காட்சி-2
இடம்: இராவணன் மாளிகை இராவணன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறான். அவன் முன்னால் பழ வகைகளும், மதுக்கிண்ணமும் இருக்கின்றன.
பாடகன் ஒருவன் அவர் எதிரே அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறான். இராவணன், மதுவை சுவைத்தும் பாடலை ரசித்தபடியும் இருக்கிறான்.
இராவணன்: யாரப்பா, நீ?
பணியாள்: நீதிதேவன் சபையிலே, சுவடி ஏந்துவோன்.
இராவணன்: ஓகோ! சுமைதாங்கியா! (பணியாளனைப் பார்க்கிறான். அவன் முறைப்பாக இருப்பது கண்டு)
கோபியாதே அப்பனே! வேடிக்கைக்குச் சொன்னேன். அதுசரி, நீதிதேவன் சபையிலே சுவடி ஏந்துவோனுக்கு, இந்த அக்ரமக்காரன் வீட்டிலே, என்னப்பா வேலை?
பணியாள்: வேலையுமில்லை, சொந்தமுமில்லை, சேதி சொல்ல வந்திருக்கிறேன்.
இராவ: ஓகோ! சேதி சொல்ல வந்திருக்கிறாயா! நீ அவனை விட புத்திசாலி. .
பணி: எவனை விட?
இராவ: முன்பு என்னிடம் தூது சொல்ல வந்தானே, ஹனுமான்! அவனை விட. என்ன சொல்ல வந்திருக்கிறாய்?
பணி: உங்கள் மீது அளிக்கப்பட்ட தீர்ப்புகளை, மறு விசாரணை செய்யும்படி, ஆண்டவன் கட்டளை இட்டிருக்கிறார்.
இராவ: மறு விசாரணையா! மகிழ்ச்சிக்குரிய சேதிதான். அதுசரி! என்ன திடீரென்று என் மீது அக்கறை?
பணி: அக்கறை உம்மீது அல்ல. பூலோகத்திலே புகார் கிளம்பி விட்டதாம். முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்புகள், சரியல்லவென்று.
இராவ: அதுதானே பார்த்தேன். புகார் கிளம்பி விட்டதா? நான் எதிர்ப்பார்த்ததுதான்.
பணி: என்ன எதிர்ப்பார்த்தீர்கள்?
இரா: எத்தனை நாளைக்குத்தான், பூலோகவாசிகள், விழிப்புணர்ச்சியற்றுக் கிடப்பார்கள் என்று.
பணி: அது சரி, அற மன்றம் கூடுகிறது. தாங்கள் வரவேண்டுமென்று நீதிதேவன் கட்டளை.
இராவ: நான் வருகிறேன். என் மீது குற்றம் சுமத்தி, என்னை இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன் என்று கூறினாரே, கம்பர், அவரும், அவரைச் சார்ந்தவர்களும் வருகிறார்கள் அல்லவா?
பணி: அவர்கள் எவரும் இதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை, வரவும் மாட்டார்கள்.
இராவ: அது எப்படி? என் மீது குற்றம் சுமத்தினார்கள். சுமத்தப்பட்ட குற்றங்களை, பட்டியல் போட்டு, பேழையில் வைத்து, ஆளுக்கொரு புறம் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய், தேடித் தேடிக் கொடுத்தார்கள். ஐயோ! இன்னும் விசாரணை வரவில்லையே என்று பயந்து, ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள்.
அப்படிப்பட்டவர்கள் விசாரணைக்கு வரமாட்டார்கள் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்?
பணி: இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறீரா?
இராவ: சொல்லித்தான் ஆகவேண்டும்.
பணி: நீர், அறிவாளி! திறமைசாலி! நிர்வாகத்தில் ஆற்றல் மிக்கவர். ஆளும் திறமை மிக்கவர். உமது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் பலப்பல. அப்படிப் பட்ட நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்கள் சரியாகப் பதில் சொல்ல முடியாமல், திணறி, தத்து பித்து என்று, முன்னுக்குப் பின் ஏதாவது உளறி விட்டால் சாட்டப்பட்ட குற்றங்கள் உடைபட்டு விடுமோ, என்ற அச்சம், அவர்கட்கு இருக்கலாம்....
இராவ: அதனால், கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று கூறுகிறாயா? பணியாளனே கேள்! என் மீது குற்றம் சுமத்தியவர்கள் விசாரணையில் கலந்து கொள்ளத்தான் வேண்டும். எனது கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். அதன் வாயிலாக உண்மை உலகுக்குத் தெரிய வேண்டும். அவர்கள் வர மறுத்தால், நான் விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். விலகிக் கொள்கிறேன் என்று
நீதிதேவனிடம் கூறிவிடு. நீ, போகலாம்.
[காட்சி முடிவு]
No comments:
Post a Comment