மூடநம்பிக்கை எந்த ரூபத்திலும் ஏற்புடையது இல்லை. ஆனால், அத்தகைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் பெரும்பான்மையான மக்களுக்கும் கூட அதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பது, உள்ளபடியே வியப்பிற்குறியது. ஆம் புராண காலங்களில், இத்தகு மூடநம்பிக்கையின் பலனை எடுத்துரைக்க நிமித்திகன்(குறி பார்ப்பான்) இருந்தான்.
ஆனால், இன்றைய நிலை சற்று வித்தியாசம் தான். ஆமாம், ஒரு பூனை குறுக்கே போனால் போதும், உடனே இருப்பவர் அணைவரும் நிமித்திகன் அவதாரம் எடுத்து விடுகின்றனர். இப்படி சகுனம் பார்ப்பது பற்றி, கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் கம்பர்(சேக்கிழார் இல்லை) குறிப்பிடுகிறார். பரசுராம படலத்தில் (24), தயரதன்(தசரதன்) ராமணுடன் அயோத்தி திரும்பும் வழியில் முதலில் மயில் இடமிருந்து வலமாக சென்றது, பின்னர் காகம் வலமிருந்து இடமாக சென்றது. இதற்கான சகுனத்தை தயரதன் நிமித்திகனிடம் கேட்டு அறிந்து கொண்டான் என்று கவிச்சக்கரவர்த்தி குறிப்பிடுகிறார்.
அகலிகை சாப விமோசனம் அடைதல்
சில நல்ல, தீய சகுனங்கள் பற்றி கூறப்படும் செய்திகளாவன: மயில், நாரை, விச்சுளி(மீன் கொத்தி), செம்போத்து(செண்பகம்), காக்கை, கிளி, கொக்கு, கோழி, ஓணான், புல்லி மான், புனுகு பூனை, புலி மற்றும் நரி இவைகள் இடமிருந்து வலமாக சென்றால், நல்ல சகுனமாகவும், வலமிருந்து இடமாக சென்றால், தீய சகுனமாகவும், வலியன்(உடும்பு), கருடன், காடை, கீரி, குரங்கு, கழுகு மற்றும் ஆந்தை இவைகள் வலமிருந்து இடமாக சென்றால், நல்ல சகுனமாகவும், இடமிருந்து வலமாக சென்றால் தீய சகுனமாகவும் பார்க்கப்படுகிறது.
நம்ம ஆளுக்கு இதெல்லாம் தேவை இல்லை. வெங்காயம் குறுக்கே போச்சு, வெலக்கமாரு(துடைப்பம்) குறுக்கே போச்சு அதுனால கெட்ட சகுனம்னு சொல்லிடுவான். மேற்சொன்ன விலங்குகள் அணைத்தும் குறுக்கே தான் செல்லும் அது அவற்றின் குணம். அவை ஒன்றும் மனிதனுடன் ராணுவ அணிவகுப்பிற்கு செல்லவில்லை மனிதனுடன் சேர்ந்து செல்வதற்கு. அல்லது மனிதனுடன் சுற்றுலா செல்லவில்லை.
இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களை மாற்றும் முயற்சி அல்ல இது. குறைந்த பட்சம் அவர்கள் இதை தெரிந்து கொண்டு பேசுவார்களேயானால், எங்களை போன்றவர்கள் அது அப்படி இல்லை இப்படி, இப்படி இல்லை அப்படி என்று தெளிவுபடுத்திய பிறகு அதனை மறுப்பதற்கான அவசியம் ஏற்படாது என்ற நம்பிக்கையின் விளைவே இந்த பதிவு. |
No comments:
Post a Comment