குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் வேலையை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்:
1. பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு
2. குழந்தைகளை வளர்த்தெடுத்தல்
3. நல்ல கருத்துக்களுடன் ஒழுக்கமாக வளர்த்தெடுத்தல்.
முதலாளித்துவச் சமூகத்திலும் கூட தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளுக்காக அரசே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. முதலாளித்துவச் சமூகத்திலும் கூட தொழிலாளர்களின் தேவைகள் ஒருசில ஏற்கப்பட்டு விளையாட்டுத் திடல்கள், மழலையர் பள்ளிகள், விளையாட்டுக் குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொள்கிறார்களோ, ஒருங்கிணைந்து செயற்படுகின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு குழந்தையின் வளர்ப்பிலிருந்து குடும்பம் விடுவிக்கப்படுகின்றது.
ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களில் பலவற்றை ஈடேற்றிக் கொண்டே செல்வதற்கு முதலாளித்துவச் சமூகம் அஞ்சுகிறது ; அதாவது, குடும்பம் சிதையும் என்று அதற்குத் தெரியும். பழைமையில் பெண் ஓர் அடிமை; மனைவி - குழந்தைகளின் பராமரிப்புக்கு கணவரே பொறுப்பு; அப்படிப்பட்ட பழைய குடும்ப முறையே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான உணர்வை இறுக்கித் திணறடிக்க வல்லது என்றும் உழைக்கும் ஆண், பெண்களிடையே எழுந்து வளரும் புரட்சி உணர்வைப் பலமிழக்க வைக்கும் என்றும் முதலாளிகள் நன்கு அறிவார்கள்.
குடும்பப் பராமரிப்பிற்காகவே உழைப்பாளர்கள் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பசியால் வாடும்பொழுது முதலாளியின் எத்தகைய கொடுமையான நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெற்றோர் அடிபணிந்து விடுகின்றனர். கல்விக் கடமையை சமூகத்தின் கடமையாக அரசின் பொறுப்பாக மாற்றுவதற்கு முதலாளித்துவ அமைப்பால் முடியவில்லை; ஏனெனில் உடைமையாளர்களான முதலாளிகள் இதை எதிர்க்கின்றனர். வளரும் தலைமுறையின் வாழ்விற்கு சமூகக் கல்வியானது மிகவும் அடிப்படைத் தேவை எனக் கம்யூனிசச் சமூகம் கருதுகிறது தங்களுக்குள் ஓயாது சண்டை போட்டுக் கொண்டு குறுகிய அற்பவாத உலகத்தில் மூழ்கி தன் குழந்தைகள் மீது மட்டும் அக்கறை கொண்டு செயற்படும் பழைய குடும்ப அமைப்புமுறை வேறொரு புதிய மனிதனுக்குக் கல்வியளிப்பதைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. நல்ல ஆசிரியரின் கண்காணிப்பில் விளையாட்டு மைதானம், பூங்காக்கள் மற்றும் வீட்டில் தன் நாளின் பெரும்பகுதியைச் செலவிடும் குழந்தைகளுக்கு மற்றொருபுறம் ஒற்றுமை, தோழமை, ஒருவருக்கொருவர் உதவும் மனப்பாங்கு மற்றும் சமூகத்திற்கு விசுவாசமாயிருக்க
போன்ற குணங்களுடைய ஒரு பொதுவுடைமைவாதியாக வளர்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவேண்டும்.
குழந்தை வளர்ப்பு, கல்வி இரண்டும் சமூகத்தால் பொறுப்பேற்கப்பட்ட பிறகு பெற்றோர்களது கடமையாக இனி மீதம் என்னதான் இருக்கும்? சீலையைப் பற்றிக் கொண்டு தளர்நடை இட்டு நடைபயிலும் பச்சிளங்குழந்தைக்கு தாயின் அரவணைப்பு தேவைப்படுகின்றது என்று நீங்கள் பதில் சொல்லக்கூடும். இங்கும் கூட இத்தகைய உழைக்கும் தாய்க்கு உதவ சோவியத் அரசு காத்திருக்கிறது. ஆம், எந்தப் பெண்ணும் இனி தனித்து விடப்படமாட்டார். கைக்குழந்தையைக் கொண்டுள்ள எந்தப் பெண்ணாயிருந்தாலும், மணமானவரோ மணமாகாதவரோ யாராயினும் தங்களின் வேலையினூடாகவே குழந்தைகளைப் பேணிக்காக்க வசதியாக தொழிற்கூடங்களுக்கு அருகில் தாய் சேய் நலவிடுதிகளையும் மழலையர் காப்பகங்களையும் இன்னபிற மையங்களையும் ஏற்படுத்தி உழைக்கும் மக்களின் அரசான சோவியத் அரசே உதவி வருகிறது.
பொதுவுடைமைவாதிகள் குழந்தைகளைத் தங்களிடமிருந்து பிரித்து விடுவார்கள் என்றோ, பால் குடிக்கும் குழந்தைகளைக் கூட தாயிடமிருந்து பறித்து விடுவார்கள் என்றோ அல்லது வேறு ஏதாவது வன்முறையின் மூலம் குடும்பத்தைச் சிதைத்து விடுவார்கள் என்றோ உழைக்கும் தாய்கள் பயப்பட வேண்டாம். அந்த மாதிரி எதுவும் நடக்கப் போவதில்லை . கம்யூனிசச் சமூகத்தின் குறிக்கோள் முற்றிலும் மாறுபட்டது. வீட்டுப் பொருளாதாரம் நசுங்கி அழிவதும், தனது குழந்தைகளின் நல்ல வாழ்விற்கும் கல்விக்கும் கூடப் பொறுப்பேற்க இயலாததால் இதுகாறும் பழைய குடும்ப முறையின் தூண்களாகக் கருதப்பட்ட இவை நொறுங்கி வீழ்வதையும் இதனால் சமூகத்தின் அடிப்படை அலகான பழைய குடும்பம் தகர்வதையும் கம்யூனிசச் சமூகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர்கள், குழந்தைகள் இருவருமே பாதிக்கப்படுகின்றனர். பாட்டாளி வர்க்கப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கம்யூனிசச் சமூகம் கூறிக் கொள்வது இதைத்தான்;
நீங்கள் இளமையோடு இருக்கிறீர்கள்! ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள்! மகிழ்ச்சியாயிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு! வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்! மகிழ்ச்சியைத் துறந்து ஓடாதீர்கள். முதலாளித்துவ உலகில் திருமணம் என்பது உண்மையிலேயே பெரிய துன்பச் சங்கிலியாக இருக்கிறது. அதற்காக, திருமணம் செய்து கொள்வதையோ, குழந்தைகள் பெற்றுக் கொள்வதையோ, நினைத்துப் பயப்படாதீர்கள்! சமூகத்திற்காகப் பணிபுரிய நிறைய உழைப்பாளர்கள் தேவை.
ஆகவே, ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் கம்யூனிசச் சமூகம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது. உங்களது குழந்தைகளது எதிர்காலம் குறித்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். உங்கள் குழந்தைகள் பசியையோ, குளிரையோ கட்டாயம் அறியாதவர்களாய்த்தான் இருப்பார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் கம்யூனிசச் சமூகம் பொறுப்பேற்றுக் கொள்வதுடன் தாய் - குழந்தை இருவருக்கும் பொருள் மற்றும் சமூக உதவிகளுக்கும் உத்தரவாதமளிக்கிறது. சமூகமே உணவிட்டு, வளர்த்து, கல்வியும் அளிக்கும்.
அதேநேரத்தில், எந்தப் பெற்றோர், தம்முடைய குழந்தைக்குக் கல்வி கற்பிப்பதில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றார்களோ அவர்களைத் தடுக்காது; கம்யூனிசச் சமூகம் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் கடமையை மட்டும் பெற்றோர்களிடமிருந்து, தன்வசம் எடுத்துக் கொள்ளுமே ஒழிய, பெற்றோர் என்ற விதத்தில் அவர்கள் பெற்றுள்ள மகிழ்ச்சியையல்ல. இவைதான் கம்யூனிசச் சமூகம் கொண்டிருக்கும் திட்டங்கள். குடும்ப அமைப்பை வன்முறை கொண்டு அழிப்பதாகவோ, குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து விடுவதாகவோ இவற்றைப் புரிந்து கொள்ளக் கூடாது.
பழைய குடும்ப அமைப்புமுறை ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. பழைய குடும்ப அமைப்பு சோவியத் அரசால் வலுக்கட்டாயமாக அழிக்கப் படவில்லை; ஆனால் குடும்பம் உலர்ந்து உதிர்வது தேவையின் பொருட்டே ஆகும். ஒரு தொழிலாளி சமூகத் தேவையுள்ளவராக, உற்பத்தித்தித்திறன் மிக்க உழைப்பாளியாக இயங்குவதிலிருந்து, குடுபம் கவனத்தைச் சிதறடிக்கிறது. அதனால் குடும்பப் பொருளாதரமானது இனியும் லாபகரமானதாக நீடிக்கப் போவதில்லை. எனவே குடும்பம் என்ற ஒன்று அரசுக்குத் தேவைப்படுவதாய் இல்லை. முன்னர் குடும்பத்தின் கடமையாயிருந்த குழந்தை வளர்ப்பு சமூகத்தின் வேலையாகி விட்டதால் இனி குடும்பமானது யாருக்கும் தேவையற்ற ஒன்றாகி விட்டது. முன்னர் ஆண் - பெண் இருவருக்கிடையில் நீடித்த பழைய உறவுமுறை புதிய வகைப்
பட்டதாக உருவாகி மாறி வருகின்றது. அந்த உறவானது அன்பான தோழமையான இரு உள்ளங்களுக்கிடையிலானதாக கம்யூனிசம் சமூகத்தின் இரு சம உரிமையுள்ள ஆண் - பெண்ணுக்கிடையிலானதாக சுயமாக, சுதந்திரமாக ஒருவரையொருவர் சார்ந்தும் வாழாத இருவருக்கும் இடைப்பட்ட உறவு முறையாக இருக்கின்றது. குடும்பம் என்ற பெயரில் பெண்ணைப் பிணைக்கும் அடிமைச் சங்கிலி இனியும் நீடிக்காது. குடும்பத்தில் இனி பெண் சமமாக நடத்தப்படுவாள். கணவனால் கைவிடப்பட்ட ஆதரவின்றி குழந்தைகளுடன் தவிப்போமே என்று எந்நேரமும் பயந்து வாழ்ந்து வந்த பெண் இனி நிம்மதியாக வாழலாம்.
கம்யூனிசச் சமூகத்தில் பெண் இனி தன்னைத்தானே நம்பி வாழ்வாளேயன்றி கணவனை நம்பி அல்ல. தன்னால் செய்யக் கூடிய வேலையைத் தேடிக்கொண்டு தன் வாழ்வாதாரத்தைச் சார்ந்து வாழ்வாள். தன் கணவனைச் சார்ந்து அல்ல. அவள் தன் குழந்தைகளைப் பற்றிக் கவலைக் கொள்ளத் தேவையில்லை. உழைப்பாளர்களின் அரசான சோவியத் அரசு அவர்களைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும். குடும்பத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வரதட்சணை, சீர்செய்தல் போன்ற பணத்தை மையமாகக் கொண்ட சடங்குகள் இனி திருமணத்தின்போது இருக்காது. திருமணமானது ஒருவரையொருவர் அன்பாகவும், நம்பிக்கையுடனும் நடத்துவதாக உள்ள இருவருக்கு இடைப்பட்டதான முறையாக அமையும். இவ்வாறு ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்ட, சமுதாயத்தைப் புரிந்து கொண்ட இருவருக்கும் இடையிலான திருமணம் அவர்களுக்கு முழுநிறைவையும், சந்தோசத்தையும் அளிக்கிறது. முன்பு அடிமைத்தனமாக இருந்த பெண் - ஆணுக்கு இடைப்பட்ட உறவுமுறைக்குப் பதிலாக விருப்பத்துடனும் தோழமையுடனும் பிணைக்கப்பட்ட சுதந்திரமான வாழ்க்கையை கம்யூனிசம் அவர்களுக்கு வழங்குகின்றது. தொழிலாளர்களின் வாழ்வியல் நிலைமை சீராக்கப்பட்டு பெண்களின்
வாழ்க்கைத் தரமும் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படாமல் பிரிவே இல்லாததாக புனிதமான திருமணங்கள் முடிவுக்கு வரும்.
மேலும் ஆணும் பெண்ணும் அடிப்படையில் நேர்மையான, சுதந்திரமான, விருப்பத்துடன் கூடி வாழும் திருமணங்கள் வளரும். இதனால் விபச்சாரம் முடிவுக்கு வரும். விபச்சாரம் எனும் இந்க்கேடு மனிதத்தின் மீதான கறை. பட்டினியால் வாடும் உழைக்கும் பெண்களின் மீதான இக்கொடுமை, தன் வேர்களை சந்தை உற்பத்தியிலும் தனிச் சொத்துடைமையிலும் கொண்டிருக்கிறது. இந்தப் பொருளாதார முறை, சுரண்டல் முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு கம்யூனிசப் பொருளாதார முறை வருகிறபோது பெண்ணை வைத்து நடத்தப்படும் இந்த வியாபாரம் உடனே மறையும். அதனால் பாட்டாளி வர்க்கப் பெண்கள், குடும்பம் மறையப் போவதான செய்தியைக் கேட்டு பயங்கொள்ளத் தேவையில்லை. பெண்களை வீட்டு அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும், அவர்களின் தாய்மையை எளிதாக்கும், விபச்சாரக் கொடுமைக்கு முடிவு கட்டும் புதியதொரு சமூகம் பிறப்பதை பெண்கள் வரவேற்க வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் பெண்கள் பழைய சொத்துடைமை வடிவத்தின் மனப்பாங்கைக் கைவிட வேண்டும். அதாவது, ''இவர்கள் என் குழந்தைகள். இவர்களை அரவணைக்கவும், பேணிக்காக்கவும் நான் எல்லாவிதத்திலும் கடமைப்பட்டுள்ளேன்; அவர்களோ உன் குழந்தைகள், அவர்களைப் பற்றி நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? அவர்கள் பசியோடிருந்தால் என்ன, குளிரில் வாடினால் என்ன? எனக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது'' என்பது போன்ற எண்ணங்கள் அறவே மறைந்துவிட வேண்டும். மாறாக, உழைக்கும் தாயானவள் தன் குழந்தைகளையும் மற்றவர்களது குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதை நிறுத்திவிடக் கற்றுக் கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள், சோவியத் ரசிய உழைப்பாளர்களின் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எப்படி தனிச்சிறப்பான கவனம் செலுத்தி தன் குழந்தைகளை மட்டும் வளர்க்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட தாயுள்ளம் பாட்டாளிகளின் குழந்தைகளுக்கெல்லாம் தன்னைத் தாயாக பாவித்துக் கொள்கிறதோ, எப்படி பெண்ணடிமைத் தனத்தை மையமாகக் கொண்ட திருமண உறவு மறைந்து, ஆணுக்கும் பெண்ணுக்கும் டையில் அன்பின் பிணைப்பினால் ஏற்படும் புதிய உறவு மலர்கிறதோ, அதுபோல் ஆண் - பெண் இருவருக்கிடையிலும் பால் சம்பந்தப்பட்ட வகையிலும் புதியதொரு உறவுமுறையே இந்த உழைப்பாளர்களது அரசுக்குக் தேவைப்படுகிறது. தனித்த சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்களுக்குப் பதிலாக உழைக்கும் மக்கள் அனைவரையும் கொண்ட மாபெரும் சமத்துவக் குடும்பம் உருவாகி வளர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்துப் பாட்டாளிகளும் ஆணும் பெண்ணும் தோழர்களாய் இருப்பார்கள். இந்தத் தோழமை உணர்வுதான் கம்யூனிசச் சமூகத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உறவாக இருக்கும். இந்தப் புதிய உறவுகள், முன்னர் முதலாளித்துவ, வணிகமயமாக்கப்பட்ட சமூகத்தில் உணரப்படாத அன்பின் அனைத்துப் பரிசுகளையும் மகிழ்ச்சியையும் தற்போது சுதந்திரமான சம உரிமையுள்ள கணவருக்கும் மனைவிக்கும் அளிக்கும்.
கம்யூனிசச் சமூகம் - குழந்தைகளை அறிவுக்கூர்மையும் உடல்நலமும் வலிமையும் கொண்ட மகிழ்ச்சி நிறைந்த இளைய சமூகமாக வளர்ப்பதையே அதுவும் அற்ப உணர்ச்சி பந்த பாசங்களிலிருந்து விடுபட்டவர்களாக வளர்ப்பதையே - விரும்புகிறது, புதிய மணப்பந்தங்கள் மூலம் - சமத்துவம், விடுதலை, தோழமை உணர்வுகள் நிரம்பிய உழைப்பவரை, ஆண் - பெண் விவசாயிகளை - மனித சமூகத்தை மறுகட்டமைப்பு செய்ய நாம் அழைக்கிறோம்; கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை அனைவருக்கும் பெற்றுத் தருவதற்காக, சமூகத்தையே முழுமையாக, நியாயம் மிக்கதாக உருவாக்க துணிவுடனும் நம்பிக்கையுடனும் உருவாக்க அழைக்கிறோம்,
இதோ சோவியத் ரசியாவிலும் உலகின் பல நாடுகளிலும் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியின் அடையாளமாக உயரே பறக்கிறது செங்கொடி, நூற்றாண்டுகளாக மனித சமூகத்தால் கனவு காணப்பட்ட விண்ணுலகம் இம்மண்ணுலகிலேயே எழுந்து மலருவதை இதோ செங்கொடி அறிவித்துக் கொண்டிருக்கிறது!
முற்றும்
இணைப்புகள்
கம்யூனிசமும் குடும்பமும்-3
கம்யூனிசமும் குடும்பமும்-2
கம்யூனிசமும் குடும்பமும்-1
No comments:
Post a Comment