Wednesday, April 24, 2019

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-5

எனது அடக்கமும், அமைதியும் இந்த அழிவைத்  தவிர்த்தது. எப்போது காலி செய்யப்போகிறாய் என்று அவர்களில் ஒருவர் கேட்டார் அப்போது எனது தங்குமிடத்தை எனது உயிரை விட மேலானதாக நான் மதித்தேன். அக்கேள்வியில் பொதிந்திருந்த கருத்து கடுமையான ஒன்று. அதனால் நான் எனது மவுனத்தைக் கலைத்து, இன்னும் ஒரு வாரம் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்குள் வீடு கேட்டு நான் அளித்த விண்ணப்பத்தின் மீது சாதகமான முடிவு ஏற்பட்டு விடும் என்று நான் கருதினேன். ஆனால் நான் கூறுவதையெல்லாம் கேட்கும் மனநிலையில் அந்தப் பார்சிகள் இருக்கவில்லை.

அவர்கள் எனக்குக் கெடு நிர்ணயித்தார்கள். "மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது; உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன். எனது தங்குமிடம் என்றும், எனது மதிப்பு மிகுந்த உடைமை, எனக்கு மறுக்கப் பட்டது. அது சிறைக் கைதியின் அறையை விட எந்த விதத்திலும் மேலானதல்ல; என்றாலும் அது எனக்கு மதிப்பு மிகுந்ததாகவே இருந்தது.

அந்தப்பார்சிகள் சென்ற பிறகு இதிலிருந்து மீள ஒரு வழியைக் கண்டுபிடிப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டு சிறிது நேரம் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். விரைவில் அரசு வீடு ஒன்று கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது; அவ்வாறு கிடைத்துவிட்டால் என் தொல்லைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அதனால் இப்போது எனக்கு உள்ள பிரச்சினை ஒரு தற்காலிகப் பிரச்சினைதான்; அதனால் நண்பர்களிடம் செல்வது இதற்குத் தகுந்த தீர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன். பரோடா சமஸ்தானத்தில் தீண்டத்தகாதவர் களாக உள்ள. நண்பர்கள் எவரும் எனக்கு இல்லை. 

ஆனால் மற்ற சமூகங்களைச் சேர்ந்த நண்பர்கள் எனக்கு இருந்தனர். அவர்களில் ஒருவர் இந்து மற்றொருவர் இந்தியக் கிறிஸ்தவர். முதலில் இந்து நண்பர் வீட்டுக்கு நான் சென்று எனக்கு நேர்ந்ததை நான் கூறினேன். அருமையான மனிதரான அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். எனது கதையைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார். என்றாலும் அவர் ஒன்று மட்டும் கூறினார். “என் வீட்டிற்கு நீ வந்தால், என் வேலைக்காரர்கள் போய்விடுவார்கள்” என்று கூறினார். அவர் கோடிட்டுக் காட்டியதைப் புரிந்து கொண்ட நான் எனக்கு இடம் தருமாறு அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. இந்தியக் கிறிஸ்தவ நண்பரிடம் செல்ல நான் விரும்பவில்லை. தன்னுடன் வந்து தங்கும்படி அவர் என்னை முன்பொரு முறை அழைத்திருந்தார். ஆனாலும் பார்சி விடுதியிலேயே தங்கிக் கொள்வதாகக் கூறி அவர் அழைப்பை நான் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். இதன் காரணம் அவரது பழக்க வழக்கங்கள் என் மனம் ஏற்பவையாக இருக்கவில்லை என்பதுதான்.

இப்போது அங்கு செல்வது நானே தண்டலை வேண்டிப் பெறுவது போன்றது. எனவே நான் அலுவலகத்திற்குச் சென்றேன். ஆனால் ஒரு தங்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் இந்த வாய்ப்பை உண்மையில் என்னால் தவிர்த்துவிட முடியவில்லை. ஒரு நண்பரைக் கலந்து பேசிய  பின், கிறிஸ்தவ நண்பரைச் சென்று சந்தித்து எனக்குத் தங்க இடம் தருவாரா என்று கேட்க முடிவு செய்தேன். நான் அவரை இவ்வாறு கேட்டவுடன், தன் மனைவி மறுநாள் பரோடா வருவதாகவும் இது பற்றித் தன் மனைவியிடம் தான் கலந்து பேச வேண்டும் என்று அவர் பதிலளித்தார். அது ஒரு தந்திரமான பதில் என்பதைப் பின்னர் நான் அறிந்து கொண்டேன்.

அவரும் அவரது மனைவியும் மதம் மாறுவதற்கு முன் பார்ப்பன ஜாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், மதமாற்றத்திற்குப் பின் கணவர் சிந்தனையில் தாராள மனம் கொண்டவராக மாறிவிட்டபோதும், மனைவி பழைமையான வழிகளிலேயே இருந்தார் என்பதும், தன் வீட்டில் ஒரு தீண்டத்தகாதவர் தங்க மனைவி இடம் அளிக்கமாட்டார். என்பதும் தெரிய வந்தது. இவ்வாறு எனது கடைசி நம்பிக்கையும் கருகிப் போனது. எனது கிறிஸ்தவ நண்பரின் வீட்டை விட்டுப் புறப்படும்போது மாலை 4 மணி ஆகிவிட்டது. எங்கே செல்வது என்பது ஒன்றே என் முன் இருந்த மாபெரும் கேள்வியாக இருந்தது. நான் பார்சிவிடுதியை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் ஆனால் நான் சென்று தங்குவதற்கு வேறு இடமில்லை. என் முன் இருந்த ஒரே வழி பம்பாய்க்குத் திரும்பிச் செல்வதுதான்.

பரோடாவில் இருந்து பம்பாய் செல்லும் ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும். இடையில் நான் அய்ந்து மணி நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. எங்கு அதைக் கழிப்பது? விடுதிக்குச் செல்லலாமா? நண்பனிடம் செல்லலாமா? மீண்டும் விடுதிக்குச் செல்லும் துணிவு எனக்கு ஏற்படவில்லை. என் நண்பனிடமும் செல்ல நான் விரும்பவில்லை. எனது நிலை பரிதாபப்படத் தக்கதாக இருந்தபோதும், என்னைக் கண்டு எவரும் பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. காமதி கார்டன் என்று அழைக்கப்படும் பொதுப் பூங்காவில் அந்த அய்ந்து மணி நேரத்தையும் கழிக்க முடிவு செய்தேன்.

இது போன்ற நம்பிக்கை இழந்த நிலையில் குழந்தைகள் நினைப்பதைப் போன்று எனக்கு நேர்ந்ததைப் பற்றியும், என் தாய் தந்தையைப் பற்றியும் எண்ணிக் கொண்டு நான் பூங்காவில் உட்கார்ந்திருந்தேன். இரவு 8 மணிக்குப் பூங்காவை விட்டு வெளியே வந்த நான், ஒரு வண்டி வைத்துக் கொண்டு பார்சி விடுதிக்குச் சென்று என் உடைமைகளைக் கீழே எடுத்து வந்தேன். விடுதிக் காப்பாளர் வெளியே வந்தார்; ஆனால் அவரோ நானோ ஒருவரிடம் ஒருவர் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. இத்தகைய துன்பத்திற்கு நான் ஆளானதற்குத் தானும் ஏதோ ஒரு வழியில் காரணமாக இருந்துவிட்டோம் என்று அவர் உணர்ந்தார்.

அவருக்குச் சேரவேண்டிய பணத்தை நான் கொடுத்தேன். அவர் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டார்; நானும் அமைதியாகவே விடை பெற்றுக் கொண்டேன். பெரும் நம்பிக்கையுடன் பரோடாவுக்குச் சென்றான். எனக்குக் கிடைத்த பெரிய பெரிய வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டேன். அது போர்க்காலம். இந்தியக் கல்விப் பணியில் பல வேலைகள் காலியாக இருந்தன. இலண்டனில் உள்ள செல்வாக்கு மிக்க பலரை நானறிவேன். ஆனால் எந்தவித உதவிக்காகவும் அவர்களை நான் நாடியதில்லை. என் கல்விக்குப் பணமளித்து, உதவிய பரோடா மன்னருக்குச் சேவை செய்வதே எனது கடமை என்று நான் உணர்ந்திருந்தேன். ஆனால் 11 நாள்கள் மட்டுமே தங்கிவிட்டுப்பரோடாவைவிட்டு, நான் பம்பாய் திரும்பிச் செல்ல நேர்ந்தது.

தடிகளைக் கைகளில் ஏந்தி பத்துப் பன்னிரண்டு பார்சிகள் வரிசையாக என் முன் அச்சுறுத்தும் முறையில் நின்று கொண்டிருந்ததும், கருணையை வேண்டியும், அஞ்சிய பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்றிருந்ததுமான காட்சி 18 நீண்ட ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனத்திரையிலிருந்து மறையவே இல்லை. இன்று கூட அந்த நிகழ்ச்சியை என்னால் தெளிவாக நினைவுபடுத்திப்பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அதை நினைவுபடுத்திப் பார்த்த எந்த ஒரு நேரத்திலும் என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை. ஒரு இந்துவுக்குத் தீண்டத்தகாதவன். என்பவன், ஒரு பார்சிக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்போதுதான் முதன் முதலாக நான் உணர்ந்து கொண்டேன்.


இணைப்புகள்

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-7

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-6

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-5

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-4

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-3

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-2

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1






No comments:

Post a Comment