Monday, April 15, 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-3

உற்பத்திக் கருவிகள் அனைத்தின் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச்  சாதனங்களில் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லாத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும் கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகளை அது சக்தி வாய்ந்த பீரங்கிகளாய்க் கொண்டு, சீன மதிலை ஒத்த எல்லாத் தடை மதில்களையும் தகர்த்திடுகிறது ; அநாகரிகக் கட்டத்தில் இருப்போருக்கும் அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாத வெறுப்பைப் பணிய வைக்கிறது.

ஏற்காவிடில் அழியவே நேருமென்ற நிர்ப்பந்தத்தின் மூலம் அது எல்லாத் தேசங்களையும் முதலாளித்துவப் பொரு ளுற்பத்தி முறையை ஏற்கச் செய்கிறது ; நாகரிகம் என்பதாய்த் தான் கூறிக் கொள்வதைத் தழுவும்படி, அதாவது முதலாளித்துவமயமாகும்படி எல்லாத் தேசங்களையும் பலவந்தம் செய்கிறது. சுருங்கக் கூறுமிடத்து, அப்படியே தன்னை உரித்து வைத்தாற் போன்றதோர் உலகைப் படைத்திடுகிறது அது.

முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களது ஆட்சிக்குக் கீழ்ப்படச் செய்துள்ளது, மாபெரும் நகரங்களை அது உதித்தெழ வைத்திருக்கிறது ; கிராம மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர மக்கள் தொகையை வெகுவாய் அதிகரிக்கச் செய்திருக்கிறது; இவ்விதம் மக்களில் ஒரு கணிசப் பகுதியோரை கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டிருக்கிறது. எப்படி அது நாட்டுப்புறத்தை நகரங்களைச் சார்ந்திருக்கச் செய்துள்ளதோ, அதேபோல அநாகரிக நிலையிலும் குறை நாகரிக நிலையிலுமுள்ள நாடுகளை நாகரிக நாடுகளையும் விவசாயிகளது நாடுகளை முதலாளிகளது நாடுகளையும், கிழக்கு நாடுகளை மேற்கு நாடுகளையும் சார்ந்திருக்கச் செய்துள்ளது.

மக்கள் தொகை, உற்பத்திச் சாதனங்கள், சொத்து இவற்றின் சிதறுண்ட நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் முடிவு கட்டி வருகிறது. மக்கள் தொகையை அது அடர்ந்து திரட்சி பெறச் செய்திருக்கிறது, உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியிருக்கிறது, சொத்துக்களை ஒரு சிலர் கையில் குவிய வைத்திருக்கிறது.

இதன் தவிர்க்கவொண்ணாத விளைவு என்னவெனில், அரசியல் அதிகாரமும் மையப்படுத்தப்பட்டது. தனித்தனி நலன்களும் சட்டங்களும் அரசாங்கங்களும் வரி விதிப்பு முறைகளும் கொண்டனவாய்ச் சுயேச்சை யாகவோ, அல்லது தளர்ந்த இணைப்புடனோ இருந்த மாநிலங்கள் ஒரே அரசாங்கத்தையும் ஒரே சட்டத் தொகுப்பையும் தேச அளவிலான ஒரே வர்க்க நலனையும் ஒரே தேச எல்லையையும் ஒரே சுங்கவரி முறையும் கொண்ட ஒரே தேசமாய் ஒருசேர இணைக்கப்பட்டன.

முதலாளித்துவ வர்க்கம் ஒரு நூறாண்டுகூட நிறைவுறாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்திய எல்லாத் தலை முறைகளுமாய்ச் சேர்ந்து உருவாக்கியதைக் காட்டிலும் மலைப்பு தட்டும் படியான பிரம்மாண்ட உற்பத்தி சக்திகளைப் படைத்தமைத்திருக்கின்றது.

இயற்கை சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், இயந்திரச் சாதனங்கள், தொழில் துறையிலும் விவசாயத்திலும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்விசைத் தந்தி, முழுமுழு கண்டங்களைத் திருத்திச் சாகுபடிக்குச் செப்பனிடுதல், ஆறுகளைக் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றனவாய் ஒழுங்கு செய்தல், மனிதன் அடியெடுத்து வைத்திராத இடங்களில் மாய வித்தை புரிந்தாற் போல் பெரும் பெரும் தொகுதிகளிலான மக்களைக் குடியேற்றுவித்தல் - இம்மாதிரியான பொருளுற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் சயனம் புரியுமென இதற்கு முந்திய எந்த நூற்றாண்டாவது கனவிலும் நினைத்திருக்குமா?

ஆக, நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்து வர்க்கம் உருப்பெற்று எழுவதற்கு அடிப்படையாய் இருந்த பொருளுற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்கள் பிரபுத்துவ சமுதாயத்தில் பிறந்தவை. இந்தப் பொருளுற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்களது வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், பிரபுத்துவ சமுதாயத்தின் பொருளுற்பத்தி, பரிவர்த்தனை உறவுகள், விவசாயத்துக்கும் பட்டறைத் தொழிலுக்குமான பிரபுத்துவ ஒழுங்கமைப்பு - சுருக்கமாய்ச் சொல்வதெனில் பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள் - வளர்ச்சியுற்றுவிட்ட உற்பத்தி சக்திகளுக்கு ஒவ்வாதனவாயின; அவை பொருளுற்பத்திக்குப் பூட்டப்பட்ட கால் விலங்குகளாய் மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையில்லாப் போட்டியும், அதனுடன் கூடவே அதற்குத் தகவமைத்த சமூக, அரசியல் அமைப்பும் முதலாளித்துவ வர்க்கத்தினுடைய பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்தமர்ந்து
கொண்டன.

இதைப் போன்றதோர் இயக்கம் இப்போது நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி, பரிவர்த்தனை உறவுகளையும் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளையும் கொண்டதாகிய நவீன முதலாளித்துவ சமுதாயம், மாயவித்தை புரிந்து தோற்றுவித்தாற் போல் இவ்வளவு பிரம்மாண்டப் பொருளுற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும்   தோற்றுவித்திருக்கும் இச்சமுதாயம், பாதாள உலகிலிருந்து தனது மந்திரத்தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற் போன மந்திரவாதியின் நிலையில் இருக்கக் காண்கிறோம்.

கடந்த சில பத்தாண்டுகளது தொழில், வாணிப வரலாறே, நவீனப் பொருளுற்பத்தி சக்திகள் நவீனப் பொருளுற்பத்தி உறவுகளை எதிர்த்து, முதலாளித்துவ வர்க்கமும் அதனுடைய ஆதிக்கமும் நிலவுவதற்கு அவசியமான நிலைமைகளாகிய சொத்துடைமை உறவுகளை எதிர்த்துப் புரிந்திடும் கலகத்தின் வரலாறுதான். இதைத் தெளிவுபடுத்த, கால அலைவட்ட முறையில் திரும்பத் திரும்ப எழும் வாணிப நெருக்கடிகளைக் குறிப்பிட்டால் போதும் - திரும்பத் திரும்ப எழுந்து, ஒவ்வொரு தரமும் முன்னிலும் அபாயகரமான முறையில் இந்நெருக்கடிகள் முதலாளித்துவ சமுதாயம் அனைத்தின் நிலவுதலை ஆட்சேபக் கேள்விக்குரியதாக்குகின்றன. இந்த வாணிப நெருக்கடிகளின் போது ஒவ்வொரு தரமும் இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களில் மட்டுமின்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளிலும் ஒரு பெரும் பகுதி அழிக்கப்படுகிறது.
                                                                                                                          

No comments:

Post a Comment