Thursday, May 9, 2019

கம்யூனிசமும் குடும்பமும்-1

தோழர் அலெக்சான்ட்ரா கொலந்தாய் எழுதிய Communism and the Family என்ற கட்டுரையின் தமிழாக்கம்.

உற்பத்தியில் பெண்களின் பங்கும் குடும்ப அமைப்பில் அதன் தாக்கமும்

பொதுவுடைமைச் சமூகத்தின் கீழ் குடும்பம் தொடர்ந்து நீடிக்குமா? 

நீடிக்கும் பட்சத்தில் தற்போதுள்ள அதே வடிவில் இருக்குமா?

இதுபோன்ற கேள்விகள் பாட்டாளி வர்க்கப் பெண்களை மட்டுமல்லாது, அவர்களது கணவர்களையும் கவலை கொள்ளச் செய்கிறது. வாழ்க்கை நம் கண்முன்னே பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. பழைய பழக்கவழக்கங்கள் வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன. பாட்டாளிக் குடும்பத்தின் மொத்த வாழ்க்கையும் இதுவரையிலும் கேள்விப்படாத வகையிலும் புதிய வடிவிலும் முன்னேறி வருகிறது.

இன்னும் சொல்லப் போனால், இந்த முன்னேற்றம் சிலரது கண்களுக்கு வினோதமாய்க் காட்சியளிக்கிறது. இதைப் பற்றியெல்லாம் பெண்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதில் வியப்பேதுமில்லை. சோவியத் ரசியாவில் எளிமையாக்கப்பட்டுள்ள விவாகரத்து முறையானது நம் கவனத்தை ஈர்க்கும் மற்றுமோர் உண்மை . 18 டிசம்பர் 1917 இல் மக்கள் கமிசாரவை வெளியிட்ட ஆணையின்படி விவாகரத்தானது பணக்காரர்கள் மட்டும் பெறக்கூடிய ஆடம்பரப் பொருளாக இனியும் நீடிக்காது. 

இனிவரும் காலங்களில் உழைத்து வாழும் பெண் தன்னை நாகரிகமற்ற முறையில் தினமும் அடித்துத் துன்புறுத்தும், வாழ்வையே துன்பகரமானதாக்கும் குடிகாரக் கணவரிடமிருந்து பிரிந்து வாழ விண்ணப்பித்து, மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ காத்திருக்க வேண்டியதில்லை. விவாகரத்தானது தற்போது கணவன் மனைவி இருவரது ஒப்புதலின்படி ஓரிரு வாரங்களிலேயே பெறக்கூடியதாய் உள்ளது. தங்கள் திருமண வாழ்வு சந்தோசமாய் இல்லாத பெண்கள் இதைப் பெரிதும் வரவேற்கின்றனர். உணவு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கு கணவரைச் சார்ந்துள்ள மற்றவர்களோ, இதனைக் கண்டு பீதியுறுகின்றனர். தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால், உண்மையை நேருக்கு நேர் சந்திக்காமலிருப்பதில் பயன் ஏதுமில்லை. பழைய குடும்ப அமைப்பில் எல்லாமே ஆண்கள்தான். பெண்ணுக்கென்று எதுவும் இல்லை. குறிப்பிட்ட குடும்பத்தில் பெண் தனக்கென்று ஆசாபாசமோ, தன்னைப் பராமரித்துக் கொள்வதற்கான நேரமோ, தனக்கெனச் செலவழிக்கப் பணமோ இல்லாதிருந்தாள். அப்படிப்பட்ட குடும்பம்
இன்று நம் கண் முன்னே மாறிவருகிறது. எனினும் இதைக் கண்டு பீதியுறத் தேவையில்லை. இதுகாறும் கடைப்பிடித்து வந்தவை எல்லாம் என்றும் மாறாதவை என நாம் நினைப்பது நம் அறியாமையே! ''எந்த ஒன்றும் முன்பு எப்படி இருந்ததோ, அப்படியே இனியும் இருக்கும்” என்பதில் சற்றும் உண்மை இல்லை. பழக்கவழக்கங்கள், அரசியல் அமைப்புகள், ஒழுக்க நெறிகள் உள்ளிட்ட சகலமும் என்றும் நீடித்து நிலைப்பவை அல்ல; அவை மாற்றத்துக்கு உட்பட்டவை என்பது வரலாற்றைப் படித்தாலே தெரியும். வரலாற்றுப் போக்கிலே குடும்பக் கட்டமைப்பு பலமுறை மாறுதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை தற்போதுள்ள குடும்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவங்களில் இருந்திருக்கிறது.

ஒருகாலத்தில் சொந்தக் குழந்தைகளைக் கொண்ட தாயால் தலைமை தாங்கப்பட்ட பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் பேத்திகளைக் கொண்ட குடும்பமாக உழைத்து வாழ்ந்து வந்தார்கள். அதற்குப் பிந்தைய காலத்தில் தந்தையால் தலைமை தாங்கப்பட்ட குடும்ப முறை வழக்கத்திற்கு வந்தது. இந்தக் குடும்ப அமைப்பில் தந்தையின் சொல்படிதான் குடும்ப உறுப்பினர்கள் நடக்க வேண்டியிருந்தது. இன்றும் கூட ரசியாவின் கிராமங்களில் வாழும் விவசாயிகளிடம் இத்தகைய தன்மையைக் காண முடியும். நகர்ப்புறப் பாட்டாளிகளிடம் காணப்படாத, பழக்கவழக்கங்களையும் ஒழுக்க விழுமியங்களையும் இவர்களிடம் காணலாம். தொழிலாளர்கள் வெகுகாலத்திற்கு முன்பே மறந்துவிட்ட முறைகளை கிராமப்புறங்களில் இன்னமும் கடைப்பிடித்து வருகின்றனர். குடும்ப அமைப்பு முறையும் பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு தேசத்திற்கும் மாறுபடும். 

துருக்கிய, அரேபிய மற்றும் பாரசீகர்களில் ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார். இன்றும்கூட சில பழங்குடியினப் பெண்களில், ஒருவர் பல ஆண்களை மணம் செய்து கொள்கிறார்.

நடைமுறையில் ஒரு பெண் திருமணம் ஆகும் வரை கன்னியாக இருக்க வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் பழங்குடியினரிலோ பெண் பல காதலர்களைப் பெற்றிருப்பதும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன் கைகளிலும் கால்களிலும் வளையல்களால் அலங்கரித்துக் கொள்வதையும் பெருமையாக எண்ணுகிறார்கள். நாம் ஒழுக்கங்கெட்டதாக, வியப்பைத் தரக்கூடியதாக எண்ணும் பழக்கவழக்கங்கள் வேறு மக்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுவதும், அவர்களது பார்வையில் நம்முடைய பழக்கவழக்கங்கள் மற்றும் சட்ட திட்டங்கள் பாவகரமானதாய்த் தெரிவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

ஆகவே, குடும்ப அமைப்பில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு பயங்கொள்வதற்கு ஒரு காரணமும் இல்லை. மேலும் இக்காலத்திற்கு ஒவ்வாத தேவையற்ற நடைமுறைகள் கைவிடப்பட்டு ஆண், பெண் இருவரிடையிலான புதிய உறவுகள் வளர்ந்து வருகின்றன. புதிய பாட்டாளிகளின் ரசியாவில் வாழ் நிலைமைகளுக்கு இசைவான முறையில் வழக்கத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளைக் கைவிடுவதும், இப்போதைய தொழிலாளி, விவசாயி வர்க்க ஆண் - பெண் இருவரிடையிலான உறவுகள், உரிமைகள் மற்றும் கடமைகளில் அவர்கள் வாழ்விற்கு உகந்ததைக் கண்டறிந்து தெரிவு செய்வதே நமது வேலையாகும். அவற்றை புதிய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வதுடன் எவையெல்லாம் வழக்கொழிந்து விட்டனவோ, எவை நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ அடிமைத்தனங்களின், அடக்குமுறைகளின்  நீட்சியாக உள்ளதோ, அவையெல்லாம் அந்தச் சுரண்டல்காரர்களுடனும், பாட்டாளி மற்றும் ஏழைகளின் எதிரிகளுடனும் ஒன்றாக விரட்டியடிக்கப்பட வேண்டும், தற்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பாட்டாளி வர்க்கம் பின்பற்றி வந்துள்ள குடும்ப முறை மேற்கண்ட பாரம்பரிய பழைய அடக்குமுறைகளில் ஒன்றாகும். ஆலயங்களில் மணமுடிக்கப்பட்ட, தனித்தனியான ஆனால் நிலையாகப் பிணைக்கப்பட்ட குடும்ப அமைப்பு, அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான அளவு தேவைப்படுவதாக ஒருகாலத்தில் இருந்து.

குடும்பம் என்ற ஒரு அமைப்பு இருந்திராவிடில் குழந்தைகளைச் சோறூட்டி, குளிப்பாட்டி, ஆடை அணிவிப்பது யார்? 

அவர்களுக்கு ஆலோசனை கூறுவது யார்? 

கடந்த காலங்களில் அனாதைகளின் நிலைமை கற்பனை செய்துகூட பார்க்க முடியாதபடி மிக மோசமாய் இருந்தது. பழைய குடும்ப முறையில் கணவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவைப்படுவதைச் சம்பாதித்துக் காப்பாற்றி வந்தார். மனைவியானவர் தன் பங்கிற்கு வீட்டு வேலைகள் செய்வதுடன் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்கினார். கடந்த நூறு ஆண்டுகளாகவே முதலாளித்துவம் கோலோச்சும் நாடுகளில் எங்கெல்லாம் ஊதிய அடிப்படையிலான ஊழியர்களைக் கொண்ட ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் அதிகரித்தனவோ, அங்கெல்லாம் வழக்கப்படியான இக்குடும்ப அமைப்பு அழிந்து கொண்டுதான் இருக்கிறது.

வாழ்வாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் இந்த மாற்றம் காலங்காலமாகவே பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வது, உலக அளவில் குடும்ப அமைப்பு முறையில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. முன்பெல்லாம் ஆண் மட்டுமே குடும்பத்திற்காகச் சம்பாதிப்பவராக இருந்தார்; ஆனால், ரசியாவில் கடந்த 50, 60 ஆண்டுகளாக (மற்ற முதலாளித்துவ நாடுகளில் அதற்கும் நெடுங்காலத்திற்கும் முன்னராகவே) பெண்கள் தன் குடும்பம் மற்றும் வீட்டை விட்டு வெளியில் சென்று ஊதியம் தேட வேண்டிய, பணிபுரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆணின் சம்பாத்தியம் குடும்பத்தின் தேவைகளுக்குப்‌ போதாத காரணத்தால் பெண்கள் சம்பாதிப்பதற்காக ஆலைகளின் கதவைத் தட்ட வேண்டியதாயிற்று. ஒவ்வொரு ஆண்டும் வீட்டின் வெளியில் தினக்கூலிகளாக, விற்பனையாளராக, கணக்கராக, சலவைக்காரராக, அலுவலக உதவியாளராக உழைக்கும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. புள்ளி விவரங்களின்படி, முதல் உலகப் போருக்கு முன்பு (1914) சுமார் 6 கோடிப் பெண்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா
அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையானதை வேலை செய்து சம்பாதித்தனர். போர் நடந்த சமயங்களில் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 

இதில் பாதிக்கும் மேற்பட்டோர் திருமணமானவர்கள். இதிலிருந்தே அவர்களுக்கு எப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை வாய்த்திருக்கும் என்பதை எளிதில் கற்பனை செய்துவிட முடியும்.

இவ்வாறு மனைவி மற்றும் தாயானவர் 8 மணிநேர உழைப்பு அல்லது பயண நேரத்துடன் 10 மணி நேரம் வீட்டை விட்டு வெளியில் இருக்கும்பட்சத்தில் என்ன மாதிரியான குடும்ப வாழ்க்கை அங்கு இருந்திருக்கும்? 

அவர் குடும்பத்தை மறந்திருப்பார்; அவரது குழந்தைகளோ தாயின், அன்பும் அரவணைப்பும் இன்றி அபாயங்கள் நிறைந்த தெருக்களில் சுற்றித்திரிந்திருக்கும். அவர் தன் கணவருக்கு மனைவியாக, குழந்தைக்குத் தாயாக, முதலாளிக்குத் தொழிலாளியாக என்று தன் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார். ஆலைத் தொழிலாளியாகட்டும், அச்சகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆகட்டும், அங்கே வேலை செய்யும் தன் கணவருக்குச் சமமாக வெளியே உழைத்து விட்டு, பின் தனது குடும்பத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு முதலாளித்துவமானது பெண்களால் தாங்கமுடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது. அவரது வீட்டு வேலைகளைக் குறைக்காமலேயே அவரைக் கூலித் தொழிலாளியாக்கியிருக்கிறது.

இப்படியாக, மூன்றுவிதமான சுமைகளைத் தாங்க முடியாமல், உழைக்கும் பெண் தள்ளாடுகிறார்; துயரப்படுகிறார்; எப்போதும் தண்ணீரால் நனைந்திருக்கிறார். பெண்ணின் நில எப்போதும் எளிதாக இருந்ததில்லை என்றாலும் முதலாளித்துவ ஆலை உற்பத்தியின் கீழ் (கோடிக்கணக்கான உழைக்கும் பெண்கள் துன்புறுவதைப் போல) உள்ள கடுமையான வாழ்வை இதற்கு முன் எப்போதும் வாழ்ந்திருக்க மாட்டார்.

பெண்கள் வேலைக்குச் செல்ல செல்ல குடும்பங்களும் பெருமளவில் நொறுங்குகின்றன; கணவனும் மனைவியும் வெவ்வேறு வேலைநேரங்களில் பணிபுரியும்போது, மனைவி தன் குழந்தைகளுக்கு ருசியாகச் சமைக்கக் கூட நேரமில்லாமல்
சுழன்று வேலை செய்து கொண்டிருக்கும்போது குடும்ப வாழ்க்கை பற்றிப் பேச என்ன இருக்கிறது? 

மனைவியும் கணவனும் வேலைக்குப் போய் நாள் முழுவதும் வீட்டிற்கு வெளியில் இருந்தால் ஒருசில நிமிடங்களாவது குழந்தைகளுடன் இருக்க முடியுமா? 

இவர்களைப் பெற்றோர் என்று எந்த கணக்கில் பேசுவது? முன்னர் இருந்த நிலைமைகள் வேறு அதாவது, தாயானவர் வீட்டிலேயே இருந்தார்; வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தார்; குழந்தைகளை கவனிப்போடு அருகே வைத்து வளர்த்தார்; ஆனால் தற்போது தொழிலாளியாக இருக்கும் பெண் ஆலைச்சங்கு காலையில் ஊதும்பொழுதே, வேகவேகமாக ஆலையை அடைகிறார்; மீண்டும் மாலையில் ஆலைச்சங்கு ஊதியதும் வேகவேகமாக வீட்டுக்கு ஓடி கடுமையான வீட்டு வேலைகளைக் கவனிக்கிறார்; மறுநாள், மறுபடி சீக்கிரம் அவசரமாக ஆலைக்குச் செல்கிறார்; இவ்வாறாக, தூக்கமும் ஓய்வும் இன்றித் தவிக்கிறார். திருமணமான வேலைக்குப் போகும் பெண்களுக்கோ வாழ்க்கை முழுவதுமே தொழிற்கூடம் வோலவே மோசமாகி விடுகிறது.




No comments:

Post a Comment