Sunday, March 31, 2019

வீரயுகநாயகன் வேள்பாரி

தமிழில் உருவான வரலாற்று புதினங்களில், பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது. காரணம் அதில் கூறப்பட்டுள்ள இயற்கை காட்சிகள், வாழ்க்கை முறைகள் வாசிக்கும் நம்மை இயற்கையாகவே அதனுடன் ஒன்றச் செய்துவிடும். உண்மையை சொன்னால், பொன்னியின் செல்வனை வசிக்கும் போது, நாம் அந்த புதினத்தால் ஆட்கொள்ளப்படுவோம் .

அதன் பிறகு உருவான வீரயுகநாயகன் வேள்பாரி, சு.வெங்கடேசன் அவர்களால்  ஆனந்த விகடனில் எழுதப்பட்டு, இப்பொழுது புத்தகமாக வெளிவந்துள்ளது. ஓவியங்களை மனியம் செல்வன் தீட்டியுள்ளார். வேள்பாரியை இதைவிட யாரும் தத்ரூபமாக யாராலும் காட்சிப்படுத்த முடியாது என்ற அளவில் தீட்டியுள்ளார். பொன்னியின் செல்வனையும் விஞ்சிய படைப்பு வேள்பாரி. காவேரி கரையின் அழகையும் விஞ்சிய பறம்புமலையின் அழகு. வல்லவராயன் வந்தியத்தேவனனை விஞ்சிய நீலனின் மதிநுட்பமும் வீரமும். பொன்னியின் செல்வனை படித்த பிறகு தோன்றிய அந்த எண்ணம், நாம் தலைசிறந்த புதினத்தையே படித்து விட்டோம். இனிமேல் இப்படி ஒரு புதினம் தமிழில் தோன்றப்போவதில்லை என்ற எண்ணத்தை உடைத்தது வேள்பாரி.

நீலன் மற்றும் கபிலரின் சந்திப்பு, அவர்களிடையே நிகழ்ந்த விவாதங்கள். இவையெல்லாம் வாசிப்பவர்களை நீலன்களாக பாவிக்கச் செய்து, அங்கே கபிலருடன் நாமே உரையாடிச் செல்வதான உணர்வை தந்தது. பறம்பு மக்களின் அனபும், வீரமும் அவர்களின் காதல் வாழ்க்கையும், காதல், வீரம், கொடை இவற்றிற்கு உருவம் கொடுத்தல் எது தெரியுமோ அந்த உருவம்தான் பாரி என்பது போன்ற காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன.

பறம்பின் மன்னனாக அல்லாமல், பறம்பின் தலைவனாக பாரி பாவிக்கப்பட்டது, அவன் கொடைத்தன்மை கடலினும் பெரியது என்று வர்ணிக்கப்பட்டது, இவற்றை வாசிக்கும்போதே பாரி எப்பொழுது கதைக்குள் வருவான் என்று நினைக்காமல் எவரும் இருந்திருக்க மாட்டார்கள். பெரும்புலவர், இயற்கைகவிஞர் கபிலரின் ஆர்வமும், பாரியின் பெருமையும், குடிதேக்கனும், குடிமுடியனும், பாரி மகளிர் அங்கவை சங்கவையும், திசைவேழரின் அறமும் நம்மை நெகிழ வைத்தன.

தேவாங்கு விலங்கு, பாரியின் பெருமை போன்ற எண்ணற்ற காரணங்கள் பாரியை அழித்தொழிக்க மூவேந்தர்களுக்கு இருந்தது. பறம்பு மலையில் இருக்கும் வரை பாரியை வீழ்த்த முடியாது என்று அறிந்த மூவேந்தரும், சமதள பகுதியான தட்டியங்காடு பகுதியை தேர்வு செய்தனர். அப்படியும் பாரியை வெல்ல முடியவில்லை.
இதன்பிறகு மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை கொன்றனர். ஆம் முல்லைக்கு தேர் தந்த பாரி தன் உயிரையும் கொடையாகவே மூவேந்தருக்கும் அளித்தான்.

வீரயுகநாயகன் வேள்பாரி இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்பு. சென்ற நூற்றாண்டில் பொன்னியின் செல்வன் போன்று.




No comments:

Post a Comment