Saturday, May 4, 2019

எழுத்து (யாப்பிலக்கணம்)

யாப்பிலக்கணத்தின் படி செய்யுள் என்பது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளைக் கொண்டே அமைய வேண்டும்.

இவற்றில் ஒரு செய்யுளுக்கு அடிப்படையாக அமைவது எழுத்து ஆகும்.

செய்யுளைப் பொறுத்தமட்டில், எழுத்து என்பது வரி வடிவத்தை குறிக்காது. அதாவது, ஒரு எழுத்தை எழுதுவதற்கான குறியீட்டை குறிக்காது. 

மாறாக, எழுத்து என்பது அதன் ஒலி வடிவத்தையே குறிக்கிறது.

எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் கால அளவை வைத்து, எழுத்துகள் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

எழுத்துகளின் கால அளவுகள்

எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு, மாத்திரை எனும் சொல்லால் வழங்கப்படுகின்றது.

மாத்திரை என்பது, கண் இமைக்கும் நேரம் அல்லது ஒரு நொடிப் பொழுது ஆகும்.

குறில் எழுத்துகள் - ஒரு மாத்திரை

நெடில் எழுத்துகள் (ஐகாரம், ஔகாரம் நீங்களாக) - இரண்டு மாத்திரைகள்

மெய்யெழுத்துகள் - அரை மாத்திரை

ஐகாரம் மற்றும் ஔகாரம் ஆகிய எழுத்துகள் நெடில் எழுத்துகளானாலும், ஒரு செய்யுளின் சீர்களில் வரும்போது, அவை இரண்டு மாத்திரை அளவு ஒலிப்பதில்லை.

இந்த இரண்டு எழுத்துகளும், சீர்களில் முதல் எழுத்தாக வரும்போது, ஒன்றரை மாத்திரை அளவு ஒலிக்கும்.

ஔகாரம் ஒரு செய்யுளின் சீர்களில் முதல் எழுத்தாக மட்டுமே வரும். இவ்வாறாக, இரண்டு மாத்திரை அளவுடைய நெடில் எழுத்து ஒன்றரை மாத்திரையாக குறுகி ஒலிப்பது குறுக்கம் எனப்படும். ஔகாரம் குறுகி ஒலிப்பதால், இது ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

ஐகாரம் சீர்களில் முதல் எழுத்தாக வரும்போது ஒன்றரை மாத்திரை யாகவும், சீர்களின் இடையிலோ அல்லது இறுதி எழுத்தாகவோ வரும்போது குறில் எழுத்துகளைப் போன்று ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு, ஐகாரம் குறுகி ஒலிப்பதால் இது ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

இதேபோல், இகரமும், உகரமும் சில இடங்களில் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும். இவைகள் முறையே குற்றியலிகரம் மற்றும் குற்றியலுகரம் எனப்படும்.

மகர மெய் சில இடங்களில் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறுகி ஒலிக்கும். இது மகரக்குறுக்கம் எனப்படும்.




No comments:

Post a Comment