காட்சி - 3
இடம்: நீதிதேவன் மாளிகை
(நீதிதேவன் அமர்ந்து இருக்கிறார். பணியாள் வருதல். அவனைக் கண்டதும்)
நீதிதேவன்: என்ன அறமன்றம் கூட ஏற்பாடுகள் செய்து விட்டாயா? இராவணனிடம் செய்தியைச் சொன்னாயா?
பணி: ஏற்பாடுகள் முடிந்து விட்டன, தேவா. ஆனால், இராவணன் விசாரணையில் கலந்து கொள்ள மறுக்கிறான்.
நீதி: ஏன், என்ன காரணம்?
பணி: தன் மீது குற்றம் சுமத்தியவர்களை, தான் குறுக்கு விசாரணை செய்ய சம்மதித்தால்தான், வருவேன் என்று கூறுகிறான்.
நீதி: இந்த சங்கடத்திற்கு என்ன செய்வது மேலிடமாகிய ஆண்டவனோ, விசாரணையை நடத்து, என்று ஆணை இடுகிறார், இராவணனோ, வர மறுக்கிறான். கம்பரோ கேட்க வேண்டியதில்லை. நிச்சயம் வரமாட்டார். உம். . . எப்படி, . . இதை . . .
(இந்த நேரம் கம்பர் வந்து கொண்டிருக்கிறார். அவரைக்
கண்டதும்)
வாருங்கள்! வாருங்கள்! உங்களைத்தான் நினைத்தேன்.
கம்பர்: நீதிதேவா! நான் கேள்விப்பட்டது உண்மைதானா? மறு விசாரணை செய்ய ஆண்டவன் கூறினாராமே! இராவணன் வழக்கையா, முதலில் எடுத்துக் கொள்கிறீர்?
நீதி: ஆண்டவன் கட்டளையே அப்படித்தானே. ஆனால், இராவணன், விசாரணையில் கலந்து கொள்ள மறுக்கிறான்.
கம்பர்: ஏன்? எதற்காக மறுக்கிறான்?
நீதி: தன் மீது குற்றம் சுமத்தியவர்களும், விசாரணைக்குட்பட வேண்டும். தான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதற்கு சம்மதம் இருந்தால்தான் விசாரணையில் கலந்து கொள்வேன் என்று கூறி விட்டான். ஆகவே கம்பரே! தாங்கள் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டும். இராவணன் கேட்கும் கேள்விகளுக்கு, தங்களின் அறிவுத் திறனான பதிலால் அவனை அவ்வப்போது ஈர்க்க வேண்டும்.
கம்பர்: நீதிதேவரே! இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? இராவணன் என்னைக் குறுக்கு விசாரணை செய்வதா? அதற்காக நான் குற்றக் கூண்டிலே நிற்பதா? அரக்கன் முன்பா? முடியாது தேவா! முடியாது. முடியாதது மட்டுமல்ல, தேவையுமில்லாதது.
நீதி: கவியரசே! தங்கள் கவிதையின் வாயிலாகத் தானே, இராவணன் இரக்கமில்லாத அரக்கனாக்கப்பட்டான். பூலோகத்திலும் அப்படித்தானே பேசப்படுகின்றன. எனவேதான் ஆண்டவன் மறு விசாரணை நீதிமன்றம் அழைத்து இருக்கிறார். ஆகவே கம்பரே! தாங்கள் தவறாது கலந்து கொள்ளத்தான் வேண்டும்.
கம்பர்: தேவா! விஷத்தைக் கக்கும் பாம்பு, கொடியது. அதன் விஷம் தீயது. ஆபத்துக்குரியது, என்று எடுத்துக் கூறிய
தீர்ப்பு தவறென்றால், இராவணன் அரக்கன் என்று நான் கூறியதும் தவறுதான், தேவா.
நீதி: உவமையிலே உம்மை வெல்லும் திறன் எனக்கேது? கம்பரே! விசாரணையில் தாங்கள் கலந்து கொள்வதாக இராவணனுக்கு சொல்லி அனுப்பி விடுகிறேன்.
கம்: சரி, தேவா! நான் கலந்து கொள்கிறேன். இராவணனின் வாதத்தையும்தான் கேட்போம். மக்களும் கேட்கட்டும். நான் வருகிறேன்.
[கம்பர் போகிறார்]
[காட்சி முடிவு]
No comments:
Post a Comment