Tuesday, May 7, 2019

வினைச்சொல்

ஒரு தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல் எனப்படும்.

உதாரணம்

ஓடுதல் என்பது ஒரு தொழிற் பெயர் ஆகும்.

ஓடினான், ஓடுகின்றான், ஓடுவான் போன்ற இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய ஏதேனும் ஒரு காலத்தை குறித்தால் அது வினைச்சொல் எனப்படும்.

சுருங்கக்கூறுமிடத்து, ஒரு பொருளின் வினையை (செயலை)க் குறிப்பது வினைச்சொல் ஆகும்.

முடிவு பெற்ற வினைச்சொல் வினை முற்று எனப்படும். 

உதாரணம்

படித்தான், பாடுவான்

இந்த வினை முற்று, தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இரண்டு வகைப்படும்

தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

உதாரணம்

கலைஞர் கருணாநிதி சங்கத்தமிழ் எழுதினார்

இங்கு,

செய்பவன் - கலைஞர் கருணாநிதி

கருவி - எழுதுகோல், கை

நிலம் - ‌‌‌‌‌அவர் இருப்பிடம்

செயல் - எழுதுதல்

காலம் - இறந்த காலம்

செய்பொருள் - சங்கத்தமிழ் 

இவ்வாறு செய்பொருள் ஆறையும் காட்டுவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

குறிப்பு வினைமுற்று

குறிப்பு வினைமுற்று என்பது ஒரு செயலை செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று எனப் பெயர் பெற்றது.

உதாரணம்

அவன் செல்வன்

இந்தத் தொடரில் செல்வன் என்பது செல்வமுடையவன் என்று பொருள் தரும். 

இதில், செல்வம் என்னும் பொருளின் அடிப்படையில் தோன்றி அதனைப் பெற்றிருக்கும் கருத்தாவை மட்டும் உணர்த்துகின்றது. 

இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருள் முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும் குறிப்பு வினைமுற்றுகளுக்கான உதாரணங்கள் பின்வருமாறு;

செல்வன் - பொருள்

வேநாடன் - இடம்

ஆதிரையான் - காலம்

கண்ணன் - சினை

கரியன் - குணம்

நடையன் - தொழில்

இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செயலைச் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

முற்றுப் பெறாத சொற்கள் எச்சம் எனப்படும்.

இது பெயரெச்சம், வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.

பெயரெச்சம்

பெயர்ச்சொல்லை ஏற்று முற்றுப் பெறும் எச்சவினைச்சொல் (முற்றுப் பெறாத வினைச்சொல்) பெயரெச்சம் எனப்படும்.

இது தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இரு வகைப்படும்.

தெரிநிலைப் பெயரெச்சம்

செயலையும் காலத்தையும் உணர்த்தி நின்று அறுவகை பொருட்பெயருள் ஒன்றைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும்.

உதாரணம்

எழுதிய கலைஞர்

எழுதுகின்ற கலைஞர்

எழுதும் கலைஞர்

மேற்கண்ட உதாரணங்களில் எழுதிய, எழுதுகின்ற, எழுதும் ஆகிய சொற்கள் முற்றுப் பெறவில்லை. மேலும் அவை முறையே இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற முக்காலத்தையும், எழுதுதல் என்ற செயலையும் உணர்த்தி நின்று கலைஞர் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெற்றுள்ளது.

இவ்வாறு, செயலையும் காலத்தையும் உணர்த்தி நின்று, செய்பவன், செயல், கருவி, நிலம், செய்பொருள், காலம் ஆகிய பொருட்பெயர் ஆறினுள் ஒன்றைக் கொண்டு முடியும் எச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

குறிப்புப் பெயரெச்சம்

செயலையோ காலத்தையோ உணர்த்தாமல் பண்பு அல்லது குணத்தை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

உதாரணம்

சிறந்த தலைவன்

அழகிய இல்லம்

சிறந்த, அழகிய ஆகிய சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி, பெயர்ச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெற்றுள்ளது.

இவ்வாறு காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், குறிப்பால் மட்டுமே உணர்த்துவதால், இது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.

வினையெச்சம்

வினைமுற்றினை ஏற்று முற்றுப் பெறும் எச்சவினைச்சொல் வினையெச்சம் எனப்படும்.

இது தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.

தெரிநிலை வினையெச்சம்

காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று வினைமுற்றினைக் கொண்டு முற்றுப் பெறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் ஆகும்.

உதாரணம்

படித்துத் தேறினான்

எழுதி முடித்தார்

இங்கு,

எச்சவினைச்சொல் - படித்துத், எழுதி

வினைமுற்று - தேறினான், முடித்தார்

குறிப்பு வினையெச்சம்

பண்பு அல்லது குணத்தை மட்டும் உணர்த்தி நின்று வினைமுற்றினைக் கொண்டு முற்றுப் பெறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் ஆகும்.

உதாரணம்

வேகமாக ஓடினான்

சிறப்பாக ஏமாற்றினான் 

இங்கு,

பண்பு - வேகமாக, சிறப்பாக

வினைமுற்று - ஓடினான், ஏமாற்றினான்



No comments:

Post a Comment