Saturday, April 6, 2019

கண்ணகி சிலையும் தி.மு.கழகமும்

தமிழகத்தில் வடமொழி கலப்பினால் சிதிலமடைந்து கிடந்த தமிழ் மொழியும் பார்ப்பனியத்தால் வீழ்ந்து கிடந்த இனப்பற்றும் திராவிட இயக்கங்களின் எழுச்சிக்கு பிறகே மறுமலர்ச்சியடைந்தன. குறிப்பாக தி.மு.கழகத்தின் எழுச்சிக்கு பிறகு தமிழ் இலக்கியங்களில் முதன்மையான திருக்குறள் வெகுஜனப்படுத்தப்பட்டது. இதற்கு அடித்தளமிட்டவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். 1949 ஆம் ஆண்டே அவர் திருக்குறள் மாநாட்டினை நடத்தினார். என்னதான் சில குறள்களில் மாற்று கருத்து இருந்தாலும் இதனை செய்ய அவரால் மட்டுமே முடிந்தது.

அதன்பிறகு திருக்குறளை வெகுஜனப்படுத்திய தி.மு.கழக தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களையே சேரும். மேடைக்கு மேடை குறைந்தது ஒரு குறளையாவது எடுத்து சொல்லி அதைப்போல என்று பேசி திருக்குறளை மக்களிடையே பரப்பினார்கள். அவர்கள் இதனை திட்டமிட்டு பரப்பினார்களா அல்லது எதார்த்தமான தங்களின் பேச்சு நடையிலேயே அது வந்ததா என்று தெரியவில்லை. ஆனால், தி.மு.கழகத்தினரால்தான் திருக்குறள் என்பது பாமர மக்களுக்கும் சென்று சேர்ந்தது என்பது திண்ணம்.

அதனால் தானோ என்னவோ இன்றைக்கு தமிழ் தேசியம் பேசுகின்றோம் என்று சொல்லித்திரிபவர்கள், திராவிட இயக்க தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களை பற்றி அடிக்கடி ஒன்று சொல்லுவதுடுண்டு. அதாவது, இந்த திராவிட இயக்கத்துக்காரன் மேடை ஏறியவுடன் இனிக்க இனிக்க dialogue( திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்களில் உள்ள கூறுகள்) பேசுவான் நம்பிடாதிங்க என்று பிரச்சாரம் செய்வதுண்டு.

இதற்கு அறிஞர் அண்ணா அவர்களே பதில் அளித்துள்ளார்கள். நான் என்ன ஏமாற்றியா பேசுகிறேன்? நீங்கள் " நான் மதுரைக்கு சென்றேன் அண்ணனை பார்ப்பதற்கு, அண்ணன் இல்லை தம்பி தான் இருந்தான் பார்த்துவிட்டு வந்தேன்" என்று சொன்னால், நான் " மதுரைக்கு சென்றேன் மன்னவனை பார்க்க, அங்கு மன்னவன் இல்லை சின்னவன் தான் இருந்தான் பார்த்துவிட்டு வந்தேன்" என்று சொல்லுகின்றேன். இதில் நான் என்ன ஏமாற்றி விட்டேன்? நீங்கள் சொன்னதை நான் கொஞ்சம் சுவை கலந்து சொல்லுகிறேன் என்றார். மேலும், "நமஸ்காரம்" வணக்கமாக மாறியது. " விவாக பத்திரிக்கை" திருமண அழைப்பிதழாக மாறியது. "ஸ்ரீல ஸ்ரீ" திருவாளராக மாறியது. ஆகவே தமிழ் மொழி பற்றினை ஆழ வேரூன்றியது திராவிட இயக்கமே.

இப்படியாக தமிழ் மொழிக்கும், தமிழர் இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்த தி.மு.கழகம் 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முதலில் ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 1968 ஆம் ஆண்டு கையில் சிலம்புடன் கண்ணகி சிலை ஒன்று மெரினா கடற்கரையில் நிறுவப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆண்டு அக்ரகாரத்து பெண்மணி அந்த அம்மையாரின் ஆட்சி காலத்தில், போக்குவரத்துக்கு இடையூராக இருக்கிறது என்று சொல்லி அகற்றப்பட்டது. பிறகு 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சிலையை அங்கு மீண்டும் நிறுவினார். இது அந்த சிலையின் வரலாறு. அது இருக்கட்டும், அந்த சிலை நிறுவப்பட்டுள்ளது பொழுது " அது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்" என்று தந்தை பெரியார் சொன்னார். ஏன்?

இதற்கான காரணங்களை நாம் ஏற்கனவே "சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பார்ப்னியம்" என்ற தலைப்பில் எழுதியுள்ளோம். பெரியாரின் பார்வையில் அது தவறான முன்னுதாரணம் தான். அப்படியிருந்தும் தி.மு.க ஏன் கண்ணகி சிலையை நிறுவினார்கள்?
திராவிடர் கழகம் என்பது தேர்தலுக்கான அரசியல் கட்சி அல்ல. அது அரசியல் இயக்கம். மக்களிடையே சமூகநீதி, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகளை ஒழித்தல், அவர்களை அரசியல் படுத்துதல், பெண்களின் உரிமைகளை பேசுதல் போன்றவைகளுக்கான பிரத்யேகமான இயக்கம். ஆனால், தி.மு.க என்பது இவற்றையெல்லாம் செயல் படுத்துவதற்கான அரசியல் கட்சி. இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன.

அதாவது, ஆரிய புராண புரட்டுகளுக்கு மாற்றாக தமிழ் இல்க்கியத்தில் திருக்குறள் மட்டுமே (சில குறள்களில் கருத்து வேறுபாடு இருப்பினும்) உள்ளது என்று திராவிடர் கழகம் கருதியது. ஆனால் இதில் தி.மு.க வின் பார்வை சற்று மாறுபட்டது. அதாவது, தமிழ்நாட்டில் எந்த திருவிழா நடந்தாலும் அங்கு மகாபாரதம், இராமாயணம் போன்ற புராங்களின் நாடகங்களே அரங்கேற்றப்பட்டது. ஏன் இன்றளவும் கிராமப்புறங்களில் இது தொடர்கின்றது.
தி.மு.க திருக்குறள் வாசகங்களை அரசு அலுவலகங்களிலும், அரசு பேருந்துகளிலும் திருக்குறளை எழுதி வைத்து மக்களிடம் கொண்டு சேர்த்தாலும் கூட, இராமாயணம் மற்றும் பார்வை கதைகள் தெரிந்த அளவுக்கு, மக்களுக்கு திருக்குறள் தெரிவதில்லை. இப்பொழுதே இப்படி என்றால், 90 களின் மத்தியல் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்தாலே புரிந்துவிடும்.

அப்படி இராமாயணங்கள் மக்களிடையே பேசப்பட்டு கொண்டிருந்த காலத்தில், தமிழர் காப்பியமான, சிலப்பதிகாரத்தை மக்களிடையே பரப்புவதற்கான தேவை தி.மு.கழகத்திற்கு ஏற்பட்டது. அதன் விளைவே இன்றளவும் மெரினாவில் கையில் சிலம்புடன் நிற்கும் அந்த சிலை.
ஆனால் பெரியார் அது தவறான முன்னுதாரணம் என்று சொன்னாரே? அப்படியானால் அந்த சிலை அகற்றப்பட்டது வேண்டுமா? ஆம் நிச்சயமாக, மகாபாரதங்களும், ராமாயணங்களும் தமிழ் மக்களிடமிருந்து அகற்றப்பட்டவுடன்.





No comments:

Post a Comment