்லைப் படகுகளில் ஏற்றி வந்து காவிரி பூம்பட்டினத்தை அடைவர்.

இந்தப் படகுகள் கரையோரங்களில் குதிரைகளைப் போல் கட்டப்பட்டிருக்கும். அத்தகைய சிறப்பு மிக்க நெய்தல் நிலங்கள் உண்டு.

மேலும், இம்மையிலும் மறுமையிலும் நன்மை தரும் இரு காமத்து இணையேறி என்று ஏரிகளும் இருந்தன. காவிரிபூம்பட்டினத்தில் அன்னதானம் வழங்கும் நிலையங்களும் உண்டு.

அங்கு சோறு ஆக்கிய பின் வடித்த கஞ்சி ஆறு போல வழிந்தோடும். அவற்றை உண்பதற்கு எருதுகள் வந்து சேருவதால் அவை சேறாகி பின்னர் புழுதியாகி அரண்மனையில் தீட்டப்பட்ட ஓவியங்களில் போய் படியும்.

இதனால் அரண்மனை திருநீற்றில் புரண்ட வெள்ளை யானையைப் போல தோன்றும். அங்கு சமணர்கள் தவம் செய்யும் பள்ளிகளும் முனிவர்களின் வேள்விச் சாலைகளும் உண்டு. வேள்வி சாலைகளில் எழும் புகையை மேகம் என்று நினைத்து ஆண் குயில்கள் தம் பெட்டையுடன் அந்த இடத்தை விட்டு நீந்தி கோட்டத்திற்குச் சென்று அங்குள்ள புறாக்க தங்கியிருக்கும்.

கடற்கரையில் வாழும் பரதவர்களின் வாழ்க்கையை சிறந்த உவமைகளுடன் படம் பிடித்துக் காட்டும். மேலும், சொர்க்கத்திற்கு ஒப்பானதாக காவிரித்துறை விளங்கியதாக கூறப்பட்டுள்ளது.

ஆவண வீதிகளில் சிறுவாயில், பெருவாயில், இடைக்கழிகளைக் கொண்ட மாடங்கள் நிறைந்திருக்கும்.

இந்த மாடங்கள் தோறும் பெண்கள் ஜன்னல்களின் அருகில் நின்று கொண்டு கை குவித்து வணங்க சில பெண்கள் வெறியாட்டம் நிகழ்த்துவர்.

இவ்வாறு விழா நடக்கும் விதியாக ஆவண வீதி விளங்கும். ஆலயங்களில் உள்ள வாயில்களில் வழிபடுபவர்கள் கட்டிய கொடிகளும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய கட்டிய கொடிகளும், அறிஞர்கள் வாதட கட்டிய கொடிகளும், கள் விற்பதற்காக கட்டிய கொடிகளும் என பல வகை கொடிகள் நகரம் எங்கும் நிறைந்திருக்கும்.

பண்டைய தமிழ் மக்கள் வான நூல் அறிவு பெற்றிருந்தனர். அதனை "வசையில் புகழ் வயங்கும் வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும்" என்னும் அடிகளில் அறியலாம். இந்த வரிகளில் இருந்து வெள்ளி என்ற கோள் தான் நிற்க வேண்டிய வடக்கு திசையில் நிற்காமல் தெற்கு திசையில் சென்றால் நாட்டில் மழையின்றி போகும். பஞ்சம் உண்டாகும் என்ற உண்மையை தமிழர்கள் உணர்ந்தனர் என்பதை இந்த நூல் விளக்குகிறது.

வெளிநாடுகளிலிருந்து மரக்கலம் மூலமாக காவிரி பூம்பட்டினத்தில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. சேர நாட்டிலிருந்து மிளகும், குடகு மலையில் இருந்து சந்தனம், அகிலும் தென் கடலில் இருந்து முத்தும், கீழ்க் கடலில் இருந்து பவளமும் வந்து குவிந்தன.

சீனாவில் இருந்து வாசனைப் பொருட்களும், இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களும் வந்திருந்தன. அங்குள்ள வணிகர்கள் அனைவரும் அறநெறியில் வணிகம் செய்தனர்.

கடற்கரையில் பண்டகங்களுக்கு சுங்க வரி வசூலிக்கும் முறையும் இருந்தது. பொருட்களின் மீது சோழனின் முத்திரை பதிக்கும் வழக்கும் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு பொருளும் விற்பதற்கு தனித்தனியே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கொடிகள் கட்டப் பட்டிருந்தன. அங்குள்ள மக்களும் நாகரீகமான முறையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். செல்வந்தர்கள் பகலில் பட்டாடையும் இரவில் நூலாடையும் உடுத்தியிருக் கின்றனர்.

இந்த நூலின் தலைவனாக திருமாவளவனை வைத்து கடியலூர் உருத்திரக்கண்ணார் பாடினார். பத்துப்பாட்டில் உள்ள இன்னொரு நூலான பெரும்பாணாற்றுப்படையை பாடியவரும் இவர்தான். அந்த நூல் புறப்பொருள் பற்றியது.

இவர் பாடிய பாடல்களுள், “இரு நிலம் கடந்த திருமறு பார்பன் முந்நீர் வண்ணன்” எனவும், "காந்தளம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்” எனவும் திருமாலைப் போற்றியுள்ளமையால் இவர் திருமாலிடம் ஈடுபாடு உடையவர் எனத் தெரிகிறது. இவரது காலம் கடைச் சங்க காலமாகும்.

பாலைவனத்தின் கொடுமை எப்படிப்பட்டது என்பதை விளக்கும் அடிகள், 

வேலினும் வெய்ய கானமவன்
கோலினுந் தண்ணிய தடமென் தோள்   (300 - 301).

அதாவது, வீரம் மிகுந்த கரிகால் சோழன் தன்னுடைய பகைவர் மீது வீசியெறிந்த வேலாயுதத்தை விட மிகவும் கொடுமையானது அவனுடைய காதலியை பிரிந்து செல்ல நினைத்த பாலேவனமாகும்.

கரிகால் சோழன் கையில் உள்ள செங்கோலைக் காட்டிலும் குளிர்ச்சியானது அவன் காதலியின் அகன்ற மெல்லிய தோள்களாகும்.

காவிரி ஆற்றின் பெருமை பறறிக் கூறப்பட்ட அடிகள், 

வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும். (5 - 7).

அதாவது, மேகங்கள் மறந்து மழை பொழியாமல் வறன்டு போனாலும், காவிரி நதி தான் மட்டும் வற்றாமல் கடல் நோக்கி பாய்ந்து கொண்டே இருக்கும். அங்குள்ள வயல்களில் நெல் பொன்னை போல குவிந்திருக்கும்.





No comments:

Post a Comment