Monday, April 8, 2019

இயற்பகை நாயனாரின் ஆணாதிக்கம்

இயற்பகை நாயனார் என்பவர் 63 நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரைப் பற்றிய குறிப்பு தேவாரத்தின் ஏழாம் திருமுறையில் சுந்தரமூர்த்தி நாயனாரால் இயற்றப்பட்ட திருத்தொண்டத்தொகையில் காணப்படுகிறது. தேவாரம் என்பது சைவ சமய கடவுளாகிய சிவபெருமானை பற்றி பாடப்பட்ட பன்னிரண்டு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளின்  தொகுப்பாகும். இவற்றில் முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் திருஞானசம்பந்தர், அடுத்த மூன்று திருமுறைகளைப் பாடியவர் அப்பர் என்கிற திருநாவுக்கரசர் மற்றும் இறுதியான ஏழாம் திருமுறையை பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார். இது சிவபெருமானுடைய அடியார்களைப் பற்றி பாடுவதால் இப்பெயர் பெற்றது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்பகை நாயனாரைப் பற்றி சொல்லப்படும் ஒரு கதையைப் பார்ப்போம்.
திருத்தொண்டத் தொகையில்,
"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கு அடியேன்" 
என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார். இதில் " இல்லையே என்னாத இயற்பகைக்கு அடியேன்" என்று இயற்பகை நாயனாரைப்  பற்றிக் குறிப்பிடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடுபொருள் ஆவதற்கு அப்படி இயற்பகை நாயனார் என்னதான் செய்தார்? அப்படி எதனை அவர் இல்லை என்று சொன்னார்? அவற்றைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக இங்கே பார்க்கலாம்.
இயற்பகை நாயனார் பெரும் வணிகர் ஆவார். இவர் தம் வாழ்க்கையில் பெரும்பேறு, இறைவனுடைய அடியார்களின் குறைகளைத் தீர்ப்பது என்று நினைத்தார். அதாவது அவர்கள் எதனை கேட்டாலும் தன்னிடம் இருக்குமாயின் அதனை இல்லை என்று சொல்வதில்லை என்று தீர்மானித்தார். இதனால் அவருடைய பெருமையை உலகம் அறியும்படிச் செய்ய இறைவன் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டாராம். அதற்காக இறைவன் சிவபெருமானும் இயற்பகை நாயனாரும் செய்த காரியங்கள் நம்மை வியக்கச் செய்கின்றன.
இவ்வாறாக இயற்பகை நாயனாரின் பெருமையை உலகம் அறியும்படிச் செய்வதற்கு முடிவெடுத்த இறைவன், தன்னுடைய திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசிக் கொண்டு, வேதியர் வேடத்தில் அதாவது பார்ப்பனர் வேடத்தில் இயற்பகை நாயனாரின் இல்லத்தை அடைந்தார். அவர் வருவதை அறிந்த இயற்பகை நாயனார் அவரை முன்னால் சென்று வரவேற்று அடியார் என் இல்லத்திற்கு வருகை தந்தது நான் செய்த பெரும் பேறு என்று கூறி வரவேற்றார்.
பிறகு பார்ப்பனர் வேடத்தில் இருக்கும் சிவபெருமான், சிவனடியார்கள் வேண்டுவதை எல்லாம் இல்லை என்று மறுக்காமல் செய்கின்ற உன்னிடத்தில் நான் ஒன்றை வேண்டி வந்தேன் என்று கூறுகின்றார். உடனே இயற்பகைநாயனார் எம்மிடம் இருக்கும் எந்தப் பொருளானாலும் அது சிவனடியாரின் உடைமை என்று கூறுகின்றார். இப்படிச் சொன்னதுதான் தாமதம், உடனே இறைவன் நான் உன்னுடைய மனைவியை விரும்பி இங்கே வந்தேன் என்று கூறுகின்றார். இதைக் கேட்டதுதான் தாமதம், இயற்பகை நாயனார் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறார். ஏனெனில் இறைவன் தன்னிடம் இல்லாத ஒரு பொருளை கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி இருந்தார். ஆனால் இறைவனோ தன்னுடைய உடைமையான அதாவது தன்னுடைய மனைவியை வேண்டியுள்ளார். இது உள்ளபடியே அவருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது நான் பெற்ற புண்ணியம் ஆகும் என்று கூறி வீட்டிற்குள் புகுந்தார்.
அங்கு அவருடைய மனைவியிடம் பெண்ணே இன்று நான் உன்னை இந்த அடியாருக்கு கொடுத்து விட்டேன் என்று கூறினாராம். அது கேட்ட அவருடைய மனைவி முதலில் மனம் கலங்கி பிறகு தெளிவடைந்தாராம். தெளிவடைந்த பிறகு, என் கணவராகிய தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு உரிமை எனக்கு உள்ளதோ? ( இதனை இன்றைய பாணியில் சொல்ல வேண்டுமானால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், என்று சொல்லலாம்) என்று சொல்லி, தன் கணவரை வணங்கினாராம்.
அவரும் தம்மால் இறைவனடியாருக்கு தன் மனைவியை வாழங்கமுடிந்ததை எண்ணி அவ்வம்மையார் வணங்கினாராம். இவ்வாறாக இறைவனடியாரிடம் தன் மனைவியை ஒப்படைத்த பிறகு மேலும் நான் செய்ய வேண்டிய பணி ஏதும் உள்ளதோ என்று கேட்டார். அதற்கு அந்தப் பார்ப்பனர் உருவத்தில் இருக்கும் இறைவன், நான் இந்தப் பெண்ணை தனியே அழைத்து செல்ல வேண்டும். அதற்கு இந்த ஊரையும் உன்னுடைய சுற்றத்தாரையும் கடந்து செல்வதற்கு நீ பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட இயற்பகை நாயனார், இதனை தாங்கள் கேட்கும் முன்பு நானே அறிந்து செய்திருக்க வேண்டும். தாங்கள் கேட்டு நான் செய்ய வேண்டிய நிலை ஆயிற்றே என்று வருத்தமடைந்தார்.
பிறகு வீட்டிற்குள் சென்று, வாளும் கேடயமும் தாங்கி போர்க்கோலம் பூண்டு வெளியே வந்தார். அந்தப் பார்ப்பனரையும் தன் மனைவியையும் முன்னே போகவிட்டு, அவர்களுக்குப் பின்னால் துணையாகச் சென்றார்.
இது கண்ட இயற்கையின் சுற்றத்தார்கள் இயற்கை பித்தன்போல் செய்கிறான், தன் மனைவியை இன்னொருவருடன் அனுப்பிவைத்து பின்னால் துணையாக செல்கிறான் என்று கூறினர். சிலர் அந்த பார்ப்பனரையும் இயற்பகையின் மனைவியையும் சுற்றிவளைத்தனர். இது கண்டு அந்தப் பார்ப்பனர் அஞ்சியதுபோல், அந்தப் பெண்ணைப் பார்த்தார். அதற்கு அந்தப் பெண் "இயற்பகை வெல்லும் அஞ்சவேண்டாம்" என்று கூறுகிறார்.
இது கண்ட இயற்பகை நாயனார் தன்னுடைய சுற்றத்தாரை எச்சரிக்கின்றார். அதற்கு சுற்றத்தார்கள் ஏனடா இப்படி ஒரு காரியத்தையும் செய்து விட்டு எங்களை எச்சரிக்கின்றாயா என்று கேட்கின்றனர். நாங்கள் போரிட்டு மடிந்தாலும் மடிவோமே ஒழிய இது போன்ற ஒரு காரியத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர். இதுகேட்ட இயற்பகை நாயனார் தப்பி ஓடியவர்கள் தவிர மற்ற அனைவரையும் வெட்டி வீழ்த்துகிறார். பிறகு அந்த ஊரை கடந்ததும், நான் வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கேட்கின்றார். அதற்கு, இனிமேல் நீ செல்லலாம் என்று அந்தப் பார்ப்பனர் சொல்லுகின்றார்.
இதுதான் இயற்பகை நாயனார் இறைவனுடைய அடியார்க்கு செய்த திருத்தொண்டு ஆகும். இறைவனடியார் வேடத்தில் வந்த இறைவன் தன்னுடைய மனைவியை விரும்பி கேட்டபோதும் இல்லை என்று மறுக்காது தன்னுடைய  மனைவியையே அவருக்கு ஒப்படைத்ததால் இயற்பகை நாயனார் " இல்லையே என்னாத இயற்பகை" என்ற பெயர் பெற்றார் போலும்.
இவ்வாறாக இறைவனின் பெருமையையும் இறைவனடியாரின் பெருமையையும் விவரிக்கின்றது திருத்தொண்டத் தொகை மற்றும் இயற்பகை நாயனாரின் வரலாறு. பெண்களை ஆண்கள் தங்கள் உடைமைகளாகவே கருத வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே இந்த வரலாறு தோன்றியது போலும். என்ன ஒரு ஆணாதிக்கத் திமிர் இருந்தால் தன்னுடைய மனைவியை இன்னொருவருடன் நீ சென்று வா என்று சொல்லக் கூடிய தைரியம் வரும்.

No comments:

Post a Comment