ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அங்கிருந்த ஒரு மகமதிய இளைஞர் கூறிக் கொண்டே இருந்தான். ஒரு பொதுக் குளத்திலிருந்து தீண்டத் தகாதவர்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதையே அவன் குறித்துக் கூறினான். எனது அமைதியை இழந்த நான் அவனிடம் கோபமான குரலில், அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக்குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா?' என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர்.
காவல்காரரிடம் திரும்பிய நான் கோபமாகவே கேட்டேன், 'கோட்டைக்குள் நாங்கள் போக முடியுமா, முடியாதா என்று சொல். போகமுடியாது என்றால் இங்கே நின்றுகொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை' என்று கேட்டேன். என் பெயரைக் கேட்ட அவர், நான் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு கோட்டைக் கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று பின்னர் திரும்பி வந்தார். கோட்டைக்குள் போகலாம் என்று எங்களிடம். கூறிய காவலர், கோட்டைக்குள் எந்த இடத்தில் இருக்கும் தண்ணீரையும் நாங்கள் தொடக்கூடாது என்று கூறினார். அதை நாங்கள் மீறிவிடாமல் இருக்க, எங்களுடன் ஒரு ஆயுதந்தாங்கிய வீரர் அனுப்பப்பட்டார்.
ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் எவ்வாறு ஒரு பார்சிக்கும் தீண்டத்த காதவர் ஆகிறார் என்பதற்கு நான் ஓர் எடுத்துக்காட்டு அளித்திருந்தேன். இப்போது இந்த நிகழ்ச்சி ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் ஒரு மகமதியருக்கும் தீண்டத்தகாதவரே என்பதைக் காட்டுகிறது.
மனிதத் தன்மையே அற்ற மருத்துவர்!
அடுத்த வழக்கு இதுபோன்று நிலையை எடுத்துக் காட்டுவதாகும். அது கத்தியவார் கிராமத்தில் உள்ள ஒரு தீண்டத்தகாத ஆசிரியரின் வழக்கு. காந்தியால் வெளியிடப் பட்டு வரும் 'யங் இந்தியா' என்றும் பத்திரிகையின் 1929, டிசம்பர் 12 ஆம் தேதிய பதிப்பில் கீழ்க்கண்ட கடிதம் வெளியிடப்பட்டது. குழந்தை "பெற்றிருந்த தனது மனைவிக்கு ஒரு மருத்துவரை மருத்துவம் பார்க்கச் செய்ய, தான் எதிர்கொண்ட இடையூறுகளை அக்கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த அவர், தனது மனைவியும், குழந்தையும் மருத்துவ உதவியின்றி எவ்வாறு இறக்க நேர்ந்தது என்பதையும் கூறியிருக்கிறார். அக்கடிதம் கூறுவதாவது:
இந்த மாதம் 5 ஆம் தேதி என் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. 7 ஆம் தேதியன்று உடல் நலமிழந்த என் மனைவிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
அவளது பலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது; அவளது மார்பு விங்கிக் கொண்டது. மூச்சு விடுவதற்கே துன்பப்பட்ட அவளது மார்பெலும்புகளில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. நான் ஒரு மருத்துவரை அழைக்கச் சென்றேன். ஆனால் தான் ஒரு அரிஜன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறிய அவர் எனது குழந்தையையும் பரிசோதனை செய்து பார்க்கத் தயாராக இல்லை. பின்னர் நாகர்சேத் மற்றும் கராசியா தர்பாருக்குச் சென்ற நான் எனக்கு உதவும்படி வேண்டினேன். மருத்துவருக்கான மருத்துவக் கட்டணம் இரண்டு ரூபாயை முழுமையாக நான் கொடுப்பதற்கு நாகர்சேத் பிணையாக நின்றார்.
பின்னர் மருத்துவர் வந்தார்; ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில். அரிஜன் காலனிக்கு வெளியேதான் நோயாளியைச் சோதனை செய்வேன் என்பதுதான் அந்த நிபந்தனை. பிறந்த குழந்தையுடன் என் மனைவியை அரிஜன் காலனிக்கு வெளியே கொண்டு வந்தேன். பின்னர் மருத்துவர் ஒரு தர்மாமீட்டரை ஒரு முஸ்லிமிடம் கொடுக்க, அந்த முஸ்லிம் அதனை என்னிடம் கொடுத்தார். என் மனைவியிடம் கொடுத்த நான் பின்னர் அதைத் திரும்பப் பெற்று முஸ்லிமிடம் கொடுத்தேன். அந்த முஸ்லிம் அதை மருத்துவரிடம் கொடுத்தார். அப்போது இரவு எட்டுமணி ஆகிவிட்டது. ஒரு விளக்கு வெளிச்சத்தில் அந்த தெர்மாமீட்டரைப் பார்த்த மருத்துவர் நோயாளி நிமோனியா நோயால் துன்புறுவதாகக் கூறினார். பின்னர் அங்கிருந்து சென்ற மருத்துவர் மருந்து அனுப்பி வைத்தார். சிறிது ஆளி விதைகளை நான் கடைத் தெருவிலிருந்து வாங்கி வந்து நோயாளி மீது அதைப் பயன்படுத்தினேன். மருத்துவருக்கு இரண்டு ரூபாய் கட்டணத்தை நான் கொடுத்த பிறகும், மறுபடியும் நோயாளியை வந்து பார்க்க அவர் மறுத்துவிட்டார். அந்த நோய் மிகவும் ஆபத்தானது; கடவுள் மட்டுமே எங்களுக்கு உதவமுடியும். எனது வாழ்க்கையின் ஒளி அணைந்துவிட்டது. அன்று பிற்பகல் இரண்டு மணி அளவில்.
என் மனைவி இறந்துவிட்டாள்."
அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அதே போல் அந்த மருத்துவரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பெயரைக் குறிப்பிட்டால் பழிவாங்கும் செயல்கள் எழலாம் என்ற அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் அச்சத்தினால் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதே அதன் காரணம். ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட உண்மைகள் மறுக்க முடியாதவை.
இதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நோய்வாய்ப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிக்கு தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்ய அந்த மருத்துவர், படித்தவராக இருந்தும் கூட, மறுத்துள்ளார். அந்தப் பெண்மணிக்குச் சிகிச்சை செய்ய அவர் மறுத்ததன் காரணமாக அந்தப் பெண்மணி இறந்துபோனார். அவரது தொழில் அவருக்கு விதித்துள்ள கடமையைப் பறக்கணிக்கிறோம் என்ற வருத்தமோ உணர்வோ அந்த மருத்துவர் கொண்டிருக்கவில்லை. ஒரு தீண்டத்தகாதவரைத் தொடுவதை விட மனிதத் தன்மையே அற்றவனாக இருப்பதையே ஓர் இந்து விரும்புகிறான்.
படித்துவிட்டு வேலைக்கு வந்தும் தீண்டாதவர் பட்ட துன்பம்!
இதை விட மேலும் மோசமான நிகழ்ச்சி ஒன்று உள்ளது. பம்பாய் தாதர் பகுதியில் வுல்லன் மில்லின் பின்பக்கத்தில் உள்ள காசர்வாடியின் பங்கிக்களின் கூட்டம் ஒன்று 1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதியன்று, இந்துலால் யாத்திக் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஒரு பங்கி சிறுவன் கீழ்க்கண்டவாறு தன் அனுபவத்தை விளக்கிக் கூறினான்:
தாய்மொழியிலான இறுதித் தேர்வில் நான் 1933இல் தேர்வு பெற்றேன். 4ஆம் வகுப்புவரை நான் ஆங்கிலம் படித்திருந்தேன். பம்பாய் நகராட்சியின் பள்ளிக் கமிட்டிக்கு ஆசிரியர் வேலை கேட்டு நான் விண்ணப்பித்தேன். அப்போது காலியிடம் இல்லாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. தலாதி என்னும் கிராம் பட்வாரி வேலைக்காக அகமதாபாத் பிற்படுத்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு நான் விண்ணப்பித்தேன். வெற்றி பெற்ற எனக்கு அந்த வேலை கிடைத்தது. 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று, கெடா மாவட்டம் பொர்சாத் தாலுகாவின் மம்லதார் அலுவலகத்திற்கு நான் தலாதியாக நியமிக்கப்பட்டேன்.
எனது குடும்பம் குஜராத்திலிருந்து வந்ததுதான் என்ற போதிலும், இதற்கு முன் நான் குஜராத்துக்குச் சென்றதே இல்லை. அங்கு நான் செல்வது இதுவே முதல் முறையாகும், அதே போல், அரசு அலுவலகங்களிலும் தீண்டாமை பாராட்டப் பட்டு வந்தது என்பதையும் நான் அறிந்திருக்கவில்லை. மேலும் என் விண்ணப்பத்தில் நான் ஓர் அரிஜன் என்பது குறிப்பிடப் பட்டிருந்தது. அதனால் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவர்கள் நான் யார் என்பதை முன்கூட்டியே அறிந்திருப்பார்கள். என்றே நான் எதிர்பார்த்தேன். தலாதிப் பணியின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நான் மம்லதார் அலுவலகத்துக்குச் சென்றபோது அங்கிருந்த குமாஸ்தாவின் போக்கைக் கண்டு நான் வியப்படைந்தேன்.
"நீ யார்" என்று அந்தக் கார்குன் வெறுப்புடன் கேட்டார். "அய்யா நான் ஒரு அரிஜன்'' என்று கூறினேன். “போ, போ. போய் எட்டி நில்; என் அருகில் வந்து நிற்க உனக்கு என்ன தைரியம்? நீ அலுவலகத்தில் இருக்கிறாய்; நீ மட்டும் வெளியே இவ்வாறு செய்திருந்தால் நான் உனக்கு ஆறுஉதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன திமிர் இருக்கும்?" என்று கேட்டார். பின்னர் தலாதியாக என்னை நியமித்த உத்தரவையும், என் சான்றிதழையும் தரையில் வைக்கும்படி என்னைக் கேட்டார். பின்னர் அவர் அதனை எடுத்துக் கொண்டார்.
போர்சாத் மம்லதார் அலுவலகத்தில் நான் பணியாற்றியபோது, குடிப்பதற்குத்
தண்ணீர் பெறுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். குடிநீர் உள்ள பாத்திரங்கள் வராண்டாவில் வைக்கப்பட்டிருக்கும். இந்தத் தண்ணீர்ப் பாத்திரங்களுக்குப் பொறுப்பான ஒரு தண்ணீர்க்காரர் இருந்தார். அலுவலகத்திலுள்ள குமாஸ்தாவுக்குத் தண்ணீர் தேவைப்படும்போது தண்ணீர் ஊற்றுவதுதான் அவர் வேலை. அவர் இல்லாதபோது மற்றவர்கள் பாத்திரங்களில் இருந்து அவர்களாகவே தண்ணீர் எடுத்துக் குடிப்பார்கள். ஆனால் நான் அவ்வாறு செய்ய முடியாது. நான் தொட்டாலே தீட்டாகிவிடும் என்பதால் தண்ணீர்ப் பாத்திரங்களைத் தொட என்னால் முடியாது. அதனால் தண்ணீர்க்காரரின் கருணையையே நம்பி நான் இருக்கவேண்டியதாயிற்று.
எனது உபயோகத்துக்காக அங்கே ஓர் அழுக்கடைந்த பானை இருந்தது. என்னைத் தவிர வேறு எவரும் அதைத் தொடவும் மாட்டார்கள். கழுவவும் மாட்டார்கள். இந்தப் பானையில்தான் நான் குடிப்பதற்கு தண்ணீர்க்காரர் தண்ணீர் ஊற்றுவார். ஆனால் அந்தத் தண்ணீர்க்காரர் அந்த இடத்தில் இருந்தால் தான் எனக்குத் தண்ணீர் கிடைக்கும். எனக்குத் தண்ணீர் ஊற்றுவது இந்தத் தண்ணீர்க்காரருக்குப் பிடிக்காது. தண்ணீருக்காக நான் வருவதைக் கண்டால், அவர் எங்கேயாவது போய்விடுவார், அதன்பின் எனக்குத் தண்ணீரே கிடைக்காமற் போய்விடும். இவ்வாறு நான் தண்ணீரே குடிக்காமல் போன நாட்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இதே போன்று தங்குமிடத்திற்கும் நான் சிரமப்பட வேண்டியதாயிற்று. போர்சாத்துக்கு நான் முற்றிலும் புதியவன். எந்த ஓர் ஜாதி இந்துவும் வாடகைக்கு எனக்கு வீடு கொடுக்கமாட்டார். என் தகுதிக்கு அதிகமாக ஒரு குமாஸ்தாவாக வாழும் என் முயற்சியை விரும்பாத இந்துக்களுக்குக் கோபம் ஏற்படுமே என்ற அச்சத்தில் எனக்கு வீடு கொடுக்க போர்சாத் தீண்டத்தகாதவர்களும் தயாராக இல்லை. அனைத்தையும் விட மிகப் பெரிய துன்பம் உணவைப் பற்றியது. நான் உண்பதற்கு எனக்கு எந்த ஓர் இடமுமில்லை; எனக்கு உணவளிப்போரும் எவருமிலர். தினமும் காலையிலும் மாலையிலும் பஜாசுகளை வாங்கி, கிராமத்துக்கு வெளியே தனியான ஒரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, மம்லதார் அலுவலக வராண்டாவுக்கு வந்து படுத்து உறங்குவதை நான் வழக்கமாக்கிக் கொண்டேன். இவ்வாறு நான்கு நாட்களை நான் கழித்தேன். இவையெல்லாம் என்னால் தாங்க முடியாதவையாக ஆகிவிட்டன. பின்னர் எனது மூதாதையரின் ஊரான ஜெந்த்ராலுக்குச் சென்று வசிக்கச் சென்றேன். அது போர்சாத்திலிருந்து 6 மைல் தொலைவில் இருந்தது. தினமும் நான் பன்னிரண்டு மைல் தொலைவு நடக்கவேண்டியிருந்தது. இதையும் நான் ஒன்றரை மாத காலம் செய்தேன்.
பின்னர் ஒரு தலாத்தியிடம் வேலை கற்றுக் கொள்ள மம்லதார் என்னை அனுப்பினார். இந்த தலாத்தி ஜெந்த்ரால், கார், சாஜ்பூர் என்ற மூன்று கிராமங்களுக்குப் பொறுப்பானவர். ஜெந்த்ரால் அவரது தலைமையிடம். இந்தத் தலாத்தியுடன் ஜெந்த்ராலில் நான் இரண்டு மாதம் இருந்தேன். அவர் எனக்கு எதுவுமே கற்றுக் கொடுக்கவில்லை. கிராம அலுவலகத்துக்குள் நான் ஒரு நாள் கூட சென்றதில்லை. அந்தக் கிராமத் தலைவர் குறிப்பாக என்னை எதிரிபோலவே கருதி நடத்தினார். ஒரு முறை, "பயலே, நீயும், உன் தந்தையும், உன் சகோதரனும் கிராம அலுவலகத்தைப் பெருக்கும் பணியாளர்கள்; நீ எங்களுக்குச் சமமாக அலுவலகத்தில் உட்கார விரும்புகிறாயா? ஜாக்கிரதையாக இரு; இந்த வேலையை விட்டு விட்டு நீ ஓடிப் போவதே உனக்கு நல்லது என்று கூறினார்.
ஒரு நாள் சாஜிபூர் கிராமத்தின் மக்கள் தொகைப் பட்டியல் தயாரிக்க என்னை தாலத்தி அழைத்தார். ஜெந்த்ராலில் இருந்து நான் சாஜிபூருக்குச் சென்றேன். கிராமத்தலைவரும், தாலத்தியும் கிராம அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்ததை நான் கண்டேன். நான் 15 நிமிடம் வெளியே நின்றேன். ஏற்கெனவே நான் இத்தகைய வாழ்க்கை பற்றிச் சோர்வடைந்து போயிருந்தேன்; இவ்வாறு அலட்சியப்படுத்தப்படுவது, அவமானப்படுத்தப்படுவது கண்டு எனக்குச் சினம் எழுந்தது. அங்கிருந்த நாற்காலி ஒன்றில் நான் உட்கார்ந்து கொண்டேன். நான் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த தலாத்தியும், கிராமத் தலைவரும் எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்திற்குப் பின் மக்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி என்னைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது. கிராம நூலகத்தின் நூலகரால் அக்கூட்டம் வழிநடத்தி வரப்பட்டு இருந்தது. படித்த ஒரு மனிதர் ஏன் இவ்வாறு கூட்டம் கூட்டிக் கொண்டு வருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. மிக மோசமான சொற்களால் அவர் என்னைத் திட்டத் தொடங்கினார். கிராமப் பணியாளரான ராவனியாவைப் பார்த்து, “இந்தக் கேடு கெட்ட பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தார்கள்?' என்று கேட்டார். ரவனியா என்னை எழுப்பிவிட்டு நாற்காலியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். நான் தரையில் உட்கார்ந்து கொண்டேன். அதன்பின் அக்கூட்டம் கிராம அலுவலகத்துக்குள் நுழைந்து, என்னைச் சூழ்ந்து கொண்டது. கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் என்னைத் திட்டிக்கொண்டும், இன்னும் சிலர் என்னைக் கத்தியால் துண்டு துண்டாக வெட்டிவிடுவதாக அச்சுறுத்திக் கொண்டும் மிரட்டிக் கொண்டிருந்தனர். என்னை மன்னிக்கும்படியும், என் மீது கருணை காட்டும்படியும் நான் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். நான் கூறியது எதுவும் அக்கூட்டத்தினரிடையே எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என்னை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. எனக்கு நேர்ந்த கதியைப் பற்றியும், இக்கூட்டத்தினால் நான் கொல்லப்பட்டால் என் உடலை என்ன செய்வது என்றும் மம்லதாருக்குக் கடிதம் எழுதிவைக்கலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
அவர்களுக்கு எதிராகமம்லதாருக்கு நான் புகார் எழுதுகிறேன் என்று தெரிந்தால், ஒரு வேளை அவர்கள் என்னைத் தாக்காமல் இருக்கக்கூடும் என்று நான் கருதினேன். ஒரு காகிதம் கொடுக்கும்படி ரவினாவை நான் கேட்டு வாங்கிக் கொண்டு அக்காகிதத்தில் கொட்டை கொட்டையாக அனைவரும் படிக்கும்படியாக கீழ்க்கண்டவாறு எனது பேனா கொண்டு எழுதத் தொடங்கினேன்.
பெறுநர்:
மம்லதார், தாலுகா போர்டு
அய்யா,
பர்மார் காளிதாஸ் சிவராமின் பணிவான வணக்கங்களை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று என்மீது சாவின் கரங்கள் விழுந்துவிட்டதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எனது பெற்றோரின் சொற்களை நான் கேட்டிருந்தால் இவ்வாறு எனக்கு நேர்ந்திருக்காது. எனவே என் சாவைப் பற்றி என் பெற்றோருக்குத் தயவுசெய்து தெரிவித்து விடுங்கள்.
நான் எழுதியதைப் படித்த நூலகர் உடனே அதனைக் கிழித்துப் போடும்படி கூறினார். நானும் கிழித்துப் போட்டேன். என் மீது அவர்கள் வசைமாரி பொழிந்தார்கள். "நீ என்ன உன்னை எங்களின் தலாத்தியாக நினைத்து பேசவேண்டும் என்று நினைக்கிறாயா? நீயோ ஒரு பங்கி; இந்த அலுவலகத்திற்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார நீ விரும்புகிறாயா? என்று கேட்டார். என் மீது கருணை காட்டும்படியும் நான் இதுபோல் செய்யமாட்டேன் என்றும், எனது வேலையை நான் விட்டுவிடுவதாகவும் கூறினேன். அந்தக் கும்பல் கலைந்து செல்லும் வரை மாலை 7 மணி வரை நான் அங்கே வைக்கப்பட்டிருந்தேன். அதுவரை தலாத்தியோ, கிராமத்தலைவரோ வரவேயில்லை. அதன்பின் 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாய்க்கு என் பெற்றோரிடம் திரும்பி வந்துவிட்டேன்.
*முற்றும்*
இணைப்புகள்
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-7
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-6
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-5
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-4
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-3
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-2
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1
இணைப்புகள்
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-7
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-6
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-5
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-4
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-3
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-2
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1
No comments:
Post a Comment