Thursday, May 9, 2019

கம்யூனிசமும் குடும்பமும்-2

இந்நிலையில் குடும்பப் பிணைப்பு தளர்வதும் குடும்பம் மெள்ள கழன்றுபோகத் தொடங்குவதும் ஆச்சரியமில்லை. குடும்பம் என்ற ஒன்றைப் பிணைத்திருந்த சூழல்கள் இனியில்லை. பழைய குடும்ப அமைப்பு இனியும் குடும்ப உறுப்பினர்களுக்கோ, நாட்டுக்கோ தேவையுள்ள ஒன்றாக இல்லை; அது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பழைய குடும்ப அமைப்பு இப்போது ஒரு தடையாக உள்ளது. பழைய குடும்ப அமைப்பு முன்பு பலமாய் இருந்ததன் காரணம் என்ன? 

முதல் காரணம், கணவர் மற்றும் தந்தையே குடும்பத்திற்கு உழைப்பவராக இருந்தார்.

இரண்டாவது காரணம், குடும்ப அமைப்பு மற்றும் அதன் பொருளாதாரம் அனைவருக்கும் அவசியமானதாக இருந்தது. 

மூன்றாவதாக, குழந்தைகளை பெற்றோர் பொறுப்புடன் வளர்க்கவேண்டி இருந்தது. 

இப்போது அவற்றில் மிச்சமிருக்கும் காரணங்கள் என்ன? 

நாம் முன்னரே பார்த்தபடி, கணவனென்பவர் அவருக்கு மட்டும் சம்பாதிக்கக் கூடியவராக நின்று விட்டார்; மனைவியும் வெளியில் வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்; தான் சம்பாதிப்பதைக் கொண்டு தன் வாழ்க்கையையும் குழந்தையையும் அவ்வப்போது கணவரையும் கூடப் பராமரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டார்; எனவே, குடும்பமானது இப்போது சமூகத்தின் ஆரம்பப் பொருளாதார அலகாகவும், சிறு குழந்தைகளை ஆதரித்துப் பராமரிக்கவும் கல்வி கற்பிக்கவும் மட்டுமே தன் பங்கைச் செய்கிறது. இத்தகைய வேலைகளில் இருந்து குடும்பத்தை விடுவிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை சற்றே விரிவாக இனி காண்போம்.

வீட்டு வேலை தேவையற்றதாக ஒழிகிறது

கிராமத்திலோ, நகரத்திலோ உள்ள ஏழைப் பெண்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் நான்கு சுவற்றுக்குள்ளேயே காலந்தள்ளி வந்த காலம் ஒன்று இருந்தது. ஒரு பெண் வீட்டிற்கு வெளியில் நடப்பவை பற்றி தெரியாமலும் அதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாதிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய வீட்டிலேயே அவர் செய்வதற்கான காரியங்கள் நிறைய இருந்தன. அவை வீட்டிற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் இன்றியமையாததாய் இருந்தது. நவீன காலப் பெண்களும் விவசாயப் பெண்களும் செய்து வந்த அனைத்து வேலைகளையும் அவரும் செய்து வந்தார். துணி துவைப்பது, சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை ஒருபுறம் செய்து வந்தாலும், கம்பளி ஆடை நூற்றல், நெசவு போன்ற வேலைகளையும் தனக்குக் கிடைத்தவற்றைக் கொண்டு செய்து வந்தார். மேலும் பலவித ஊறுகாய்கள், தொக்குகள், குளிர்காலத்திற்குத் தேவையான உணவு வகைகள் மற்றும் மெழுகுவர்த்தி போன்றவற்றையும் உற்பத்தி செய்துவந்தார். அவர் செய்த அனைத்து வேலைகளையும் பட்டியலிடுவது என்பது முடியாத காரியம். இப்படித்தான் நம் தாயும் பாட்டியும் வாழ்ந்தார்கள். 

இன்றும் கூட ரசியாவின் இருப்புப்பாதை மற்றும் பெரிய நதிகளைக் கடந்த தொலைதூரக் கிராமங்களில் இதுபோன்ற வாழ்க்கை முறையைக் காண முடியும்; பெரு நகரங்களிலும், தொழிற்சாலைப் பகுதிகளிலும் வாழும் பெண்கள் வெகு காலத்திற்கு முன்பே மறந்துவிட்ட பல வேலைகள் இன்றும் கிராமத்தில் வாழும் பெண்களுக்குப் பெரும் சுமையாகவே இருந்து வருகிறது. நம்முடைய பாட்டிகள் காலத்தில் இத்தகைய வேலைகள் அவசியமானவையாகவும் பயனுள்ளதாயும் இருந்தன. அது குடும்ப நலனை உறுதி செய்தது. ஒரு விவசாயி அல்லது கைவினைஞரின் மனைவி எந்த அளவுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாரோ அந்த அளவிற்கு குடும்பம் நன்றாக இருந்தது. குடும்பத் தலைவியின் இத்தகைய செயலால் தேசத்தின் பொருளாதாரம் கூடப் பயனடைந்தது. 

எப்படியெனில், அவர் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளான சூப் தயாரித்தல் மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்தல் போன்ற சமையல் வேலைகளுடன் மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை; மாறாக, சந்தையில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களான நூல், துணி, வெண்ணெய் மற்றும் பலவற்றை உற்பத்தி செய்தார். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும் வீட்டு வேலைக்காரி இருந்தால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் என்றறிந்த விவசாயி அல்லது தொழிலாளி தன் மனைவி இதுபோன்ற வேலைகளைச் செய்யக்கூடிய பொற்கரங்கள் வாய்த்தவராக அமைய வேண்டுமென்று விரும்பினார். மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் துணி, தோல் மற்றும் கம்பளி போன்றவற்றை அதிகமாக உற்பத்தி செய்யச் செய்ய (மிகுதியானவற்றை அருகிலுள்ள சந்தைகளில் விற்றதால்) ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் நலனுக்கும் அது உகந்ததாய் இருந்தது.

ஆனால், முதலாளித்துவம் இதையெல்லாம் மாற்றிவிட்டது. முன்பு எவையெல்லாம் குடும்பத்தின் மடியில் செய்யப்பட்டனவோ, இன்று அவையெல்லாம் பெரிய அளவில் பட்டறைகளிலிலும் தொழிற்கூடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பெண், இயந்திரத்தால் புறந்தள்ளப்பட்டு விட்டார். மெழுகுவர்த்தி, கம்பளி, நூல் மற்றும் துணி எல்லாமே வீட்டின் அருகில்
கடைகளில் கிடைக்கும்போது எந்தப் பெண்தான் அவற்றையெல்லாம் உற்பத்தி செய்ய நினைப்பார்? 

முன்பெல்லாம் ஒவ்வொரு பெண்ணும் சரிகை நூற்கக் கற்றிருந்தார். இப்போது
எந்த பெண்தான் தானே செய்ய வேண்டுமென்று எண்ணுவார்?

முதலில் இப்போது அவருக்கு இதற்கான நேரம் கிடையாது. நேரம் பணத்திற்குச் சமமாகிவிட்ட இன்றைய நிலையில் யாரும் உற்பத்தியற்ற, பயனற்ற வகையில் நேரம் செலவிட விரும்பவில்லை. வேலைக்குச் செல்லும் ஒரு சிலர் மட்டுமே ஊறுகாய் போன்றவற்றை வெளியில் வாங்காமல் தாங்களே செய்து கொள்கின்றனர். கடைகளில் கிடைப்பவை, பெண்களின் கைப்பக்குவத்துடனோ, தரமானதாகவோ இல்லாவிட்டாலும் கூட, பெண்கள் பெரும்பாலும் கடைகளிலேயே வாங்கிச் செல்கின்றனர். ஏனெனில், வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு இயோ, நேரமோ அவருக்கு இல்லை. 

முக்கியமான விஷயம், இங்கு அவர் ஒரு தொழிலாளியாக இருக்கிறார். இப்படியாக குடும்ப வேலையை மையமாக்கிய குடும்பப் பொருளாதாரம் படிப்படியாக அழிந்து வந்துள்ளது. எவையெல்லாம் முன்பு குடும்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததோ, அவை இன்று ஆண், பெண் தொழிலாளர்களால் ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

குடும்பம், இனி உற்பத்தி அமைப்பிலிருந்து, நுகரும் அமைப்பாக மாறிவிட்டது. வீட்டுவேலை என்பது சுத்தம் செய்தல் (தரை, சன்னல், கதவு, தூசு தட்டுதல்), சமைத்தல், துணி துவைத்தல், கிழிந்த துணிகளைத் தைத்தல் என்பனவற்றோடு நின்று விடுகிறது. ஆலைகளில் மணிக்கணக்கில் வேலை செய்து விட்டு வரும் பெண் மேற்கூறியபடியிலான கடினமான களைப்பூட்டும் வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இந்த வேலைகள் நம் பாட்டிகள் செய்து வந்த வேலைகளில் இருந்து, முக்கியமான வகையில் வேறுபடுகிறது. 

எப்படியெனில், இங்கு மேற்குறிப்பிட்ட நான்கு வகை வீட்டு வேலைகளும், எவ்விதத்திலும் பயனற்றதாய் உள்ளது; நாட்டின் பொருளாதார வளத்திற்கும் எவ்வகையிலும் பயன்படும் வகையில் இல்லை. குடும்பத்தலைவி, ஒருநாள் முழுவதும் காலையிலிருந்து மாலை வரை துணி துவைத்து, வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து, துணிகளைச் சலவை செய்து, தனக்குப் பிடித்த வகையில் சமைத்துச் சாப்பிட்டாலும் கூட அந்த நாளின் இறுதியில் எந்த ஒரு பொருளையும் தயாரிக்காமலேயே, அந்த நாளைக் கழித்து முடிக்கிறார். இனி தொழிற்சாலை இல்லாமல் அவர் எந்த ஒரு பொருளையும் உற்பத்தி செய்ய முடியாது. அவர் இன்னும் ஓராயிரம் ஆண்டுகள் வாழ்வதாய் இருந்தாலும் இன்றும் ஒவ்வொரு நாளையும் ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டும். அதாவது, அவர் துடைப்பதற்கென்றே விளக்குகளில் தூசி படிந்திருக்கும்; கணவர் எப்போதும் பசியோட வீட்டிற்கு வருவார்; வேலை கொடுப்பதற்காகவே குழந்தைகள் காலணிகளில் சேற்றை அப்பிக் கொண்டு வருவார்கள். 

பெண்கள் செய்யும் வேலை இப்படியாக ஒட்டுமொத்த சமுகத்திற்கும் பயனற்றதாக உற்பத்தியற்ற ஒன்றாய் ஆகிக்கொண்டிருக்கிறது; தனிக் குடும்பங்கள் அழிந்து வருகின்றன. ஒருவகையில் இது நம் சமூக ரீதியில் கூட்டுத்துவமான வீட்டுப் பராமரிப்புக்கு வழிவகை செய்கின்றது; இதுவே கம்யூனிசச் சமுதாயமாய் இருப்பின் ஆண் - பெண் கொண்ட பணிக்குழு ஒன்றை இவரைப் போன்றவர்களுக்கு அனுப்பி இருக்கும். இது வரையிலும் பணக்காரர்களது மனைவிகளே இதுபோன்ற எரிச்சலூட்டும் கடினமான வேலைகளிலிருந்து விடுபட்டிருந்தார்கள். ஏன் நம் உழைக்கும் பெண்கள் மட்டும் அந்தச் சுமையைச் சுமக்க வேண்டும்? 

சோவியத் ரசியாவிலே பாட்டாளிப் பெண்களின் வாழ்க்கை பிரகாசமாக, சந்தோசமாக, ஆராக்கியமானதாக, ஆழகாக இருக்கும். இதையெல்லாம் முன்னர் பணக்காரப் பெண்கள் தமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களிலும் சமையல் வேலைகளால் அவதிப்படுவதை விடுவித்து, பொது உணவு விடுதிகளையும் சமூகச் சமையற்கூடங்களையும் கம்யூனிசச் சமுதாயம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

முதலாளித்து வச் சமூகத்திலும் கூட இது போன்ற நிறுவனங்கள் வரத் தொடங்கிவிட்டன.

உண்மையில் கடந்த 50 வருடங்களில் ஐரோப்பாவின் பெருநகரங்கள் எங்கும் ஒவ்வொரு நாளும் உணவு விடுதிகளும், ஓட்டல்களும் பெருமளவில் பரவி வருகின்றன. ஆனால், முதலாளித்துவத்தின் கீழ் பை நிறையக் காசு உள்ளவர்கள் மட்டும்தான் இத்தகைய விடுதிகளிலும் ஓட்டல்களிலும் சாப்பிட முடியும். ஆனால், கம்யூனிசச் சமுதாயத்தில் யார் வேண்டுமானாலும் கூட்டுச் சமையலில் பங்கேற்று நன்கு சாப்பிட முடியும்.

உழைக்கும் பெண் இதற்கு மேலும் துணி துவைத்துக் கொண்டும், தைத்துக் கொண்டும், சரிகை நூற்றுக் கொண்டும், அடிமையாக வாழ வேண்டியதில்லை. இனி அவள் ஒவ்வொரு வாரமும் அழுக்குத் துணிகளை பொதுச் சலவை நிலையத்தில் கொடுத்து, துவைத்து சலவை செய்து பெட்டி போட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆக, உழைக்கும் பெண்ணின் மற்றுமொரு வேலையும் குறைந்து விட்டது. இப்படி உழைக்கும் பெண்ணின் மேல் சுமத்தப்பட்டிருந்த வீட்டு வேலைகள் கம்யூனிசச் சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்படுவதால், அரசின் துணி நெய்யுமிடங்களிலும் அவர் மணிக்கணக்கில் நூல் நூற்க வேண்டிய அவசியமில்லை. இனி அவர் ஓய்வு நேரத்தை நிம்மதியாக பயனுள்ள வகையில் படிப்பதிலும் பொதுக்கூட்டங்களுக்குச் செல்வதிலும் கச்சேரி நடப்பதைக் காணவும் செலவிட முடியும். இவ்வாறாக, இதுகாறும் உழைக்கும் பெண் செய்த வேலைகள் கம்யூனிசத்தின் வெற்றிக்குப் பின்னும் நீடிக்காது. உழைக்கும் பெண்கள் இதில் வருத்தப்டுவதற்கு ஒன்றும் இல்லை. இப்படியாக கம்யூனிச சமூகம் உழைக்கும் பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து விடுவித்து, அவளது வாழ்வை மகிழ்ச்சிகரமான வசதியான ஒன்றாக மாற்றுகிறது.

குழந்தை வளர்ப்புக்கு அரசே பொறுப்பேற்கும்

வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டாலும் கூட குழந்தைப் பராமரிப்பு என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் வாதிடலாம். இங்கும்கூட சோவியத் அரசே இந்தப் பொறுப்பை ஏற்கும். புரட்சிக்கு முன்னர் பெற்றோர்கள் ஏற்றிருந்த பொறுப்பையெல்லாம் இனி கம்யூனிசச் சமூகம் ஏற்றுக் கொள்ளும். புரட்சிக்கு முன்னரும் கூட குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தருவது பெற்றோரின் வேலையாக இருக்கவில்லை. பள்ளிப் பருவம் எய்திவிட்ட பிறகு குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அரசு அவற்றைக் கவனித்துக் கொள்ளும். 

ஆகவே, பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கலாம். ஆனால், இவற்றைத் தவிரவும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. குழந்தைகளுக்கு நல்ல உணவு தரவேண்டும், காலணிகள் வாங்க வேண்டும், துணிகள் வாங்க வேண்டும், நல்லவர்களாக, பெரியவர்களாக்கி வேலைக்குஅனுப்பி தன் வாழ்வைத் தானே கவனித்துக் கொள்ளுமளவுக்கு, வயதான பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ளுமளவுக்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இப்படி பல வேலைகள், கடமைகள், குடும்பத்தின் பொறுப்பாக இருக்கின்றன. 

ஆனால், தொழிலாளிகளில் சிலர் மட்டும்தான் இதையெல்லாம் நிறைவேற்ற முடிகிறது. பலருக்கு இவற்றை நிறைவேற்றுமளவுக்கு ஊதியம் கிடைக்காததுடன், வருங்காலச் சந்ததியின் படிப்புக்குக் கவனம் செலுத்துவதற்கான நேரமும் போதவில்லை. எனவே, குழந்தைகளின் வளர்ப்புபம்தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது.

பாட்டாளிகளின் குழந்தைகளோ, கவனிப்பாரின்றி தெருக்களிலேதான் வளர வேண்டியிருக்கிறது. நமது முன்னோர்கள் குடும்ப வாழ்வை நன்கு வாழ்ந்திருப்பார்கள். ஆனால் இன்று நம் பாட்டாளிகளின் குழந்தைகளோ அத்தகைய வாய்ப்பு இல்லாமலேயே வாழ்கிறார்கள். மேலும், வருமானம் குறைந்த, பொருளாதாரம் உள்ள பின்தங்கய குடும்பத்தில் பத்து வயது அடைந்த சிறுவர்கள்கூட வேலைக்குப் போய் தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இப்படி சிறு வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பிக்கும் சிறுவன் தனக்குத் தானே எஜமானனாக எண்ணிக் கொண்டு, பெற்றோர்களின் அறிவுரைகளைச் சட்டை செய்வதில்லை. இவ்வாறாக, குழந்தைகள் மீது பெற்றோர்களின் அதிகாரமும் உரிமையும், பெற்றோர்கள் மீதான குழந்தைகளின் மரியாதையும் குறைந்து கொண்டு வருகிறது.

எப்படி வீட்டு வேலைகள் தகர்ந்து போகுமோ, அதை போலவே குழந்தைகளின்பால் பெற்றோர்கள் கொண்ட கடமைகளும் கம்யூனிசச் சமூகம் முழுப் பொறுப்பேற்கும் வரை தகர்ந்து கொண்டு வரும். முதலாளித்துவக் கட்டமைப்பின் கீழ் குழந்தை வளர்ப்பு என்பது பாட்டாளிகளுக்கு மிகப்பெரும் சுமையாக நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. கம்யூனிசச் சமூகம் இத்தகைய பிரச்சினைகளில் பெற்றோர்களுக்கு உதவியானதாய் இருக்கும். 

சோவியத் ரசியாவில் ஏற்கெனவே பொதுக்கல்வி மற்றும் சமூகநலத்துறை கமிசார்கள் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் குடும்பத்திற்கு உதவிபுரிந்து வருகின்றன. குழந்தை நலமையங்கள், அன்றாடப் பராமரிப்பகங்கள், மழலையர் நர்சரி உணவகங்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்புச் சுகாதார மையங்கள் ஆகியவற்றை ஏற்கெனவே நாம் பெற்றுள்ளோம். மேலும், இவலவச மதிய உணவு, இலவச பாடப் புத்தகங்கள், காலணிகள், கம்பளிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவையனைத்தும் குழந்தைகளின் பராமரிப்பு, குடும்பத்திலிருந்து சமூகத்தின் பொறுப்பு மாறிக்கொண்டிருப்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.





No comments:

Post a Comment