Saturday, April 13, 2019

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-4

அந்த உணவு விடுதி இரண்டு மாடிக் கட்டடமாக இருந்தது. தரைத் தளத்தில் பார்சிமுதியவர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். அவர் அதன் பராமரிப்பாளர்; அத்துடன் அங்கு தங்கும் பயணிகளுக்கு உணவும் அளித்து வந்தார். வண்டி விடுதியை அடைந்ததும் அவர் என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். நான் மேலே சென்றபோது வண்டிக்காரர் எனது சுமைகளை எடுத்து வந்தார். நான் அவருக்குக் கூலி கொடுத்ததும் அவர் சென்றுவிட்டார்.

தங்குவதற்கு இடமில்லையே என்ற பிரச்சினை தீர்ந்து போனதால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் என் உடைகளைக் களைந்தேன். இதற்கிடையில் விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடைகளைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார்.

பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார். பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஓர் இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார்.

அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்தவித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன்.

"எவ்வாறு நீ தங்கமுடியும்? இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வரவேண்டும்" என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பார்சிபெயரை உபயோகப் படுத்திக் கொள்கிறேன் என்று நான் கூறினேன். “எனக்கு ஆட்சேபணை இல்லை. என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே” என்று நான் கூறினேன்.

நான் கூறியதை ஏற்றுக்கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. நீண்டகாலமாக எந்தப்பயணியும் அங்கு வந்து தங்கவில்லை போலும் சிறிதளவு பணம் சம்பாதிக்க வந்த ஒரு வாய்ப்பையும் இழக்கவும் அவர் தயாராக இல்லை என்று தோன்றியது. தங்குவதற்கும், உணவு அருந்துவதற்கும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கே நான் தங்க அவர் ஒப்புக் கொண்டார்; என்னை ஒரு பார்சி என்று அவரது பதிவேட்டில் குறித்துக் கொண்டார்.

அவர் கீழே இறங்கிச் சென்றதும் நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். பிரச்சினை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்தோ! இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்க வில்லை. இந்த விடுதியில் நான் தங்கியிருந்ததற்கு ஏற்பட்ட சோகமான முடிவைப்பற்றி விவரிக்கும் முன்பாக, அங்கு நான் வாழ்ந்த குறுகிய காலத்தில் நான் எனது நேரத்தை எவ்வாறு கழித்தேன் என்பதை இங்கே விவரிக்கத்தான் வேண்டும்.

முதல் மாடியில் இருந்த விடுதியில் ஒரு சிறிய படுக்கை அறை இருந்தது. அதனையொட்டி தண்ணீர்க் குழாயுடன் கூடிய ஒரு சிறு குளியலறை இருந்தது. எஞ்சியிருந்தது எல்லாம் ஒரு பெரிய கூடம்தான். நான் அங்கே தங்கியிருந்தபோது, அந்தப் பெரிய கூடம் முழுவதும் பலகைகள், பெஞ்சுகள், உடைந்த நாற்காலிகள் போன்ற அனைத்து வகையான குப்பைக் கூளங்களால் நிரம்பி இருந்தது. அவைகளுக்கு இடையே நான் ஒருவன் மட்டும் தனி ஆளாக வாழ்ந்து வந்தேன். காலையில் விடுதிக்காப்பாளர் தேநீருடன் மாடிக்கு வருவார். எனது காலைச் சிற்றுண்டி அல்லது உணவுடன் 9.30 மணிக்கு மறுபடியும் வருவார். இரவு எனக்காக உணவுடன் 8.30 மணிக்கு மூன்றாம் முறையாக அவர் வருவார். அவர் தவிர்க்க இயலாத நேரங்களில் மட்டுமே மேலே வருவார், அப்படி வந்தாலும் என்னுடன் அவர் பேசுவதற்காகத் தயங்கியதேயில்லை. எப்படியோ நாள்கள் கழிந்தன.

பரோடா மன்னரின் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் நன்னடத்தைக் காலப் பணியாளராக நான் நியமிக்கப்பட்டேன். அலுவலகத்துக்குச் செல்ல காலை 10 மணி அளவில் விடுதியை விட்டுப் புறப்படுவேன்; அலுவலகம் முடிந்த பின் என்னால் வெளியில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ, கழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் என் நண்பர்களுடன் கழித்துவிட்டு இரவு 8 மணி அளவில்தான் விடுதிக்குத் திரும்புவேன். இரவைக் கழிக்க விடுதிக்குத் திரும்பவேண்டுமே என்ற எண்ணமே என்னை மிகவும் அச்சுறுத்தியது. ஓய்வெடுப்பதற்கு வானத்தின் கீழ் எனக்கு வேறு போக்கிடம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அந்த விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

விடுதியின் முதல் மாடியில் இருந்த பெரிய கூடத்தில் பேச்சுத் துணைக்கும் ஒரு மனிதரும் கிடையாது. நான் தனிமையில் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கூடம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். இருளைப் போக்க மின் விளக்கோ, எண்ணெய் விளக்கோ கூட இருக்க விலலை. எனது உபயோகத்துக்காக விடுதிக் காப்பாளர் ஒரு சிறிய அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வருவார். அதன் வெளிச்சம் சில அங்குல தூரத்துக்கு மேல் விழாது. ஏதோ ஒரு நிலவறையில் இருப்பதைப் போல் உணர்ந்த நான், பேசுவதற்கு மனிதர் எவராவது கிடைக்கமாட்டாரா என்று ஏங்கி இருந்தேன். ஆனால் எவரும் கிடைக்கவில்லை. மனிதர் நட்பு கிடைக்காமல் போன நிலையில், நான் புத்தகங்களை நாடினேன்; எப்போது பார்த்தாலும் நான் படித்துக் கொண்டே இருப்பேன்.

இவ்வாறு படிப்பதில் மூழ்கி இருந்த நான் எனது தனிமையை மறந்தேன். ஆனால் அக்கூடத்தைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்ட வவ்வால்கள் பறப்பதும், கீச்சிடுவதுமான ஓசைகள் எனது கவனத்தைத் திசைதிருப்பி, நான் எதை மறக்க நினைத்தேனோ, விந்தையானதொரு இடத்தில் விந்தை நிறைந்த ஒரு சூழ்நிலையில் நான் இருப்பதை நினைவுபடுத்தி என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. அது நிலவறை போன்றிருந்தாலும், அது தங்குவதற்கான ஓர் இடம் என்பதால், எந்த இடமும் இல்லாத நிலையில் அந்த இடமாவது இருக்கிறதே என்ற எண்ணத்தால் என் வருத்தத்தையும், கோபத்தையும் நான் அடக்கிக் கொண்டேன்.

நான் பரோடா வரும்போது பம்பாயில் விட்டு விட்டு வந்த எனது எஞ்சிய பொருள்களை எடுத்துக் கொண்டுவந்த என் அக்கா மகன் மனதை வருத்தும் என் நிலையைக் கண்டு பெருங் குரலெடுத்து அழத் தொடங்கி, விட்டான். அவனை நான் விரைவில் திருப்பி அனுப்ப வேண்டியதாகிவிட்டது. இந்த நிலையில் அந்தப் பார்சி விடுதியில் ஒரு பார்சி போல என்னைக் காட்டிக் கொண்டு நான் வாழ்ந்து வந்தேன். இவ்வாறு பார்சிபோல காட்டிக் கொண்டு நீண்ட நாள்கள் அங்கே தங்கியிருக்க முடியாது என்பதையும், என்றாவது ஒரு நாள் நான் பார்சி இல்லை என்பது தெரியப் போகிறது என்பதையும் நான் அறிந்தே இருந்தேன். அதனால் அரசு வீடு ஒன்றைப் பெற நான் முயன்று கொண்டிருந்தேன். ஆனால், பிரதம மந்திரியோ என் கோரிக்கையை நான் நினைத்தது போல் அவசரமானது என்று கருதவில்லை. எனது விண்ணப்பம் ஓர் அதிகாரியிடமிருந்து மற்றொரு அதிகாரிக்குச் சென்று கொண்டிருந்தது, எனக்கு இறுதியாகப் பதில் கிடைப்பதற்கு முன் விடுதியை விட்டு நான் வெளியேற வேண்டிய கடுமையான நெருக்கடி எழுந்தது.

நான் விடுதிக்கு வந்து தங்கத் தொடங்கிய 11ஆவது நாள் அன்று காலை உணவை முடித்துக் கொண்டு, உடை உடுத்திக் கொண்டு அலுவலகத்துக்குச் செல்ல எனது அறையை விட்டு வெளியே வந்தேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக அவற்றை நான் கையில் எடுத்துக் கொண்டிருந்தபோது, பெரும் எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மாடிப்படிகளில் ஏறி வரும் ஓசை கேட்டது. தங்குவதற்காக வந்துள்ள சுற்றுலாப் பயணிகளாக அவர்கள் இருப்பார்கள் எனக் கருதிய நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப்பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப் பார்வையுடன், உயரமான தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன்.

அவர்கள் சுற்றுலாப்பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்துகொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர். என் அறை முன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். "நீ யார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சிபெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்” என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை. என் போலித் தனத்தை என்னால் தொடர முடியவில்லை. உண்மையிலே நான் செய்தது ஒரு மோசடிதான்; என் மோசடி கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. நான் ஒரு பார்சிதான் என்று கூறி அந்த விளையாட்டைத் தொடர்ந்திருந்தால், கோபம் கொண்டிருந்த, வெறி பிடித்திருந்த அந்தப் பார்சிக் கூட்டம் என்னைத் தாக்கி சாகடித்திருப்பார்கள் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.

                           

No comments:

Post a Comment